'பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க' என்று வாழ்த்துவது தமிழர் மரபு. பெரியவர்கள் யாரையாவது வாழ்த்த வேண்டுமென்றால், ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என்று வாழ்த்துவார்கள். தமிழர்கள் திருமணச் சடங்கின்போது ‘ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழப் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என்று புதுமணத் தம்பதியரை வாழ்த்துவது ஒரு மரபாகக் கடைபிடிக்கப்படுகிறது. இந்த சொற்டொடர் நம் அனைவருக்கும் தெரியும்.
நம்மில் பலர் பதினாறு பேறுகளை மக்கட்பேறு என்று தவறாகப் புரிந்து கொள்ளுகிறார்கள். ஆனால், அவை மக்கட்பேறு அல்ல. வளமான வாழ்க்கைக்குத் தேவையான பதினாறு செல்வங்களையே நமது முன்னோர்கள் இப்படிக் கூறும் வழக்கத்தை வைத்திருந்தனர். ஆனால், அவர்கள் கூறும் பதினாறு செல்வங்கள் என்னென்ன என்பதை நம்மில் பெரும்பாலோர் யோசிப்பதே இல்லை. பதினாறு பேறுகளைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுவோம்.
‘துதிவாணி வீரம் விசயஞ் சந்தானம் துணிவுதனம்
அதிதானியஞ் சௌபாக்கியம் போக – வறிவழகு
புதிதாம் பெருமை யறங்குலநோ வகல்பூண்வயது
பதினாறுபேறும் தருவாய் மதுரை பராபரனே!’
துதி என்றால் புகழ், வாணி என்றால் கல்வி, வீரம் என்றால் மன உறுதி, விசயம் என்றால் வெற்றி, சந்தானம் என்றால் மக்கட்பேறு, துணிவு என்றால் தைரியம், தனம் என்றால் செல்வம், அதிதானியம் என்றால் அதிகமான தானிய வளம், சௌபாக்கியம் என்றால் சிறந்த இன்பம், போகம் என்றால் நல்ல அனுபோகம், அறிவு என்றால் ஞானம், அழகு என்றால் பொலிவு, புதிதாம் பெருமை என்றால் புதிதாக வந்து நாளுக்கு நாள் சேரும் சிறப்பு, அறம் என்றால் அறம் செய்யும் பண்பு, குலம் என்றால் நல்ல குடிப்பிறப்பு, நோவகல்பூண் வயது என்றால் நோயில்லா நீண்ட ஆயுள். இவையே பதினாறு பேறுகளாகும். இப்பாடலை இயற்றியவர் கவி காளமேகப்புலவர்.
இதுபோலவே அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியில், ‘கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்’ எனத் தொடங்கும் ஒரு பதிகத்தில் பதினாறு பேறுகளை வரமாகக் கிடைக்க அன்னை அபிராமியிடம் வேண்டுகிறார்.
‘கலையாத கல்வியும் குறையாத வயதுமோர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையுங் குன்றாத இளமையும் கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு துன்பமில்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே! ஆதிகட வூரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமியே!’
கலையாத கல்வி, நம்பிக்கையான நல்ல நட்பு, குறையாத வயது, குன்றாத வளமை, போகாத இளமை, பரவச பக்தி, நோயற்ற உடல், கலங்காத மனத்திண்மை, அன்பான மனைவி, தவறாத சந்தானம், மென்மேலும் வளரக்கூடிய புகழ், மாறாத வார்த்தை அதாவது வாய்மை, தடையற்ற கொடை, தொலையாத நிதி, கோணாத செயல், துன்பமிலா வாழ்வு முதலான பதினாறு பேறுகளையும் தந்தருள்வாய் என அபிராமி அன்னையிடம் வேண்டுகிறார். இந்தப் பதினாறு பேறுகளையும் பெற்ற ஒருவன் பாக்கியவானாகிறான்.