இரத்த அழுத்தத்தை கண்டுக்கொள்ளாமல் விடுவது இதயப் பிரச்னைக்கு வழிவகுக்கும். எனவே, இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். இரத்த அழுத்தத்தைப் போக்க மாத்திரை, மருந்துகளை அதிகம் நாடுவதை விடுத்து, இயற்கையாகவே குறைப்பதற்கான 7 வழிகள் என்னவென்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. உடல் எடையைக் குறைத்தல்: உடல் எடை அதிகரிப்பது இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும். எனவே, உடல் எடை குறைப்பது இரத்தஅழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க சிறந்த வழியாகும். அதிக உடல் எடையோடு இருப்பதனால் தூங்கும்போது மூச்சு திணறலை ஏற்படுத்தும். இதனால் இரத்த அழுத்தமும் கூடும். எனவே, உடல் எடையை குறைப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும்.
2. உடற்பயிற்சி: தினமும் உடற்பயிற்சி செய்வது இரத்த அழுத்தத்தைக் குறைக்க சிறந்த வழியாகும். தினமும் குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யவேண்டியது அவசியமாகும். நடை பயிற்சி, ஜாக்கிங், சைக்கிளிங், நீச்சல் பயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை செய்யலாம்.
3. உணவுமுறை: இரத்த அழுத்தத்தைக் குறைக்க உணவு முறை மிகவும் அவசியமாகும். சரியான உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் இயற்கையாகவே இரத்த அழுத்தத்தை குறைக்க முடியும். தானியம், பழங்கள், காய்கறிகள், குறைந்த கொழுப்புள்ள பால் வகைகள், பொட்டாசியம் சத்துள்ள உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்வது சிறந்தது.
4. உப்பு மற்றும் சோடியத்தை குறைக்க வேண்டும்: உப்பு மற்றும் சோடியத்தின் அளவை உணவில் குறைத்துக்கொள்வது இரத்த அழுத்தத்தை வெகுவாக குறைக்க உதவும். உப்புக்கு பதில் மசாலா போன்றவற்றை சுவைக்காகப் பயன்படுத்தலாம். பதப்படுத்தப்பட்ட உணவில் அதிகமாக உப்பு சேர்க்கப்பட்டிருக்கும். எனவே, அதைத் தவிர்ப்பது நல்லதாகும்.
5. போதை மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுதல்: குடிப்பழக்கம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். அது மட்டுமில்லாமல் குடிப்பழக்கம் இருந்தால் நோய்க்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகள் பயனில்லாமல் போகும். புகைப்பிடித்தலை நிறுத்துவதால் இரத்த அழுத்த பிரச்னை மட்டும் தீருவதில்லாமல், இதய சம்பந்தமான நோய்களைப் போக்கி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம்.
6. நல்ல தூக்கம்: தினமும் 7 முதல் 9 மணி நேரம் நல்ல தூக்கம் அவசியமாகும். தினமும் ஒரே நேரத்தில் தூங்கி எழுவதால் அது ஒரு பழக்கத்தை உருவாக்கும். தூங்குவதற்கு ஏற்ப உங்கள் அறையை வைத்துக்கொள்வது அவசியமாகும். பசியோடு அல்லது வயிறு முழுக்க சாப்பிட்டுவிட்டு தூங்கச் செல்வதைத் தவிர்க்கவும். தூங்கும் நேரத்திற்கு முன்பு காபி, சிகரட், ஆல்கஹால் போன்றவற்றை எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
7. ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கவும்: அதிகமான ஸ்ட்ரெஸ் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே, ஸ்ட்ரெஸ்ஸை தவிர்ப்பது நல்லது. தினமும் அதிகமான ஸ்ட்ரெஸ்ஸை உருவாக்கும் வேலைகளைச் செய்யாமல், சில குறிப்பிட்ட முக்கியமான வேலைகளைத் தேர்வு செய்து முடிப்பது நல்லது. ஸ்ட்ரெஸ்ஸை உண்டாக்கும் விஷயங்களில் இருந்து தள்ளியிருங்கள். தினமும் ஸ்ட்ரெஸ்ஸை போக்க யோகா, மெடிடேஷன் செய்வது நல்ல தேர்வாகும். இந்த 7 வழிகளை பின்பற்றி இயற்கையாகவே இரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும். முயற்சித்துதான் பாருங்களேன்.