

நம் இந்தியாவில் தங்கம் வேண்டாம் என்று சொல்கிற பெண்மணிகளை காண்பது அரிது. நம் வீட்டுப் பெண்கள் புன்னகையோடு இருக்க வேண்டுமென்றால் அவர்கள் பொன் நகை அணிந்து இருக்கவேண்டும்.
திருமணம் என்றால் நூறு சவரன், இருநூறு சவரன் என்றுதான் நகைகளை தேர்ந்தெடுக்கிறார்கள். தங்கம் அணிவது அவர்களது தரத்தை உயர்த்திக் காட்டும் என்பது ஏழை முதல் பணக்காரர் வரை மாறாத நம்பிக்கை.
இன்றைய டிரெண்டுக்கு தகுந்தாற்போல், இன்றைய இளம் யுவதிகளுக்கு பிடித்த வகையில் சின்ன சின்ன நகைகளை புதிய டிசைன்களில் நகை கடைக்காரர்கள் வெளியிட்டு கொண்டே இருக்கின்றனர்.
மேலும் மக்கள் கால மாற்றத்திற்கு ஏற்ற மாதிரி ETF, அரசின் தங்க பத்திரங்கள் (Sovereign Gold Bonds), மற்றும் டிஜிட்டல் தங்கம் போன்ற புதிய முறைகளில் முதலீடுகளில் கவனம் செலுத்துவதாலும் தங்கத்தின் விலை மேலே பறந்துகொண்டு இருக்கிறது. முதலீடு அதிகரித்ததால், நகை வாங்குதல் மட்டுமல்லாமல் மற்ற வழிகளிலும் தேவை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் தங்கம் பல மாற்றங்களை கடந்து, பல சிக்கலான பாதைகளையும் சந்தித்தாலும் அது உயரத்தில் ஜிவ்வென்று பறந்துகொண்டே இருக்கிறது.
1964 ஆம் ஆண்டு 10 கிராம் தங்கம் சுமார் ₹63 இருந்தது. 2026 ஜனவரி மாதத்தில் அது சுமார் ₹95,000 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரு சவரன் நகை ஒரு லட்சத்தையும் தாண்டிக் கொண்டு சென்று கொண்டே இருக்கிறது. எவரெஸ்ட் உச்சியை தொட்டுவிடும் போல இருக்கிறது.
அமெரிக்காவில் டிரம்ப் விதித்த வரியை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்ததும், பின்னர் புதிய வரிகள் விதித்ததும் காரணமாக, தங்கம் மேலும் மேலும் விலை உயரும் என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
இதே டிரெண்ட் தொடர்ந்தால் ஒரு கிராம் தங்கம் விலையே ஒரு லட்ச ரூபாய் வரை கூட போகலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எளிய நடுத்தர மக்களுக்கு ஒரு அவசர செலவுக்கு வரப்பிரசாதமாக அமைந்த தங்கம், இன்று வாங்கவே முடியாத உச்சத்தில் சென்று கொண்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் எந்த உச்சிக்கு போனாலும் சரி, நகை வாங்குவதை நம் மக்கள் மறுக்கமாட்டார்கள். ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்கியே தீருவர்.
எவரெஸ்ட் உயரத்தை தொட்டாலும், தங்கத்தின் மீதான நம் மக்களின் நம்பிக்கையும் ஆசையும் குறையாது.