

சில நேரங்களில் அக்கம் பக்கத்தினருக்கு சமைத்துக் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும். சில தருணங்களில் அவர்களையும், உறவினர், நண்பர்கள், திருமணம் நலங்கு என்று வீட்டிற்கு அழைத்து விருந்தோம்பல் செய்ய வேண்டிய சூழல்கள் ஏற்படும். அந்த மாதிரியான தருணங்களில் அடுக்களைக்குள் புகுந்தால் எதை சமைக்கலாம், அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பது தெரியாமல் தடுமாறுவோம். அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன? எப்படி செய்தால் முறையாக இருக்கும் என்பதை இப்பதிவில் காண்போம்.
பேசுங்கள்:
நாம் விருந்தினர்களை அழைக்கும்பொழுது அவர்களிடம் சிறிது நேரம் அமர்ந்து என்னென்ன காய்கறிகள் பிடிக்கும், எத்தனை மணிக்கு சாப்பிடுவீர்கள்? எந்த மாதிரியான உணவை விரும்பி சாப்பிடுவீர்கள், குறிப்பாக எதையெல்லாம் சாப்பிட விரும்ப மாட்டீர்கள் என்று அனைத்தையும் தெரிந்துகொண்டு வந்து சமைத்து பரிமாறினால் நமக்கு சமைக்கும்பொழுது டென்ஷன் வரவே வராது. சமைப்பதும் படு சீக்கிரமாக முடிந்துவிடும். அவற்றை அழகழகாக பாத்திரங்களில் எடுத்து வைத்துவிட்டு, அவர்களின் வருகைக்காக காத்திருக்கலாம் அல்லது உணவை எடுத்துச்சென்று கொடுக்கலாம்.
இதையெல்லாம் கேட்க சங்கடப்பட்டுக்கொண்டு, இதை எல்லாம் கேட்டால் அவர்கள் நம்மைப் பற்றி தவறாக நினைத்து விடுவார்களோ என்று நமக்குள் நாமே ஒரு கற்பனையை வளர்த்துக் கொண்டு, 'நினைப்பு பிழைப்பைக் கெடுக்கும்' என்பார்களே அப்படி, நமக்குத் தெரிந்ததை எல்லாம் சமைத்து வைத்தால் சாப்பிடுபவர்களுக்கு திண்டாட்டம்தான்.
மேலும் அவர்களுக்குப் பிடிக்காததை நாம் சமைத்து விட்டோமே என்று சாப்பிடும்படி ஆகிவிடுகிறது. இதனால் உணவை விரும்பி சாப்பிட முடியாமல் போகிறது. நமக்கும் அப்பொழுதுதான் அடடா அப்பொழுதே விவரமாகக் கேட்டு வைத்திருக்கலாமே என்ற எண்ணமும் மேலோங்கும்.
நின்று பரிமாறுங்கள்:
மேலும் இப்பொழுது எல்லாம் சமைத்து டைனிங் டேபிளில் வைத்து விடுகிறார்கள். உங்கள் வயிற்றுக்குத்தானே சாப்பிடுகிறீர்கள். நன்றாகப் போட்டு சாப்பிடுங்கள் என்று கூட கூறுபவர்கள் உண்டு. அப்படி இல்லாமல் அவர்கள் அருகில் நின்று பரிமாறினால் திருப்தியாக சாப்பிடுவார்கள். விரும்பிய பதார்த்தங்களை முதல் முறையாக வீட்டிற்கு வருபவர்களாக இருந்தால் கேட்க அச்சப்பட்டு கொண்டு பரிமாறியதை மட்டும் சாப்பிட்டு எழுந்து விடுவார்கள். அப்பொழுது வீட்டுப் பெண்மணிகள் அருகில் இருந்து குறிப்பறிந்து பரிமாறினால் சாப்பிடுபவர்கள் சங்கோஜப்பட மாட்டார்கள்.
பாத்திரம் நிறைந்து இருக்கட்டும்:
விருந்தினருக்கு பரிமாறும் பாத்திரங்களில் உணவு பதார்த்தங்கள் குறைய குறைய அதிகமாக நிரப்பிவிடுங்கள். அப்பொழுதுதான் மற்றவர்களுக்கும் இருக்கிறது, நாமும் நன்றாகச் சாப்பிடலாம் என்று பிரியமுடன் சாப்பிடுவார்கள். பாத்திரங்களில் குறைவாக இருந்தால் எல்லோருக்கும் வேண்டும் என்று தனது சாப்பாட்டை குறைத்துக் கொண்டு விடுவார்கள். ஆதலால் உணவு பதார்த்தங்கள் பாத்திரங்களில் நிரம்பி வழியட்டும்.
பெரியோர்களுக்கும் பங்கு:
வீட்டிற்கு வந்த விருந்தினர்கள் சாப்பிட்டு ,அவர்களை வழி அனுப்பும் பொழுது, அவர்கள் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களுக்கும் உணவுப் பதார்த்தங்களை சின்ன சின்ன டப்பாக்களில் போட்டு அவர்களுக்கும் கொடுக்குமாறு நலம் விசாரித்து கூறி அனுப்புங்கள். இதனால் வீட்டில் உள்ள பெரியவர்கள் மனமகிழ்ந்து நம்மையும் நினைக்கிறார்களே என்று பாசம் பொங்க வாழ்த்துவார்கள்.
மேலும் விருந்துக்கு வந்தவர்கள் வீட்டிற்குச் சென்று பெரியவர்களுக்கு சமைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படாது. முழுவதுமாக நல்ல விருந்தோம்பல் செய்த திருப்தி செய்தவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் கிடைக்கும். அதுதானே விருந்தோம்பலின் விசேஷம். இதைக் கையாளுங்கள். கலக்கலாய் இருந்தது விருந்து என்று உங்களைப் போற்றுவார்கள்.