இங்கிதம் எங்கும் எதிலும் தேவை!

இங்கிதம் எங்கும் எதிலும் தேவை!

ங்கிதம் தெரியாமல் திடுதிப்புனு உங்க சிநேகிதங்க நாலு பேரு வந்து நிக்கறாங்களே! முன்கூட்டியே வாட்ஸ் அப்போ, ஃபோனோ போட்டுச் சொல்லியிருக்கலாமில்ல!

மனைவி, கணவனை உள்ளே கூட்டிப்போய் இவ்வாறு முணுமுணுப்பது வழக்கம்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்குச் செல்கையில்கூட இப்படித்தான், “நம்ப ஆளுங்கதானே! ஒன்றும் சொல்ல மாட்டாங்க!” என்று சிலர் இங்கிதமின்றி போவதுண்டு.

இங்கிதமென்ற சொல்லிற்கு சரியான அர்த்தமில்லை யென்றாலும், யாரையாவது குற்றம் சாட்டவோ, பாராட்டவோ வேண்டுமெனில் இந்த ‘இங்கிதம்’ தன்னையறியாமலேயே வந்துவிடுகிறது.

பிறரைப் பற்றி மற்றவர்களிடம் அநாவசியமாகப் பேசுவது;

இரண்டு நபர்கள் முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் எல்லாம் தெரிந்த மாதிரி மூக்கை நுழைப்பது;

அவசரமாக வெளியே கிளம்பும் நேரம், நண்பரோ, பக்கத்து வீட்டுக்காரரோ வந்து கதை பேச ஆரம்பிப்பது.

இப்படி எல்லாமே இங்கிதமற்ற செயல்கள்.

இப்போது தெரிந்தவர்கள் வீடுகளுக்கு இங்கிதம் தெரியாமல் விருந்தினர்களாகவோ; வேறு வேலை காரணமாகவோ செல்பவர்களைக் குறித்துப் பார்க்கலாமா?

எனக்குத் தெரிந்த குடும்பத்தினர் (மொத்தம் 5 பேர்கள்), அவர்களுடைய உறவினர் வீட்டிற்கு, முன்கூட்டித் தகவல் அளிக்காமல், சர்ப்ரைஸாக செல்ல, அங்கே கதவில் பூட்டுத் தொங்கியது. பக்கத்து வீட்டில் விசாரிக்க, “உறவினர்கள் அர்ஜென்ட்டாக, 10 நாட்கள் வெளியூர் போயிருப்பதாக” பதில் வந்தது. பின்னர் இவர்கள் ஹோட்டலில் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு ஊர் திரும்பினர். ஒரு வாரப் பயணம் 2 நாட்களில் முடியக் காரணம் ஹோட்டல் செலவு கையைக் கடித்ததுதான். உறவினர் வீட்டுத் தங்கவென்றால் செலவு கம்மியாகி இருக்கும்.

சில நேரங்களில் அலுவலக வேலை அல்லது சொந்த வேலை நிமித்தம் உறவினர் அல்லது நண்பர் வீடு சென்று தங்க நேரிடுகையில், திடீரென வந்ததற்கான காரணம், நிலைமை ஆகியவைகளைக் கூறி “தொந்தரவிற்கு மன்னிச்சுக்குங்க. இரண்டு நாட்களில் வேலை முடிந்து கிளம்பிவிடுவதாக வெளிப்படையாக கூறினால், அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

இதேபோல் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வெளியூரில் வேலை இருக்கும் பொருட்டு, அங்கே 3 – 4 பேர்களைத் தெரிந்திருந்தால், ஒரே நபர் வீட்டில் டேரா போடாமல், எல்லார் வீடுகளுக்கும் சென்று ஒன்றிரண்டு நாட்கள் தங்கினால் இரு தரப்பினருக்கும் சரியாக இருக்கும். ஹோட்டல் செலவு மிச்சப்படும். தவிர, வேலை முடிந்து வருகையில் பழம், பிஸ்கட் போன்றவைகளை வாங்கி வந்து தங்குகின்ற வீட்டுக் குழந்தைகளக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும்.

நம் வரவை முன்கூட்டியே தெரிவித்தால், உறவினர் களாகட்டும்; நண்பர்களாகட்டும், அதற்குத் தக்க அட்ஜஸ்ட் செய்துகொள்வார்கள். தங்கள் Routing வேலை கெட்டுப் போவதாக அவர்கள் எண்ணாதவண்ணம் இங்கிதமாக நாமும் செயல்படுவது அவசியம். மதிப்பாகவும் இருக்கும்.

வெளிநாடுகளில் மட்டுமல்ல; இப்போது இந்தியாவிலும், ஏன் அடுத்த வீட்டிற்குப் போக வேண்டுமென்றால் கூட, அவர்களது செளகரியத்தை வாட்ஸ்ஆப் அல்லது ஃபோன் மூலம் கேட்டுத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. தொலைத்தொடர்பு சாதனங்களின் வரவால் காலம் மாறிப்போச்சு.

பிறர் வீட்டுச் சூழ்நிலை, மனநிலை தெரியாமல் திடீரென சென்று நிற்பது சரியில்லை. இல்லையென்றால், ஹோட்டல் அல்லது தங்கும் விடுதிக்குச் செல்ல வேண்டும்.

நட்புகளையும், உறவுகளையும் பாதுகாத்து வைத்துக் கொள்வதும் ஒரு கலையாகும். எல்லாவற்றையும் சரியான முறைப்படி செய்தால் அவைகள் நீடிக்கும்.

எந்தக் காரியமானாலம், இங்கிதமறிந்து செய்வது வயலுக்கு நீர் பாய்ச்சுவது போல. அந்த ஆளுக்கு இங்கிதம் தெரியும். நல்லவங்க! என்று கூறத்தக்க நடப்பது மிகவும் அவசியம்.

“ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை

ஆஅதும் என்னு மவர்”.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com