
இப்போதெல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்களை சுமையாகக் கருதி முதியோர் இல்லங்களில் விட்டு விடுகின்றனர் பலர்.
முதியோர் தினத்தை மட்டும் வருடா வருடம் கொண்டாடுகின்றனர். அதில் என்ன பெருமை..? முதியோரை மதிப்பதுதானே சிறப்பு.
அவர்கள் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கியவர்கள். அதற்காக அவர்கள் உழைத்த உழைப்பையும் பட்ட சிரமங்களையும் சற்று சிந்தித்துப் பார்த்து வீட்டிலேயே அவர்களை வாழ வைப்பதுதானே கடமை, பொறுப்பு நன்றி செலுத்துதல் எல்லாம் ..
பெரிதாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. சில நடைமுறைகளை கடைப்பிடித்தாலே போதும். பணம் பொருட்கள் எதையும் விட அவர்கள் எதிர்பார்ப்பது பாசத்தையும் என் சொற்களையும் தான். இதை நம்மால் எளிதாக தரமுடியுமே.
குழந்தைகளை தாத்தா, பாட்டி, மாமா, அத்தை என்று உறவு முறைகளோடு அன்போடு பழகவிடலாம்.
வயதானவர்களை பெருசு, கிழம் என்றெல்லாம் கேலி செய்து மனம் புண்பட வைப்பதை தவிர்க்கலாம்.
அவர்களும் இளைஞர்களாக இருந்து, முதுமை எய்தியவர்கள்தான்.. நாமும் அவர்களைப்போல ஒருகாலத்தில் முதியவர்களாக போகிறோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டியது அவசியம்.
வயதானவர்கள் தங்கள் கடந்த கால வாழ்க்கை பற்றி குடும்பத்தாருடன் பகிர்ந்துகொள்ள விரும்புவார்கள். அதை அறுவை என்று புறக்கணிக்காமல் அறிவுரை என்று ஏற்றுக்கொண்டால், நல்ல அனுபவ பாடங்கள் கற்றுக்கொள்ளலாம்.
பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களை 'சும்மாதானே இருக்கீங்க' எனும் வார்த்தைகள் மனதைக் காயப்படுத்தும்.
பல வருடங்கள் குடும்பத்திற்காக உழைத்து, சம்பாதித்து விட்டு, தற்போது ஓய்வு எடுப்பதுதானே முறை. அது சும்மா இருப்பது அல்ல.
அதற்காக எந்த வேலையும் செய்ய முடியாதவர்கள் என்று அவர்களை ஒதுக்கி வைக்காமல், அவர்களால் முடிந்த சின்ன சின்ன வேலைகளை செய்யவிடலாம். அவர்களின் உடலும், உள்ளமும் உற்சாகம் அடையும்.
குடும்ப நிகழ்ச்சிகளில், பண்டிகைகளில் பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டுப் பெறலாம். ஆசைகளும், வாழ்த்தும், அன்பும் கிடைக்கும்.
உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களுக்கு அவர்களையும் அழைத்துச் சென்றால், பலருடன் பேசிப்பழக அவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
கோயில்களுக்கு அழைத்துக் கொண்டு போனால் அவர்களை மன அமைதி பெறுவார்கள்.
குடும்ப உறுப்பினர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது பெரியவர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அரசியல், சினிமா, விளையாட்டு எதுவானாலும் அந்தப் பேச்சில் அவர்களையும் கலந்து கொள்ள செய்யலாமே.
வயது முதிர்ந்தவர்கள் அணிந்து கொள்வதற்கு சௌகரியமான, எளிய உடைகளை அவர்கள் விருப்பப்படி வாங்கி கொடுக்கலாம். ஆடம்பரமான ஆடைகளையோ, ஆபரணங்களையோ அவர்கள் விரும்ப மாட்டார்கள்.
வயதாகிவிட்டால் ஜீரண சக்தி குறையும். பற்கள் பலவீனமடையும். அவர்கள் மென்று சாப்பிடக்கூடிய வகையில் உணவு தயாரித்து தரலாம்.
முதுமை காரணமாக வரும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை அடிக்கடி மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று உடல் நிலையை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.
அவர்கள் படிக்க விரும்பும் விரும்பும் பக்திப் புத்தகங்கள், பத்திரிகைகள் வாங்கித் தரலாம்.
டிவியில் அவர்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை பார்க்கச் செய்யலாம்..
உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பவர்கள் வீட்டில் தனியாக இருக்க நேர்ந்தால், தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது அவசியம்.
நாமும் ஒரு நாள் முதியவர்கள் ஆவோம், நமக்கு வயதாகும் என்ற எண்ணம் மனதில் இருந்தால் போதும். முதியோர் இல்லங்களை மூடிவிடலாம். அவர்களுக்கு நாம் துணை என்றால், நமக்கு அவர்களின் அன்பு துணை.
வீட்டு பெரியவர்களுக்கு
இப்போது நடப்பது இயந்திர யுகம், கணினி காலம். பழக்க வழக்கங்கள், நடைமுறைகள் எல்லாமே மாறிவிட்டன, மாறி வருகின்றன என்பதை பெரியவர்களும் உணர்ந்துகொண்டு இளைய தலைமுறையினரோடும், குடும்பத்தாருடனும் காலத்துக்கு ஏற்ப ஒத்து வாழ்ந்தால், முதுமையிலும் மனம் இளமையாக இருக்கும்.