
இந்தியாவில் பண்டைய காலங்களில் ஒரு குருவிடம் சென்று அவர் கற்றுத்தரும் வழிகளில் பாடம் கற்றுத் தெளிவு பெற்று வந்தனர் குழந்தைகள். இம்முறையை 'குருகுலக் கல்வி' என்று அழைத்து வந்தனர். குருகுலக் கல்வி எவ்வாரெல்லாம் சிறப்புற்றிருந்தது, அதிலிருந்து எதையெல்லாம் இன்றைய கல்வி முறையில் நாம் பின்பற்றி வருகிறோம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. குருகுல மாணவர்கள் பிரம்ம முகூர்த்தத்தில், அதாவது சூரிய உதயத்திற்கு சுமார் 90 நிமிடங்களுக்கு முன், எழுந்துகொள்ள பயிற்சியளிக்கப்பட்டனர். அதிகாலையில் நாளைத் துவக்குவது, சிக்கலான பாடங்களையும் சிறந்த முறையில் கவனித்து நினைவில் வைத்துக்கொள்ள அவர்களுக்கு உதவியது.
இதையே நவீன கால நியூரோசயின்ஸ் (neuroscience) உறுதிப்படுத்துகிறது.
2. பாடங்களை வாய்விட்டு சத்தமாக கத்திப் படிப்பது மட்டுமே அவைகளை நினைவில் வைத்துக் கொள்ள உதவும் என்பதில்லை. தாள நயத்தோடு ஒத்திசைந்து, ராகத்தோடு பாடங்களை படிப்பதே நினைவில் நிற்கும். குழுவாக அமர்ந்து கோஷமிட்டுப் படிப்பது மனதில் நீண்டகாலம் நிலைத்து நிற்கும் என்றொரு பொதுவான கருத்து நிலவி வந்தது அப்போது.
அதையே இப்போது ஆடியோ விஷுவல் வழியே இன்றைய மாணவர்கள் கற்று வருகின்றனர்.
3. குருகுல மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து பாடம் பயின்று வந்தனர். திறந்த வெளியை வகுப்பறையாக்கி கற்று வரும்போது கவனமும், மனத் தெளிவும் மேன்மையுற்றது. சில மணி நேரமாவது பசுமை சூழ்ந்த இடத்திலிருந்து கல்வி கற்பது மன அழுத்தத்தைக் குறைக்கவும் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவி புரியும்.
அந்தப் பழக்கத்தையே இப்போது இயற்கை சார்ந்த படிப்பறிவு என்கிறோம்.
4. குருகுலக்கல்வி முறையில் ஒரு ஆசான் ஒவ்வொரு மாணவனுக்கும் தனிப்பட்ட முறையில் கல்வி கற்றுக் கொடுத்து வருவார். இம் முறையில் ஒவ்வொரு மாணவனின் பலம் மற்றும் பலவீனம் அவருக்கு சுலபமாகத் தெரிய வரும். அதற்கேற்றபடி பயிற்சியை மாற்றியமைத்து அனைவரையும் சிறப்புறச் செய்து விடுவார்.
இன்றைய கால கட்டத்தில் ஒரு வகுப்பறையில் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்த்து கல்வியை கற்றுக்கொடுத்து வருகின்றனர். அவர்களில் மந்த புத்தியுள்ள மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சியளித்து (Coaching) வழிகாட்டி வருகின்றனர்.
5. குருகுல மாணவர்கள் ஸ்வாத்யாய (self study and repeated revision) முறையைப் பின்பற்றி, கற்றுக்கொண்டதை நினைவில் வைக்க பயிற்சி மேற் கொண்டனர்.
இக்காலத்தில் அடிக்கடி டெஸ்ட் வைத்து மதிப்பாய்வு செய்வதின் மூலம் மாணவர்கள் கற்றதை மறக்காமலிருக்க ஆசிரியர்கள் உதவி புரிகின்றனர்.
6. குருகுல மாணவர்கள் வேத ஆகம நெறிமுறைகள், தத்துவம் போன்றவற்றுடன் விவசாயம், சமையல் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான கலைகளையும் கற்றுக்கொண்டதுடன் நின்றுவிடாமல் அவற்றை தினசரி வாழ்வில் நடை முறைப்படுத்தியும் வந்தனர்.
அதுவே தற்காலத்தில் கற்றுக்கொண்டதை செயல் முறைப்படுத்தி அனுபவம் பெறவும் மாணவர்களுக்கு தூண்டுகோலாக அமைகிறது.
7. குருகுலக்கல்வி முறையில் கற்றறிந்து வாழ்வில் முன்னேற்றம் பெற முயல வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தி கற்று வந்தனர். அங்கு போட்டியோ, தர நிர்ணயமோ இருந்ததில்லை. ஒவ்வொரு தனிப்பட்ட மாணவரின் வெற்றியும் முன்னேற்றமும் குறிக்கோளாய் இருந்தது.
இதுவே தற்போதுள்ள மாதிரிப் பள்ளிகள் (Model Schools) தோன்றுவதற்கு உத்வேகம் அளித்தது எனலாம்.