இன்றைய காலக்கட்டத்தில் தொழில்நுட்ப சாதனங்கள் நம் வாழ்வில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. வேலை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக ஊடகங்கள் என பல காரணங்களுக்காக நாம் நாள்தோறும் லேப்டாப், ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற மின்னணு சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துகிறோம். இதனால், நாம் தெரியாமலே ஒரு தவறான உடல் நிலையில் நீண்ட நேரம் இருக்கிறோம். இதன் விளைவாக, “டெக்ஸ்ட் நெக் சிண்ட்ரோம்” (text neck syndrome) எனப்படும் கழுத்து வலி போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இது சமீபகாலத்தில் பெரும்பாலான இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களை பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகி வருகிறது. இந்த நிலையால் என்ன பாதிப்புகள் ஏற்படலாம்? அதற்கான எளிய தீர்வுகள் என்ன என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
டெக்ஸ்ட் நெக் சிண்ட்ரோம் (text neck syndrome) என்றால் என்ன?
ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தும் போது, நாம் கழுத்தை முன்னோக்கி வளைத்து, தலையை கீழே தாழ்த்துகிறோம். இதனால் சுமார் 30 கிலோ எடையை நம் கழுத்து தாங்க வேண்டிய நிலை வருகிறது. இவ்வாறு நீண்ட நேரம் தவறான நிலையில் இருக்கும்போது, கழுத்து மற்றும் மேல் முதுகு பகுதியில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதுவே டெக்ஸ்ட் நெக் சிண்ட்ரோம் என அழைக்கப்படுகிறது.
முக்கிய அறிகுறிகள் என்னென்ன?
லேசான முதல் கடுமையான கழுத்து வலியே இதன் ஆரம்ப கால அறிகுறியாகும்.
பின்னர், தோள்பட்டை பகுதியில் வலி, மேல் முதுகு வலி, கழுத்து சுழல்வதில் தடுமாற்றம், தலைவலி, இரத்த ஓட்ட குறைபாடு போன்றவை முக்கிய அறிகுறிகளாகும்.
வராமல் தடுப்பது எப்படி?
நேரான உடல் நிலை
ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப்பை கண்கள் நேராக பார்க்கும் உயரத்தில் வைத்துக்கொள்வது முக்கியம்.
அவ்வாறு கண்களை மேல் அல்லது கீழே பார்த்து வைக்காமல், உயரத்தில் வைத்திருக்கும்போது நேராகப் பார்வையிடுவதால் தசைகள் சோர்வடையாமல் பாதுகாக்க முடிகிறது.
ஓய்வு எடுப்பது
45 நிமிடத்திற்கு ஒரு முறை இடம் மாறி அமர்ந்து அல்லது சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்வதால், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்ததால் ஏற்படும் உடல் வலியைக் குறைக்க முடியும். இது முதுகு மற்றும் கழுத்து பகுதிகளில் ஏற்படும் கடுமையான அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
ஏற்றமான நாற்காலி
நாம் அலுவலகத்தில் அல்லது வேலை பார்க்கும்போது பின் பக்கம் சாயும் வசதியுள்ள நாற்காலியில் அமர்ந்து, முதுகை நிமிர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.
உடற்பயிற்சி தேவை
கழுத்து மற்றும் முதுகு பகுதிகளில் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்த, உடற்பயிற்சிகள் மற்றும் யோகா செய்யும் பழக்கத்தை கற்று கொள்வது மிகவும் முக்கியம். குறிப்பாக, கழுத்து பகுதிக்கு தேவையான ஸ்டிரெச்சிங் பயிற்சிகள் இதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பார்வை ஓய்வு
கண்களுக்கு ஓய்வு கொடுக்கப்படாமல் நீண்ட நேரம் லேப்டாப் அல்லது ஸ்மார்ட் போன்களை பார்ப்பதால், கண்கள் எளிதில் சோர்ந்து விடும். எனவே, கண்களுக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுத்து, இயற்கை சூழலை நோக்கி பார்ப்பதும் முக்கியம்.
டெக்ஸ்ட் நெக் சிண்ட்ரோம் என்பது சிறியதுபோல் தோன்றினாலும், தொடர்ந்து அலட்சியப்படுத்தினால், அது நாளடைவில் கடுமையான உடல் நல சிக்கல்களாக மாறக்கூடும். எனவே, தினசரி பழக்கவழக்கங்களில் சிறிய மாற்றங்களை கொண்டு வந்து, தொழில்நுட்ப சாதனங்களை பாதுகாப்போடு பயன்படுத்துவது அவசியம்.
இந்த வலிகள் நீண்ட நாட்களுக்கு நீடித்தால், உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறுவது சிறந்தது.