
நான் அன்றாடம் புழங்கும் சமையலறை சுத்தமாக இருந்தால் நமது ஆரோக்கியமும் கெடாது. அந்த காலத்தில் மாட்டுச்சாணம் கொண்டு சமையல் மேடையை மெழுகுவார்கள். காரணம் காற்றில் உள்ள கிருமிகளையும், விஷ வாயுக்களையும் அகற்றும் சக்தி மாட்டுச் சாணத்திற்கு உண்டு என்பதால்.
இன்று ரசாயனங்கள் சேர்ந்த கிளீனிங் உபகரணங்கள் வந்துவிட்டது. அப்படியும் நமது சமையலறைகள் சுகாதாரமாக இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான்.
கணவன் மனைவி இருவரும் பணிக்கு செல்லும் நிலையில் சமையலறை போர் முடிந்த யுத்த சாலைபோல் காய்கறி குப்பைகளுடன் அப்படியே இருக்கும். இதனால் அங்கு கொசுக்களும் கிருமிகளும் படையெடுக்க ஆரம்பிக்கும்.
இதை தவிர்த்து சின்ன சின்ன வழிமுறைகளால் சமையலறை சுத்தத்தை பேணி பாதுகாத்தால் நமது ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும் அதற்கான வழிகள் இதோ இங்கு.
1.வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு ஆகியவை அழுகும் தன்மை கொண்டதுடன் விரைவில் கொசுக்களை ஈர்த்துவிடும். ஆகவே தினம் காலை எழுந்ததும் ஏதேனும் அழுகி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அழுகியதை எடுத்துவிட்டு மற்றவற்றை காற்றோட்டமான இடத்தில் பரப்பி வைக்கவேண்டும்.
2. சமையலறை மேடையும் டைல்ஸ்ம் எண்ணெய் கறை படிந்து இருக்கும். அதை சுத்தம் செய்வது என்பது பெரும் தலைவலிதான். இருந்தாலும் வாரம் ஒருமுறை சுத்தம் செய்தே ஆகவேண்டும். எண்ணெய் கரையின் மேல் வினிகர் அல்லது சோடா மாவு, எலுமிச்சம் பழம் கலந்த கலவையை தடவிவிட்டு 10 நிமிடங்கள் 15 நிமிடங்கள் ஊறவைத்து பழைய கம்பி நார் கொண்டு தேய்த்தால் சுத்தமாகிவிடும்.
3. தற்போது பெரும்பாலான வீடுகளில் மரத்தினால் செய்யப்பட்ட மூடப்பட்ட செல்ஃபுகள் நிச்சயம் இருக்கும். காற்றோட்டமின்றி மூடியே இருப்பதால் அதில் இருக்கும் பொருட்கள் விரைவில் பூஞ்சை அல்லது வண்டு பிடித்துவிடும். ஆகவே மாதத்திற்கு ஒரு முறை மளிகை சாமான்களை எடுத்து பரப்பி காற்றோட்டமாக வைத்துவிட்டு பிறகு உள்ளே வைப்பது நல்லது.
4. அதிகம் உபயோகப்படுத்தப்படாத பாத்திரங்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றை அவ்வப்போது எடுத்து துடைத்து முடிந்தால் வெயிலில் காயவைத்து எடுத்து கவிழ்த்துவது நல்லது. துரு ஏறாது.
5. மூடப்பட்ட மர ஷெஃல்புகளில் நாப்தலின் உருண்டைகளை போட்டு வைப்பது பூச்சிகள் அண்ட விடாமல் தடுக்கும். முடிந்தால் வேப்பிலைகளையும் போட்டு வைக்கலாம்.
6. மிக்சி அதிக பயன்பாட்டுக்கு உடையதால் அதன் வேலை முடிந்ததும் தினம் தோறும் அதை துடைத்து மிக்ஸி ஜாரில் ஈரம் இன்றி கவிழ்த்து வைப்பது நல்லது. ஏனெனில் சரியாக கழுவவில்லை எனில் அதில் சேரும் பூஞ்சை கிருமிகள் வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும் . குறிப்பாக ரப்பர் வளையங்களையும் கழுவவேண்டும்.
7. தினம் சேரும் குப்பைகளை மூடிய கவர் கொண்டு கட்டி அன்றன்றே துப்புரவு பணியாளர்களிடம் சேர்த்து விடவேண்டும். இல்லையெனில் அந்த குப்பைகளில் உருவாகும் பாக்டீரியாக்கள் சமையல் அறை முழுவதும் விஷவாயு தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக நாப்கின்களை காகிதத்தில் சுற்றி தனியே போடவேண்டும்.
8. சிங்கில் பாத்திரங்களை நீண்ட நேரம் அப்படியே விடுவதால் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும். உடனுக்குடன் கழுவிக் கவிழ்த்துவதுடன் பயன்படுத்திய எலுமிச்சை தோல் கொண்டு துடைத்தால் சுத்தமாக இருக்கும்.
9. பிரிட்ஜ் முதல் கிரைண்டர் வரை எங்கும் தண்ணீர் தேங்காமல் உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக பிரிட்ஜ் பின் சேரும் கழிவு நீர் மீது கவனம் தேவை. அதிலிருந்தும் வரலாம் துர்நாற்றம்.
10. ஸ்வாமி அறை மட்டுமல்ல சமையல் அறையிலும் மூலிகை சாம்பிராணி புகையை பரவவிடுவதால் மனஅமைதியுடன் கொசுக்களையும் விரட்டலாம்.