
ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனித்துவமான திறமையுடன் பிறக்கிறது. பெற்றோர்களாகிய நாம், நம் பிள்ளைகளின் தனித்துவமான குணங்களை சிறு வயதிலேயே கண்டறிந்து, அதனை ஊக்கப்படுத்தி வளர்ப்பது அவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியம். அதிக மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே ஒரு குழந்தையின் திறமை என்று எண்ணுவது தவறு. படைப்பாற்றல், சிக்கல்களைத் தீர்க்கும் திறன், விளையாட்டுத் துறையில் ஆர்வம், கலைத்திறன் என பல்வேறு வடிவங்களில் குழந்தைகளின் திறமைகள் வெளிப்படலாம்.
உங்கள் குழந்தைகள் மற்றவர்களை விட சற்று வித்தியாசமாக இருக்கிறார்களா? சில குறிப்பிட்ட விஷயங்களில் அவர்கள் அசாதாரண திறமையை வெளிப்படுத்துகிறார்களா? அப்படியானால், உங்கள் குழந்தை ஒருவேளை படுசுட்டியாக இருக்கலாம். கூர்ந்து கவனித்தால், அத்தகைய குழந்தைகளிடம் சில பொதுவான பழக்கவழக்கங்களையும், குணாதிசயங்களையும் நாம் காண முடியும்.
அதிக கவனம் செலுத்துவது சுட்டிக் குழந்தைகளின் முக்கிய பண்புகளில் ஒன்று. அவர்களுக்குப் பிடித்தமான ஒரு விஷயத்தில் அவர்கள் முழுமையாக மூழ்கிவிடுவார்கள். நீண்ட நேரம் எவ்வித கவனச்சிதறலும் இன்றி ஒரு விஷயத்தில் ஆழ்ந்த கவனம் செலுத்தும் திறன் அவர்களிடம் இருக்கும்.
மேலும், அவர்கள் சிறந்த சிக்கல் தீர்க்கும் திறனைக் கொண்டிருப்பார்கள். புதிர் விளையாட்டுகளை எளிதாக முடிப்பதும், சவாலான விஷயங்களை ஆர்வத்துடன் எதிர்கொள்வதும் அவர்களின் இயல்பாகும். இளம் வயதிலேயே தர்க்கரீதியாக சிந்திக்கும் திறனும், புதிய தீர்வுகளை கண்டுபிடிக்கும் ஆர்வமும் அவர்களிடம் காணப்படும்.
அதுமட்டுமின்றி, சுட்டி குழந்தைகள் மிக விரைவாக மொழியை கற்றுக்கொள்வார்கள். அவர்கள் பேசும் வார்த்தைகளின் எண்ணிக்கை மற்ற குழந்தைகளை விட அதிகமாக இருக்கும். தங்களது வயதுக்கு மீறிய முதிர்ச்சியான பேச்சும், அதிகமான கேள்விகளும் அவர்களை தனித்து காட்டும். புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் அவர்களுக்கு எல்லையற்ற ஆர்வம் இருக்கும்.
ஏன், எதற்கு என்ற கேள்விகளை அவர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பார்கள். மேலும், பெரும்பாலான சுட்டி குழந்தைகள் மற்றவர்களை விட முன்னதாகவே வாசிக்கத் தொடங்கிவிடுவார்கள். புத்தகங்களின் மீது அவர்களுக்கு இயல்பாகவே ஒரு ஈர்ப்பு இருக்கும்.
நல்ல நினைவாற்றல் சுட்டி குழந்தைகளின் மற்றொரு முக்கியமான அடையாளம். அவர்கள் கேட்ட உரையாடல்களை அப்படியே நினைவு கூறும் திறன் பெற்றிருப்பார்கள். அவர்கள் நினைவில் வைத்திருக்கும் விஷயங்கள் மிகவும் துல்லியமானதாக இருக்கும். இப்படிப்பட்ட குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த பெற்றோர்களாகவும், அறிவாளிகளாகவும் திகழ வாய்ப்புள்ளது.
உங்கள் குழந்தை படுசுட்டியாக இருந்தால், அது உங்களுக்கு கிடைத்த ஒரு வரம். அவர்களின் தனித்துவமான திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு ஏற்ற சூழலை அமைத்து கொடுப்பது உங்கள் கடமை. அவர்களின் ஆர்வத்தை ஊக்கப்படுத்துவதன் மூலம், அவர்கள் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைக்க முடியும்.