வாழ்வில் முழு திருப்தி அடைந்த மனிதர் யாராவது இருக்கிறாரா என்று கடவுளுக்கு ஒரு சமயம் சந்தேகம் வந்தது. அவர் பூமிக்கு இறங்கி வந்தார். முதலில் ஒரு பச்சிளம் குழந்தையைப் பார்த்தார். அந்தக் குழந்தை, தனது தாய் தந்த பால் போதாமல் திருப்தியின்றி மேலும் வேறு எதற்கோ அழுது அடம் பிடித்தது. அடுத்து, கடவுள் வயது முதிர்ந்த ஒரு ஏழை முதியவரைப் பார்த்தார். அவருக்கோ, வயிற்றில் பசி இல்லை. எனினும், யாரோ ஒருவர் தந்த சாப்பாட்டில் திருப்தி இல்லை என வேறு சாப்பாட்டிற்காக தெருவில் இறங்கி நடந்து கையேந்த ஆரம்பித்தார். இப்படி பல்வேறு நிலைகளில் உள்ள எந்த ஒரு மனிதனும் முழுத்திருப்தியுடன் வாழ்வதாக அவருக்குத் தெரியவில்லை.
இறுதியாக, ஒரு சிறுவனைப் பார்த்தார். அந்த சிறுவனின் கண்களில் படும்படி ரூபாய் நோட்டு ஒன்றை போட்டார். சிறுவனும் அந்த ரூபாய் நோட்டை எடுத்தான். அதை அப்படியே கொண்டுபோய் இறைவன் குடியிருக்கும் கோயில் உண்டியலில் போட்டுவிட்டு சென்றான். வழியில் கடவுள் அவனைப் பார்த்து கேட்டார், "என்ன தம்பி, உனக்காகத்தான் இந்த ரூபாய் நோட்டை போட்டேன். நீ அதை எடுத்து எனக்கே திரும்பக் கொடுத்து விட்டுச் செல்கிறாயே? என்றார்.
அதற்கு அந்தச் சிறுவன், "ஐயா எனக்கு கை, கால் இருக்கிறது உழைக்க. என்னைக் காப்பாற்ற எனது தாய் தந்தை இருக்கிறார்கள். எனக்கு மூன்று வேளை உணவும் உடுக்க உடைகளும், இருக்க ஒரு சிறு குடிசையும் இருக்கிறது. இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்? அதுவும் யாரோ ஒருவருடைய பணம் எனக்கெதற்கு?" என்று சொல்லிவிட்டு அவன் சென்று விட்டான். உண்மையில் உலகத்திலேயே மகிழ்ச்சியான பெரிய செல்வந்தன் இந்தச் சிறுவன்தான் என்று நினைத்தார் கடவுள்.
‘இந்தச் சிறுவனைப் போன்ற திருப்தியான மனிதர்களும் இங்கு உலா வருகிறார்கள். ஆனால், அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதுதான் சவால்’ என்று நினைத்துக் கொண்டு கடவுள் கருவறைக்குள் புகுந்தார்.
சிலரிடம் தேவைக்கு அதிகமாக பணம் இருந்தாலும் அவர்கள் எந்நேரமும் ஏதோ ஒன்றை நினைத்தவாறு மனக்கவலை, மன இறுக்கம், மன உளைச்சலுடன் இருக்கிறார்கள். இவர்கள் மனதளவில் எதைக் கொண்டும் திருப்தி அடைய மாட்டார்கள். இவர்களைப் பொறுத்தவரை இந்த உலகமே இவர்கள் காலடிக்கு வந்தாலும் அப்போதும் தொட முடியாத அடுத்த கிரகத்தை நினைத்து ஏங்கிப் புலம்புவார்கள்.
மகிழ்ச்சி என்பது தேடித்தேடி சேர்க்கும் உயிரற்ற பொருட்களில் இல்லை. உழைத்து சேர்த்த செல்வம் அளவுக்கு அதிகமாக இருந்தாலும் அது இறுதிக் காலத்தில் உடன் வராது. வாழ்க்கையில் திருப்தி இல்லாதவர்கள் எதிலும் சந்தோஷத்தை இழந்து விடுகிறார்கள். பேராசைக்கு மனதில் இடம் அளித்தால் அதுவே பேரழிவுக்கு காரணமாகி விடும்.
பொருளாதாரம் மட்டுமே ஒரு மனிதனின் வாழ்வை நிறைவு செய்யாது. குடிசையில் வாழ்ந்து அன்றாடம் சம்பாதித்து பழைய நீராகாரம் சாப்பிடுபவர்களும் மகிழ்வுடன் வாழ்கிறார்கள். காரணம், அவர்கள் தங்களது பொருளாதார நிலையை பொருட்படுத்தாத மன நிறைவோடு வாழ்கிறார்கள். இல்லாததை நினைத்து, இருக்கும் மகிழ்ச்சியைத் தொலைத்து துயரத்தில் மூழ்காமல் தன்னிடம் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்ந்தால், அதுவே சொர்க்க வாயிலின் கதவைத் திறக்கும் திறவுகோல்.