மனதை வருடும் மயிலிறகு வார்த்தைகள்!

Heart touching words of comfort
Heart touching words of comfort
Published on

ப்போதும் வார்த்தைகளுக்கு மிகுந்த வலிமை உண்டு. நமது எண்ணங்களின் வெளிப்பாடுளே வார்த்தைகள். வார்த்தைகளின் வெளிப்பாடு நமது செயல்கள். சொற்களுக்கு மிகுந்த ஆற்றல் உண்டு என்பதால்தான் நமது முன்னோர்கள் பிள்ளைகளுக்கு கடவுளின் பெயர்களைச் சூட்டும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். அந்தப் பெயர்களை ஒவ்வொரு முறை சொல்லி அழைக்கும்போதும் ஒரு நேர்மறையான எண்ணம் உள்ளே ஓடும்.

இதம் தரும் வார்த்தைகள் எப்போதுமே காயம்பட்ட மனதைக் கூட ஆற்றி விடும். அதேசமயம், நல்ல உற்சாகமான மனதைக்கூட கத்தி போன்ற வார்த்தைகள் குத்திக்கிழித்து விடும் என்பதில் ஐயமில்லை. ஒரு பழமொழி உண்டு. ‘கடுமையாக பேசுபவர்களால் இனிக்கும் தேனை கூட விற்க முடியாது. இதமாகப் பேசுபவர்கள் காரமான மிளகாயைக் கூட சுலபமாக விற்றுவிடலாம்’ என்பதுதான் அது.

எப்போதுமே குடும்பம், உறவு மற்றும் நட்பு வட்டாரத்தில் விரிசலை ஏற்படுத்துவது வார்த்தைகள்தான். வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு தொங்கும் பலர் இருக்கிறார்கள். மனதில் எண்ணியவற்றையெல்லாம் வார்த்தையில் வடிக்கும் போது, அங்கே சிக்கல் எழுகிறது. ‘உனக்கு ஒண்ணுமே தெரியாது. நீ எப்பவுமே இப்படித்தான். ஒரு வேலையைக் கூட உருப்படியாக செய்யத் தெரியாது’ என்று சொல்லும்போது, கேட்பவரின் தன்னம்பிக்கை சிதறும். மேலும், சொல்பவர் மேல் கோபமும் வெறுப்பும் ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் வார்த்தைகளால் சாடிக்கொள்வதாலேயே சில இளம் தம்பதியரின் மண வாழ்வு தோற்றுப்போய் விவாகரத்தில் முடிகிறது.

எதிர்மறையான வார்த்தைகளை உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். மிகவும் இக்கட்டான சூழலில் கூட, சற்றே புத்திசாலித்தனமாக யோசித்து வார்த்தைகளை பயன்படுத்தும்போது வெற்றி கிட்டும். நமது சங்க இலக்கியம் காட்டும் ஒரு உதாரணமே இதற்குச் சான்று. ஒரு மன்னனைப் புகழ்ந்து பாடிய புலவருக்கு பரிசாக அளிக்கப்பட்ட பட்டாடை ஓரிடத்தில் கிழிந்து இருந்தது. அதை சுட்டிக்காட்ட எண்ணினார் புலவர். மன்னரிடம் நேரடியாக இதைச் சொன்னால் சிக்கல் ஆகும் என்று நினைத்தவர், ‘’மன்னா! நீங்கள் தந்த இந்தப் பட்டாடையில் எல்லாம் இருக்கிறது. காயிருக்கிறது, பூ இருக்கிறது, பிஞ்சும் இருக்கிறது” என்று அழுத்திச் சொன்னார். அந்த ஆடையிலிருந்த கிழிசலை பார்த்த மன்னர், உடனே வேறு பட்டாடை கொடுக்கச் சொன்னார். அதை மட்டுமல்லாமல் சமயோஜிதமாக பேசியதால் புலவருக்கு பொற்காசுகளையும் தந்தார் என்கிறது இலக்கியம்.

சில வார்த்தைகள் இதம் தருபவை. சில வதம் செய்பவை. எழுத்தாளரின், பேச்சாளரின், ஏதோ ஒரு ஒற்றைச் சொல் வாசிப்பவரின், கேட்பவரின் மனதைத் தொடுகிறது. மாயம் செய்கிறது. திரைப்படங்களில் நாயகர்கள் சொல்லும் பஞ்ச் டயலாக்குகள் நல்லதோ கெட்டதோ ரசிகனின் மனதை வசீகரம் செய்கிறது.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் முன்பு இப்படிப் பேசிப் பழகாதீர்கள்!
Heart touching words of comfort

இதயம் அன்பால் நிறைந்திருக்கும்போது, உள்ளிருக்கும் பிரியமான வார்த்தைகளை பூக்குவியல் போல தூவ வேண்டும். துயருறும்போது துக்கத்தை அடக்காமல் பிரியமானவர்களிடம் அப்படியே கொட்டி விடுங்கள். பிறரை வாழ்த்தும்போது நல்ல மங்கலச் சொற்களை வான் மழை போல பொழியுங்கள்.

மனம் ஆத்திரத்தில் கொதிக்கும்போது சற்றே நிதானித்து வார்த்தைகளை உள்ளுக்குள் வடிகட்டி, பிறகு வெளியே அனுப்புங்கள். எல்லையில்லா கோபத்தில் இருக்கும்போது வார்த்தைகளை, ‘ம்யூட்’ மோடில் போட்டுவிட்டு மவுனமாக இருங்கள். அல்லது பொங்கலில் தென்படும் ஒன்றிரண்டு முந்திரிப் பருப்பு போல மிகக் குறைவாய் பேசினால் போதும். குறைவான சொற்களுக்கு வலிமை அதிகம். நமக்குப் பிரியமானவர்களிடமும், சக மனிதர்களிடமும் உறவுப்பாலம் சிறக்க, மயிலிறகு வார்த்தைகளைப் பிரயோகிப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com