குழந்தைகளுக்கு பொது அறிவை வளர்க்க நாம் கற்றுக் கொடுக்கும் விஷயங்கள் போரடிக்கும் விதமாக இருக்கக் கூடாது. கதைகள் மற்றும் விளையாட்டுகள் மூலம் அவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் சொல்லித்தர வேண்டும். அது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1.குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் சில கதைகளைக் கூறி அதன் கூடவே சில உண்மைச் சம்பவங்களையும் எடுத்துரைக்கும்போது, அவை அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். உண்மைச் சம்பவங்களை உள்ளிறுத்தி, உங்கள் கற்பனையில் புனையப்பட்ட கதைகளையும் கூறலாம்.
2. குழந்தைகளிடம் வினாடி வினா போன்ற பாணியில் எளிமையான கேள்விகளை கேட்டு, அவர்கள் சரியான பதில் தரும்போது அவர்களுக்கு பரிசுகள் அளித்து மகிழ்விக்கலாம். இது அவர்களின் தன்னம்பிக்கையையும் ஆர்வத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
3. புத்தக வடிவில், வண்ண மயமான படங்களுடன் சித்தரிக்கப்பட்டிருக்கும் உண்மைக் கதைகளை அவர்களுக்கு உடனிருந்து படித்துக் காட்டலாம்.
விண்வெளி, வன விலங்குகள், வரலாறு போன்ற வெவ்வேறு தீம்களின் அடிப்படையிலான புத்தகங்களை தேர்ந்தெடுத்து சொல்லிக் கொடுப்பது கூடுதல் பலன் தரும். அவைகளை வீடியோவில் போட்டுக் காண்பிப்பதும் சிறப்பு.
4.போர்டு கேம், புதிர்களை விடுவித்தல் மற்றும் செயலிகள் (App) மூலமும் குழந்தைகளுக்கு பொது அறிவை கற்றுக்கொடுக்கலாம். ஃப்ளாஷ் கார்டு மற்றும் ட்ரைவியா (Trivia) போன்ற விளையாட்டுகள் அவர்களின் ஞாபக சக்தியையும் யோசிக்கும் திறனையும் அதிகரிக்கச் செய்யும்.
5. மிருகக்காட்சிசாலை, அருங்காட்சியகம், பார்க் போன்ற இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லலாம். நேரில் அங்குள்ளவைகளைக் காணும் போது அவைகளின் பெயர்கள் மற்றும் அவை சம்பந்தப் பட்ட பிற விஷயங்களும் குழந்தைகள் மனதில் நன்கு பதிவாகும். மரம், செடி, விலங்குகள், பூகோளம் போன்றவை பற்றின அறிவு பெறவும் இது உதவும்.
6. மனதைக் கவரும் விதத்திலான பாடல்கள் மூலம் எண்கள், கிரகங்களின் பெயர்கள் மற்றும் கடந்த கால நிகழ்வுகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கலாம். அவர்கள் இதை மகிழ்ச்சியுடனும் சுலபமாகவும் கற்றுக்கொள்ள மியூசிக் உதவி புரியும்.
மேற்கூறிய வழிகளில் குழந்தைகளின் பொது அறிவை வளர்க்க பெற்றோர் உதவி புரியும்போது, பிள்ளைகளின் திறமை மெருகேறும் என்பதில் சந்தேகமில்லை.