
"வான்நின்று உலகம் வழங்கி வருவதால்தான் அமிர்தம் என்றுணறர் பாற்று" என்றார் வள்ளுவர்.
மழையை அமிர்தத்திற்கு ஒப்பானது என வள்ளுவர் கூறியதன் பொருள், நாம் காலையில் எழுவது முதல் இரவு தூங்கப் போகும் வரை நம் அன்றாட அவசியமான தேவைகளில் மிக முக்கியமானதாக தண்ணீர் இருப்பதால்தான். நீருக்கு ஆதாரமான நீர் நிலைகள் மனிதனுக்கு வாழ்க்கையில் சில பாடங்களை உணர்த்துகின்றன அவற்றை இந்தப் பதிவில் காண்போம்.
கடல் அலைகளும் உற்சாகமும்
மனிதன் மகிழ்ச்சியாகவோ அல்லது சோகமாகவோ இருக்கும்போது, கடல் அலைகளை பார்க்கும்போது ஒரு உற்சாகம் பிறக்கும். அப்பொழுது அவனிடம் உள்ள துன்பம், துயரம், அச்சம் அனைத்தையும் அலைகள் அகற்றிவிடும். கடற்கரை மணலில் மணல் வீடுகட்டி விளையாடும் குழந்தைகளை பார்க்கும்போது விடாமுயற்சி என்ற எண்ணம் மேலோங்கும். அதனால்தான் பணக்காரர், ஏழை என்ற எந்தவித வித்தியாசமும் இல்லாமல் கடலும் அலைகளும் மனிதனை வாழ்த்துகின்றது.
காட்டாற்று வெள்ளமும் சுறுசுறுப்பும்
காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு தங்கு தடையின்றி பெருக்கெடுத்து ஓடும் இயல்புடையது. அதே போல், மனிதன் எவ்வித சோம்பலுக்கும் உட்படாமல் சுறுசுறுப்பாக உழைத்து வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்பதை உணர்த்துகிறது.
மழை நீரும் சேமிப்போம்
"சிறுதுளி பெருவெள்ளம்" இது பழமொழி . சேமிப்பிலும் சிக்கனத்திலும் மழை நீரைபோல இருக்கவேண்டும். ஒரு ரூபாய் செலவு செய்ய எடுக்கும்பொழுது அதில் 10 பைசாவை சேமித்தால் சில நாட்கள் கழித்து அது பெருந்தொகையாக மாறிவிடும். மழைத்துளிகள் வெள்ளமாக மாறுவதுபோல், பைசாக்கள் கோடிகளாக மாறும் என்பதுதான் மழைநீர் கற்றுத்தரும் பாடம்.
அருவியும் ஆரோக்கியமும்
அருவி இடத்திற்கு தகுந்தார்போல் மலை, வயல், மேடு, பள்ளம் , பாறை, செங்குத்தான இடம் இப்படி எந்த இடத்தில் இருந்தாலும் ஆர்ப்பரித்து கொட்டும் பண்புடையது. அதேபோல் நம் உடம்பின் உள்ள பிரச்னைக்கு ஏற்றார்போல் தகுந்த முறைகளை கையாண்டு அருவிபோல ஆரோக்கியத்தை பேண வேண்டும். இடம், பொருள், ஏவல் பார்த்து பேசுவதற்கும் அருவிநீரை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டியது அவசியம்.
நீரூற்றும் தர்மமும்
அள்ள அள்ள குறையாது அமுதசுரபி போல் இருப்பது நீரூற்று. தானம் தர்மம் செய்வதிலும் அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருப்பதிலும், நமக்குத் தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு போதிப்பதிலும் நீரூற்று போல் மனிதன் இருக்கவேண்டும்.
கிணற்று நீரும் உதவியும்
கிணற்று நீரை வெள்ளம் கொண்டு போகாது. ஆனால் எல்லாவற்றிற்கும் கிணற்று நீர் பயன்படுவது போல் மற்றவர்களுக்கு உதவுவதிலும் பொறுப்பை சுமந்து வாழ்வதிலும், உறவு நட்புகளிடமும் இனிமையாக பழகுவதிலும் கிணற்று நீரைப் போல மனிதன் இருக்க வேண்டும்.
இயற்கை மனிதனுக்கு பல வகைகளில் எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்பதை மேற்கூறிய நீர் நிலைகள் தெளிவாக விளக்குகின்றன.