
நமது வீடுகளை எவ்வளவு சுத்தம் செய்தாலும், பூச்சிகளை ஒழிக்க வழியே இல்லை என பலரும் கவலையில் இருப்பார்கள். அதுவும் இந்த பூச்சிகள் பாத்ரூம், டாய்லெட், முக்கியமாக கிச்சன் என அதிகம் உலாவுவதால் பலரும் அவதிக்குள்ளாகி வருவார்கள். ஒரு பூச்சி வந்துவிட்டால் போதும், அது குட்டி மேல் குட்டி போட்டு வீட்டையே இரண்டாக்கி விடும்!
நாளடைவில் வீடு முழுவதும் அதன் ராஜ்ஜியம் என்ற வகையில் பார்க்கும் இடங்களில் எல்லாம் பூச்சிகள் உலாவி வரும். இதை எப்படி ஒழிப்பது என்று பலரும் கவலையில் இருந்தீருப்பீர்கள். வீட்டில் நாம் தினசரி பயன்படுத்தும் முகத்திற்கு போடும் பவுடரை வைத்தே விரட்டலாம். அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
ஒரு பயன்படுத்தாத பவுல்
ஒரு ஸ்பூன் டால்கம் பவுடர் - முகத்திற்கு பூசுவது.
இரண்டு கற்பூரம்
வெதுவெதுப்பான நீர்
ஸ்ப்ரே பாட்டில் (கடைகளில் கிடைக்கும்). இல்லாதவர்கள் வாட்டர் பாட்டில் மூடியில் ஸ்ப்ரே வருவது போன்று 5 - 6 ஓட்டைகள் போட்டு கொள்ளலாம்.
தயாரிக்கும் முறை:
முதலில் ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் பவுடரை சேர்க்கவும். பிறகு, இரண்டு கற்பூர உருண்டைகளை கைகளால் நுணுக்கி பவுடருடன் சேர்க்கவும். இப்போது, கை சூடு தாங்கும் அளவுக்கு வெதுவெதுப்பான வெந்நீரை இதில் சேர்க்கவும். வெந்நீர் சேர்க்கும்போது பவுடரும் கற்பூரமும் விரைவில் கரைந்துவிடும்.
கரைந்த இந்த கலவையை, மூடியில் சிறிய துளைகள் போட்ட ஒரு ஸ்ப்ரே பாட்டிலுக்கு மாற்றவும்.
பயன்படுத்தும் முறை:
கரப்பான்பூச்சி மற்றும் பல்லிகள் அதிகமாக இருக்கும் இடங்களில் இந்த லிக்விட்டை ஸ்ப்ரே செய்யலாம். குறிப்பாக, சமையலறை கவுண்டர் டாப் மற்றும் சிங்க் பகுதிக்கு அருகில் இரவில் சமையலறை வேலைகள் முடிந்த பிறகு இந்த லிக்விட்டை நன்றாக ஸ்ப்ரே செய்து துடைத்து விடலாம். கரப்பான்பூச்சிகள் அதிகம் வரும் இடமே சமையலறை சிங்க் தான். அங்கே இருக்கும் உணவு கழிவுகளை உண்ணவே அவை வருகின்றன.
கரப்பான்பூச்சி மற்றும் பல்லிகள் எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ, அந்த இடங்களில் இந்த லிக்விட்டை தொடர்ந்து ஸ்ப்ரே செய்து வாருங்கள். இதை தொடர்ந்து செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் கரப்பான்பூச்சி மற்றும் பல்லிகள் தொல்லை அறவே இருக்காது.
குழந்தைகள் இருக்கும் வீடுகளில் கெமிக்கல் கலக்கும் ஸ்ப்ரே போன்றவற்றை பயன்படுத்த அச்சமடைவார்கள். அது குழந்தைகளுக்கு விஷமாக மாறிவிடும் என்று. ஆனால் இது போன்று பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் எந்த அச்சமும் இல்லாமல் இருக்கலாம்.