
நாம் நம் வீட்டை சுத்தமாகவும் நல்ல சுகாதாரத்துடனும் வைத்திருக்க, குறிப்பிட்ட இடைவெளிகளில் வீட்டிலுள்ள அனைத்துப் பொருட்களையும் தலைகீழாகப் புரட்டி, தூசு தட்டி சுத்தமாக வைத்துப் பராமரிக்கத் தவறுவதில்லை.
எனினும், சில வகையான அழுக்கடைந்த பொருட்கள் நம் பார்வையில் படாமல், என்றைக்கும் அழுக்காகவும், நோய்க் கிருமிகளின் உறைவிடமாகவும் இருந்து கொண்டிருக்கும். அப்படிப்பட்ட 7 வகைப் பொருட்களின் விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
1.மொபைல் போன்: நாள் முழுவதும் நம் கூடவே இருக்கும் நெருங்கிய நண்பன் இந்த மொபைல் போன். நாம் தினசரி உபயோகப்படுத்தும் டாய்லெட் சீட்டில் இருப்பதைவிட அதிகளவு கிருமிகள் இந்த போனில் இருப்பதற்கு வாய்ப்புண்டு. ஆகையால் தினமும் உங்கள் போனை ஆல்கஹால் துடைப்பான் ((Alcohol based wipe) அல்லது மைக்ரோ ஃபைபெர் க்ளாத் வைத்து நன்கு துடைத்து சுத்தப்படுத்துவது அவசியம்.
2. ஸ்விட்ச்கள் மற்றும் கதவின் கைப்பிடிகள்: ஒரு நாளில் பல முறை ஆன் - ஆஃப் செய்யும் ஸ்விட்ச் போர்டில் உள்ள ஸ்விட்ச்கள் மற்றும் அடிக்கடி திறந்து மூடும் கதவுகளின் கைப்பிடிகளை நாம் ஒரு போதும் கண்டுகொள்வதில்லை. வெள்ளை நிற ஸ்விட்ச்கள் கருப்பாக மாறியிருப்பது கூட நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை. நோய்க் கிருமிகள் இவ்விடங்களில் ஒளிந்திருக்க இடமளிக்காமல் வாரம் ஒரு முறை இவைகளை சுத்தப்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
3.ரிமோட் கண்ட்ரோல்: வீட்டில் உள்ள பலரும் பயன்படுத்தும் ரிமோட் கண்ட்ரோலில் அபாயகரமான பாக்டீரியாக்களின் ஆக்கிரமிப்பு கண்டிப்பாக இருக்கும். கிருமி நாசினியில் நனைத்த துடைப்பான் அல்லது சோப்புக் கரைசலில் நனைத்துப் பிழிந்த துணியை வைத்து ரிமோட் கண்ட்ரோலை சில நாட்களுக்கு ஒரு முறை சுத்தப்படுத்துவது அவசியம்.
4.டூத் பிரஷ் ஹோல்டர்: நாம் பற்களை சுத்தப்படுத்த உபயோகிக்கும் பிரஷ்களை ஒரு பிளாஸ்டிக் ஹோல்டரில் போட்டு வைத்திருப்போம். ஹோல்டரின் உள் பக்கம் குனிந்து சற்று உற்றுப் பாருங்களேன்.
அங்கே தேங்கியிருக்கும் அழுக்குகளில் பூஞ்சைகள் மற்றும் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் தேங்கியிருக்க வாய்ப்புண்டு. வாரம் ஒரு முறை இந்த ஹோல்டர்களை சூடான சோப்பு நீரால் நன்கு சுத்தப்படுத்தி வையுங்கள்.
5.திரும்ப திரும்ப கடைகளுக்கு எடுத்துச் செல்லும் பைகள் (Reusable shopping bags): இவைகள் சுற்றுச் சூழலுக்கு உகந்தவை என்றாலும், அவற்றிலும் அழுக்குகள் சேர்ந்திருக்கும். வாரம் ஒருமுறை துணிப்பைகளை மெஷின் வாஷ் செய்வதும், பிளாஸ்டிக் பைகளை சோப்பு நீரில் முக்கிய துணியைக்கொண்டு துடைப்பதும் ஆரோக்கியமும் அழகும் தரும்.
6.சமையலறை மேடையை துடைக்க உதவும் ஸ்பாஞ்ச்: துடைப்பதற்கு உபயோகிக்கும் ஸ்பாஞ்ச்களில் சேர்ந்திருக்கும் அழுக்குகளுக்கு அளவே இருக்காது. இவற்றை வாரம் ஒரு முறை மாற்றவும், ஈரமான ஸ்பாஞ்ச்சை ஒரு நிமிடம் மைக்ரோ ஓவனில் வைத்தெடுக்கவும் செய்தால் அவை கிருமிகளின்றி, நம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.
7.இயர் போன் மற்றும் ஹெட் போன்கள்: காதுகளு க்குள்ளிலிருந்து வெளிவரும் மெழுகு போன்ற அழுக்குகள் மற்றும் வியர்வை ஆகியவை இந்த மாதிரியான பொருட்கள் மீது சுலபமாக ஒட்டிக்கொள்ளும். இவற்றை நீக்க, வாரம் ஒருமுறை மிருதுவான பிரஷ் அல்லது சிறிது ஆல்கஹாலில் நனைத்த துணியின் உதவியால் சுத்தம் செய்யலாம்.
அவ்வப்போது வீட்டை சுத்தம் பண்ணும்போது மேலே குறிப்பிட்ட இந்த 7 பொருட்களையும் மறக்காமல் சுத்தம் பண்ணிவிடுங்கள். உங்கள் வீட்டின் சுகாதாரமும் வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியமும் மேம்படும்.