
நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு அற்புதங்களையும், படிப்பினைகளையும் கொண்டே துவங்குகிறது. என்னதான் நாம் பல்வேறு திட்டங்களோடு ஒவ்வொரு நாளையும் தொடங்கினாலும் கூட, அந்த நாளின் முடிவில் நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் நிச்சயம் ஒரு அனுபவத்தையும் படிப்பினையையும் கொடுத்துதான் நிறைவடைகின்றன. அப்படி முடிவடையும் நாட்களின் இறுதியில் கையில் எழுதுகோலை பிடிக்கும் போதெல்லாம் நம்மையே அறியாமல் நம் முன் பல மனிதர்களது மனதுகள் விரிந்து கிடக்கின்றன.
ஒவ்வொரு நாளும் ஆசிரியப் பணியில் பல்வேறு மாணவர்களை சந்திக்கிறோம். எப்பொழுதும் படிப்பில் முதல் தரமாக வரும் மாணவர்களைப் பாராட்டும்போது அது அவர்களது மனதில் பெரிதாக எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால், அதுவே படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களை ஒரு வார்த்தையை மிகச் சரியாக எழுதியதற்காகப் பாராட்டும்போது அவர்களுக்குக் கிடைக்கும் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் அளவிட முடியாததாக உள்ளது.
இதை அடிப்படையாகக் கொண்டு தொடரும் கற்பித்தல்கள் ஒவ்வொரு மாணவரிடம் அவருடைய மனதின் உள்ளார்ந்த ஆர்வத்தை அறிந்து கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது.
மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், இன்றைய சமூகத்தின் மீதான அவர்களுடைய எண்ணங்களை நினைக்கும்போது மிகவும் பிரம்மிப்பாக உள்ளது. அன்று ஒரு நாள் ஒரு மாணவி வகுப்பறையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். அவள் அருகே சென்று என்னவென்று விசாரித்தபோது அந்த மாணவி கூறிய பதில் மனசுக்கு மிகவும் நெருக்கமாய் இருந்தது. அந்த மாணவியும் அவளுடைய தம்பியும் ஒரே பள்ளியில் படிக்கிறார்களாம். பள்ளிக்கு தாமதமாக வந்ததால் இருவரும் மைதானத்தில் தடுத்து நிறுத்தப்பட, சிறிது நேரத்தில் அந்த மாணவி மட்டும் வகுப்பறைக்கு வந்து விட்டார்.
ஆனால், அந்த மாணவியின் தம்பி அங்கேயே நிறுத்தப்பட்டிருப்பது அறிந்து, ‘என்னுடைய தம்பி யாரிடமும் அதிகமாக பேச மாட்டான். அவன் இயல்பிலேயே அமைதியான சுபாவம் கொண்டவன். எனவே, அங்குள்ள சூழலை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்று எனக்குத் தெரியவில்லை. மேலும், நான் கிளம்பி வரும்போது அவன் என்னைப் பார்த்த பார்வை மிகவும் பரிதாபமாக இருந்தது’ என்று கூறி அழுதாள்.
பள்ளிக்கு வரும் அனைவருக்கும் ஏதோ ஒருவிதமான வலிகள் இருக்கத்தான் செய்கிறது. எல்லோரும் அதைக் கடந்துதான் இந்த இடத்தை வந்து அடைகிறார்கள். ‘உன் தம்பிக்காக அழுவதைத் தாண்டி, அவனுக்கு அந்தச் சூழலை எப்படி சமாளித்து கடந்து வர வேண்டும் என்பதைக் கற்றுக் கொடு’ என்று அவளிடம் ஆறுதல் சொல்லிவிட்டு வந்தேன். அந்த நிகழ்வு நடந்து பல மணி நேரம் ஆன பின்பும் மனதில் ஏதோ இனம் புரியாத உற்சாகம் இருந்து கொண்டே இருந்தது. இன்றைய காலகட்டத்தில் பிறருக்காக கண்ணீர் சிந்தும் உள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றன என்பதை நினைக்கும்போது மிகவும் மனநிறைவாக இருந்தது.
பெருகிவரும் பொருளாதார நெருக்கடிகளால் ஒவ்வொருவரும் உறவுகளை தொலைத்து விட்டு இயந்திரமாய் ஓடிக்கொண்டிருக்கிறோம். இத்தகைய காலகட்டத்தில் இன்னொருவருக்காக நம் மனதை வருத்திக்கொள்ளும் பண்பு என்பது மிகவும் வரவேற்புக்குரியதுதான். நம் கண் முன் எவ்வளவோ கசப்பான அனுபவங்களைப் பார்க்கும்போது இந்த மாதிரியான சில ஆத்மார்த்தமான நிகழ்வுகள்தான் நாம் இன்னும் மனிதனாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மனதிற்கு நெருக்கமாக சொல்லிக் கொண்டிருக்கிறது.