

வீட்டில் வர்ணம் பூசும்போது வீட்டில் உள்ள பொருட்கள் பாழாகாமல் இருக்கவும், நாம் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். மேலும் வர்ணம் மீந்துவிட்டால் அதை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றியும் இப்பதிவில் காண்போம்.
வீட்டின் அறையில் உள்ள மரச்சாமான்கள், மின் சாதனங்கள் மற்றும் கதவு, ஜன்னல் பிடிகளை பிளாஸ்டிக் தாள்கள் அல்லது பழைய துணிகளால் மூடி மறைக்க வேண்டும். இதனால் பெயிண்ட் இந்த பொருள்களின் மீது படாமல் பாதுகாக்கலாம்.
பெயிண்ட் சிந்தினால் தரை பாழாகாமல் இருக்க பழைய செய்தித்தாள்களை தரையில் விரித்து வைக்க வேண்டும்.
சுவரில் உள்ள விரிசல்கள், கரையான் அரிப்புகள் மற்றும் ஆணித்துளைகளை 'சுவர்புட்டி' கொண்டு அடைத்து காய்ந்த பின் தேய்ப்புத்தாள் கொண்டு சமப்படுத்த வேண்டும். பழைய பெயிண்ட் உரிந்து இருந்தால் அதை சுரண்டி எடுக்க வேண்டும்.
பெயிண்ட் அடிக்கும் அறையின் கதவு மற்றும் ஜன்னல்களைத் திறந்து வைத்து நல்ல காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பெயிண்ட் வாடை வீட்டைவிட்டு அகலும். பெயிண்ட் அடித்து முடித்ததும் அந்தந்த அறைகளில் படிகாரத்தை வைக்கலாம். இதனால் பெயிண்ட் வாடை மட்டுப்படும்.
பெயிண்ட் கெமிக்கல் நெடி மற்றும் தூசி மூக்கிற்குள் செல்லாமல் இருக்க முகக்கவசம், கண்களுக்கு பாதுகாப்பு கண்ணாடி மற்றும் கைகளுக்கு கையுறை அணிய வேண்டும்.
சுவரில் உள்ள ஸ்விட்ச் போர்டுகளில் பெயிண்ட் சிந்தாமல் இருக்க அவற்றின் மீது 'மாஸ்கிங் டேப்' ஒட்ட வேண்டும்.
சுவரை கழுவும்போதோ அல்லது பெயிண்ட் அடிக்கும்போதோ மின்சாரத்தை துண்டிப்பது பாதுகாப்பானது.
எடுத்தவுடன் நேரடியாக சுவரில் பெயிண்டை அடிக்காமல், பெயிண்ட் சுவரில் நன்றாக ஓட்டுவதற்கும் நீண்ட காலம் உழைப்பதற்கும் முதலில் ஒரு லேயர் ப்ரைமர் அடிக்க வேண்டும்.
சுவரின் மூலைகள், கதவு ஓரங்கள் மற்றும் ஸ்விட்ச் போர்டு பகுதிகளில் முதலில் சிறிய பிரஷ்ஷால் பெயிண்ட் அடித்துவிட்டு பெரிய பரப்புகளுக்கு 'ரோலர்' பயன்படுத்த வேண்டும்.
முதல் கோட்டிங் பெயிண்ட் அடித்த பிறகு அது நன்றாக காயும் வரை குறைந்தது 4 - 6 மணி நேரம் காத்திருந்து இரண்டாவது கோட்டிங் அடிக்க வேண்டும்.
பெயிண்ட் ஓரளவு ஈரமாக இருக்கும்போதே மாஸ்கிங் டேப்புகளை மெதுவாக உரித்து எடுக்க வேண்டும். முற்றிலும் காய்ந்த பின் உரித்தால் பெயிண்டும் சேர்ந்து உரிந்து வர வாய்ப்புள்ளது.
எஞ்சிய பெயிண்டை இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். பெயிண்ட் டப்பாக்களை கழுவும் தண்ணீரை வடிகால்களில் நேராக ஊற்றாமல் முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.
மீதமுள்ள பெயிண்ட் டப்பாவை தலைகீழாக சிறிது நேரம் திருப்பி வைத்தால் காற்று உள்ளே செல்வது தடுக்கப்பட்டு பெயிண்ட் பல மாதங்கள் கட்டியாகாமல் இருக்கும்.
அப்படி மீந்து போன பெயிண்டை சுவரில் ஆணித்துளைகள், கரையான் வெடிப்புகள், கறைகள் படிந்தால் அவற்றை போக்குவதற்கு பத்திரமாக வைத்திருந்து பயன்படுத்தலாம்.
மேலும் ஜன்னல் கம்பிகள், மரக்கதவு ஓரங்கள், கூர்மையான மூலைகள் கொண்ட பகுதிகளில் பெயிண்ட் உரிந்து இருந்தால் அதை சீரமைக்க பயன்படுத்தலாம்.
பிளாஸ்டிக், களிமண் பூத்தொட்டிகளுக்கு வண்ணம் அடித்து பயன்படுத்தலாம். இதனால் வீடே புது பொலிவுடன் திகழும்.
முறம் முதற்கொண்டு பழைய மர நாற்காலிகள், ஸ்டூல்கள், மேஜை, அலமாரிகளுக்கு வண்ணம் தீட்டி புதுப்பிக்கலாம். அதேபோல் தோட்ட செடிகளில் வைத்திருக்கும் அடையாளப் பலகைகளுக்கு பெயிண்ட் அடிக்கலாம்.
ஃபோட்டோ பிரேம்கள், மரப்பெட்டிகள், கைவினைப் பொருட்கள் போன்றவற்றிற்கு வர்ணம் பூசி புதுப்பிக்கலாம். இதனால் வீடே புது அலங்காரத்துடன் காணப்படும்.
அக்கம்பக்கத்தில் யாராவது இரவல் கேட்டால் அவர்களுக்கும் கொடுத்து உதவலாம்.
ஆதலால் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க ஆரம்பித்தால் இது ஒவ்வொன்றிலும் கவனம் வைத்து திறம்பட செயல்பட்டால் வீட்டை சுத்தப்படுத்துவது எளிதாகவும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வசதியாகவும் இருக்கும். கஷ்டப்பட்டு செய்ய வேண்டிய வேலைகள் அதிகம் இருக்காது.
வீட்டின் மின் சாதனங்கள் மற்றும் சுவிட்ச் போர்டுகளுக்குப் சேதம் ஏற்படாமல் பெயிண்ட் அடிப்பது எப்படி என்பதையும், முறையான பாதுகாப்புடன் வர்ணம் பூசி வீட்டைப் புதுப்பிக்கும் தொழில்முறை நுட்பங்களையும் வாசகர்கள் தெரிந்து கொள்வார்கள்.