தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்!

Honor the Father
Honor the Father
Published on

தந்தைக்கு மரியாதை செய்யுங்கள். அவர் கௌரவிக்கப்பட வேண்டியவர்.       

பொதுவாக, தந்தைகளின்  இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்கு உரியது. இதனால்தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்துவிட வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.

குடும்பத்துக்காக உழைத்து, உழைத்து ஓடான பின்னர் அவரை கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும். ஆனால் மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, மூன்று வேளையும் சாப்பிட்டு விட்டு பேசாமல் கிடந்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் தந்தைமாரை நடத்தி வருகின்றனர்.

வயதான தந்தை தன் குடும்பத்தினரிடமிருந்து மிகக் கொஞ்சமாகத் தான் கேட்பார். ஏனெனில் கேட்டுப் பழகாத குடும்பத் தலைவராக இருந்தவர். கொடுக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்தவர். எனவே வயதான காலத்தில் வாய் திறந்து கேட்கமாட்டார். குடும்பத்தினர் தான் அவரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைக்க வேண்டும்.

தந்தை வாசிக்கும் பழக்கம் உள்ளவரானால் குறைந்த பட்சம் வாரப் பத்திரிகையாவது வாங்கிக் கொடுங்கள்.

சில்லறைச் செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் கொடுங்கள். 

மூலையில் அமர்த்தாமல் சிறிய வேலைகளைக் கொடுங்கள்.

பேரன், பேத்திகளை அவரிடம் இருந்து பிரிக்காதீர்கள். அவர்கள் உங்கள் தந்தையால் கொண்டாடப்படும் செல்வங்கள்.

குடும்பத் தேவைகளைப் பார்த்து பார்த்து செய்தவருக்கு, இப்போது உங்கள் காலம், பார்த்துப் பார்த்து செய்வதற்கு.

இதையும் படியுங்கள்:
வெற்றிகரமான வாழ்க்கைக்கு உதவும் 4 ரகசியங்கள்!
Honor the Father

ஒருவர் மறைந்த பின்னர், அதைச் செய்யவில்லையே, இதைச் செய்திருக்கலாமே என்று எண்ணிப் புலம்புவதைவிட, அவர் உயிருடன் இருக்கும்போதே தந்தையின் இறுதி காலம் அமைதியாகக் கழிவதற்கு வழி வகை செய்யுங்கள்.

வயதானவர்களுக்கு தனிமை மிகக் கொடுமையானது. ஒரு சிறிய வானொலியை வாங்கிக் கொடுங்கள். முடிந்தால் தனி டி.வி இல்லையேல் உங்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க விடுங்கள்.

தன் மனைவியை இழந்த தந்தையின் தனிமை மிகமிகக் கொடுமையானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

குடும்பத் தலைவன், அதிகாரம் செலுத்தியவன், சம்பாதித்தவன், பிறர் மதிப்புக்கு உரியவன் என்றெல்லாம் வாழ்ந்து விட்ட தந்தை, தன் அதிகாரமும், அன்பும், நெருக்கமும், காட்டக் கூடிய மற்றும் எது வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளக் கூடிய மனைவியை இழந்தபின் கையறு நிலைக்கு ஆளாகி விடுகிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இவற்றை உணர்ந்து தந்தைக்கு மரியாதை செய்யுங்கள். அவர் கௌரவிக்கப்பட வேண்டியவர்.       

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com