பண்படாத ஒரு மனிதனின் மனதில் எந்த அறிவுரை கூறினாலும், அந்த அறிவுரைக்கு நற்பயன் ஏதும் கிடையாது. நமக்குக் கிடைக்கிற ஒவ்வொரு அறிவுரையையும் வாழ்க்கையில் செயல்படுத்துகிறோமா? என்பதை யோசித்து பார்க்க வேண்டும்.அதைப் பற்றிய ஒரு குட்டிக் கதையை இந்தப் பதிவில் பார்ப்போம்.
நீண்ட காலத்திற்கு முன்பு துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் பெரும்பாலும் ஊர் ஊராகச் சுற்றித் திரியும் நாடோடியாகவே வாழ்ந்து வருபவர். அதனால் இவர் செல்லும் ஊர்களின் மரத்தடியிலோ அல்லது சத்திரங்களிலோ தங்கிக்கொள்வது இவரது வழக்கம்.
இவர் செல்லும் ஊர்களில், அங்கு பிரச்னைகள் உள்ள மனிதர்கள் தங்கள் கஷ்டங்களை இவரிடம் பகிரும்பொழுது, அவர்களுக்கு நல்ல அறிவுரையோ அல்லது துன்பத்தில் உள்ளவர்களுக்குத் தனது பையிலிருந்து ஒரு புத்தகத்தையோ கொடுத்து அவர்களது பிரச்னையை தீர்த்து வைப்பது இவரது வழக்கம்.
அப்படித்தான் இந்தத் துறவி ஒரு சிறிய கிராமத்திற்குச் சென்றார். இந்தத் துறவியைப் பற்றி அறிந்தவர்கள், அவரைக் கண்டு தங்களது பிரச்னைகள் பற்றிக் கூறி. அதற்குத் தீர்வு காண வருகிறார்கள். இதை அறிந்த அந்த ஊரில் வாழும் பெரும் நஷ்டம் அடைந்த வியாபாரி ஒருவரும் அவரைச் சந்திக்க வருகிறார். அவர் அந்தத் துறவியைக் கண்டதும் தனது கதையைக் கூறி, கண்ணீர் விட்டுக் கதறி அழுகிறார்.
இதைக் கண்ட அந்தத் துறவி அவருக்கு ஆறுதல் மட்டும் கூறாமல், தனது பையிலிருந்து ஒரு பெட்டியை எடுத்து அவரிடம் கொடுத்து. ‘இந்தப் பெட்டியை இங்கு திறந்து பார்க்காமல், உனது வீட்டிற்குச் சென்று திறந்து பார். அது உனக்கு நான்கு ரகசியங்களைச் சொல்லும். அந்த நான்கு ரகசியங்களையும் தெரிந்து கொண்டால் நீ மீண்டும் தொழிலையும் ஆரம்பிக்கலாம். அதில் வெற்றியும் அடையலாம்’ எனக் கூறுகிறார்.
அந்த வியாபாரியும் பெட்டியைப் பெற்றுக் கொண்டு, தனது வீட்டுக்குச் சென்று திறந்த பார்க்க, அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அந்தப் பெட்டியில் ஒரு கடிகாரம், ஒற்றை ரூபாய் நாணயம், சிப்பி, ஒரு முத்து என நான்கு பொருட்கள் இருந்தன. ‘இந்தப் பெட்டி ஏதோ நான்கு ரகசியங்கள் சொல்லும் என்று துறவி சொன்னாரே. அந்த நான்கு ரகசியங்கள் என்னவென்று புரியவில்லையே’ என்று குழம்பிக் கொண்டு இருந்தார். ‘சரி, இதை அந்தத் துறவியிடமே நாளை சென்று கேட்டு விடுவோம்’ என்று முடிவெடுத்து, அடுத்த நாள் காலை முதல் வேலையாக துறவியிடம் செல்கிறார்.
துறவியிடம், ‘சாமி இந்த நான்கு பொருட்களும் நான்கு உண்மையைக் கூறும் என்று சொன்னீர்கள். நானும் இரவு முழுவதும் யோசித்துப் பார்த்தேன். ஆனால், எனக்கு ஒன்றும் புரியவில்லை. நீங்களே இதற்கான பதிலையும் கூறுங்கள்’ என்று கேட்டார் அந்த வியாபாரி. இதைக் கேட்ட துறவி, ‘நானும் ஒவ்வொரு ஊருக்கும் செல்வேன் அங்கு உன்னைப் போன்று கஷ்டங்களைக் கூறுபவருக்கு இந்த மாதிரி ஒரு பெட்டியைக் கொடுப்பேன். அதை அவர்கள் பார்த்துவிட்டு புரிந்ததோ புரியவில்லையோ, மறுநாள் என்னை வந்து சந்திக்க மாட்டார்கள். ஆனால், நீ என்னை வந்து சந்தித்துள்ளாய். அதனால் உனக்கு இந்த ரகசியத்தைக் கூறுகிறேன்" என்றார்.
“இதில் உள்ள கடிகாரம் நேரத்தையும், ஒற்றை ரூபாய் நாணயம் பணத்தையும், சிப்பியும் முத்தும் சரியான வாழ்க்கையையும் குறிக்கின்றன. எவனொருவன் நேரத்தைச் சரியாகக் கையாள்கிறானோ, அவன் தனது வாழ்க்கையையும் சரியாகக் கையாளுகிறான். எவனொருவன் பணத்தைக் கணக்கிட்டு செலவு செய்கிறானோ அவனிடமிருந்து பணம் சற்றும் குறைவதே இல்லை. எவன் ஒருவன் சரியான இடத்தில், சரியான நேரத்தில் தேவையான வார்த்தைகளைப் பேசுகிறானோ அவன் வாழ்வில் நல்ல நிலையை அடைகிறான்” என்று அந்தப் பொருட்கள் உணர்த்தும் ரகசியத்தைக் கூறி முடித்தார் துறவி.
இதைக் கேட்ட வியாபாரி, “சாமி, நீங்கள் மூன்று ரகசியங்கள்தான் கூறியுள்ளீர்கள். மீதம் ஒன்று...” என இழுத்தான்.
உடனே துறவி, "இந்த மூன்றையும் என்னிடம் நீ கேட்டால் மட்டும் போதாது. இதை உனது வாழ்விலும் கடைப்பிடித்தால்தான் வெற்றி கிடைக்கும்" என்று கூறி விட்டு, அந்த ஊரிலிருந்து புறப்பட்டு வேறு ஊருக்குச் சென்றார்.
துறவி கூறியது போல், நாமும் நேரத்தையும் பணத்தையும் வார்த்தையையும் சரியாகப் பயன்படுத்துகிறோமா, நமக்கு பிறர் கூறும் அறிவுரைகளை நம் வாழ்வில் செயல்படுத்திப் பார்க்கிறோமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படிச் சிந்தித்துப் பார்த்தாலே நீங்கள் அடைய வேண்டிய இலக்கை எளிதாக அடைந்து விடலாம்.