

வீட்டிற்குள் அழகுக்காகவும் மன அமைதிக்காகவும் நாம் ஆசையாகச் செடிகளை வளர்க்கிறோம். பச்சைப்பசேல் என இருக்கும் அந்தச் செடிகள், திடீரென ஒருநாள் இலைகள் உதிர்ந்து, வாடிப் போய் நிற்பதைப் பார்க்கும்போது நமக்கு மிகுந்த வேதனை உண்டாகும். இதற்கு முக்கியக் காரணம் நம் கண்களுக்கு எளிதில் புலப்படாத மிகச்சிறிய பூச்சிகள்தான்.
நாம் கடைகளில் இருந்து செடிகளை வாங்கி வரும்போதே இந்தப் பூச்சிகள் அதில் ஒட்டிக்கொண்டு நம் வீட்டிற்குள் நுழைகின்றன. வீட்டிற்குள் இருக்கும் தட்பவெப்ப நிலை அவற்றுக்குப் பெருக்கமடையச் சாதகமாக அமைந்து விடுகிறது. உங்கள் செல்லச் செடிகளைக் காப்பற்ற வேண்டுமானால், இந்த 5 வகை பூச்சிகளை அடையாளம் காண்பதும் அவற்றை அழிப்பதும் மிக அவசியமாகும்.
1. சிலந்திப் பூச்சிகள்:
இலைகளின் அடியில் மிகச்சிறிய புள்ளிகள் போலவும், மெல்லிய வலை பின்னியது போலவும் இருந்தால் அது சிலந்திப் பூச்சிகளின் வேலை. இவை செடியின் சாற்றை உறிஞ்சி இலைகளை வெளுக்கச் செய்துவிடும். இதைக் கட்டுப்படுத்தச் செடியை வெளியே எடுத்துச் சென்று வேப்ப எண்ணெய் அல்லது பாத்திரம் கழுவும் திரவம் கலந்த நீரைத் தெளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து சில வாரங்களுக்குச் செய்து வந்தால் மட்டுமே இவற்றை முழுமையாக விரட்ட முடியும்.
2. மாவுப்பூச்சிகள்:
செடியின் தண்டு மற்றும் இலைகளில் பஞ்சு போன்ற வெள்ளை நிறத்தில் ஒட்டிக்கொண்டிருப்பவை மாவுப்பூச்சிகள் ஆகும். இவை மிகவும் மெதுவாக நகரக்கூடியவை. ஆரம்பக்கட்டமாக இருந்தால், ஆல்கஹால் நனைத்த பஞ்சைக் கொண்டு இவற்றைத் துடைத்து எடுக்கலாம். அதிக அளவில் பரவியிருந்தால் பூச்சிக்கொல்லி சோப் பயன்படுத்துவது சிறந்தது. கட்டுப்படுத்த முடியாத நிலையில் செடியை அப்புறப் படுத்துவதே மற்ற செடிகளுக்குப் பாதுகாப்பு.
3. வெள்ளை ஈக்கள்:
சிறிய வெள்ளை நிற இறக்கைகளைக் கொண்ட இவை, இலைகளின் சாற்றை உறிஞ்சுவதோடு பிசுபிசுப்பான திரவத்தையும் சுரக்கின்றன. செடியை வெளியே கொண்டு சென்று பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிப்பதன் மூலம் இவற்றை விரட்டலாம். இவை மிகவும் பிடிவாதமானவை என்பதால், செடியின் மண் பகுதியிலும் மருந்து இட வேண்டியிருக்கும்.
4. செதில் பூச்சிகள்:
மீன் செதில்கள் அல்லது சிறிய பழுப்பு நிறக் குமிழ்கள் போலத் தோற்றமளிக்கும் இவை மிகவும் ஆபத்தானவை. இவற்றின் மீது இருக்கும் கடினமான ஓடு மருந்துகள் உள்ளே செல்வதைத் தடுக்கும். இவை குஞ்சுகளாக இருக்கும்போது வேப்ப எண்ணெய் தெளித்தால் பலன் கிடைக்கும். முற்றிய நிலையில் இவற்றை அழிப்பது கடினம் என்பதால், அந்தச்செடியை எறிந்துவிடுவது புத்திசாலித்தனம்.
5. ஈக்கள்:
ஈரப்பதமான மண்ணைச் சுற்றி மொய்க்கும் சிறிய ஈக்கள் இவை. இவை செடியை நேரடியாகத் தாக்குவதை விட, மண்ணில் உள்ள சத்துக்களை உண்கின்றன. இவை மிகவும்த் தொந்தரவாக இருக்கும். செடிக்குத் தண்ணீர் ஊற்றுவதைக் குறைத்து, மண்ணை உலர வைப்பதே இதற்குச் சிறந்த தீர்வு. அல்லது மஞ்சள் நிறப் பிசுபிசுப்பு அட்டைகளை வைத்து இவற்றைப் பிடிக்கலாம்.
பூச்சிகளின் தாக்குதல் அதிகமாகி, செடி மீள முடியாத நிலைக்குச் சென்றால், அதைத் தூக்கி எறிவதற்குத் தயங்கவேண்டாம். அது மற்ற செடிகளைக் காப்பாற்ற உதவும். இயற்கையான பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்தி, உங்கள் வீட்டுத் தோட்டத்தைப் பசுமையாக வைத்துக்கொள்ளுங்கள்.