

இரவில் நாம் அசந்து தூங்கும்போது நம் உடலில் இருந்து நமக்கே தெரியாமல் இரத்தத்தை உறிஞ்சி எடுக்கின்றன மூட்டை பூச்சிகள். சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மூட்டை பூச்சிகளின் தாக்கம் மிக அதிகமாகவே இருந்தது. நம்முடைய ஆழ்ந்த இரவு நேர தூக்கத்தை கெடுக்கும் காரணிகளில் முதன்மையாக இருப்பது கொசு. ஆனால், இப்போதைய சூழ்நிலையில் நாம் பெரும்பாலான கொசு விரட்டிகளைப் பயன்படுத்தி, கொசுக்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்து கொண்டிருக்கிறோம். ஆனால், நாம் தூங்கும்போது நமக்கே தெரியாமல் நம்முடைய உடலிலிருந்து இரத்தத்தை உறிஞ்சி எடுக்கும் ஒட்டுண்ணிகளாக மூட்டை பூச்சிகள் இன்றளவும் இருக்கத்தான் செய்கின்றன.
முன்பெல்லாம் இந்த ஒட்டுண்ணிகளின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால், காலப்போக்கில் நிறைய பூச்சிக் கொல்லிகளின் வரவு காரணமாக இந்த ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும், ஆடம்பரமான ஹோட்டல்கள், ஸ்பாக்கள், பல்பொருள் அங்காடிகள், ரயில் சுரங்கப் பாதைகள், திரையரங்குகள் போன்ற இடங்களில் இவற்றின் எண்ணிக்கை குறையவில்லை என்றே சொல்லலாம்.
இது மட்டுமல்லாமல், ஒரு சில வீடுகளையும் கூட இந்த மூட்டை பூச்சிகள் ஆக்கிரமிப்பு செய்து கொண்டுதான் இருக்கின்றன. காலம் காலமாக, மனிதர்கள் வாழும் அனைத்து இடத்திலும் இந்த இரத்த உறிஞ்சி ஒட்டுண்ணிகள் கூடவே பயணித்து கொண்டுதான் வருகின்றன. இந்தப் பூச்சிகளுக்கு மூட்டை பூச்சி என்ற பெயர் எப்படி வந்ததென்று தெரியுமா? முகட்டுப்பூச்சி மற்றும் மோட்டுப்பூச்சி என்றழைக்கப்பட்ட இவை பேச்சுவழக்கில் மூட்டை பூச்சிகள் என மாறி அழைக்கப்படுகின்றன. அக்காலத்தில் மரத்தால் ஆன முகட்டுவளை, உத்தரங்களைக் கொண்ட கூரை வீடுகளின் உச்சியிலும் முகட்டு இடுக்குகளில் பெரும்பாலும் இவை காணப்பட்டதால், 'முகட்டுப்பூச்சி' என்றழைக்கப்பட்டன.
ஏறத்தாழ 1990ம் ஆண்டின் நடுப்பகுதியில், வளரும் நாடுகளில் இந்த மூட்டை பூச்சிகளின் தொந்தரவு ஓரளவுக்கு ஒழிக்கப்பட்டது. ஆனால், சில பூச்சிக்கொல்லி மருந்துகளின் வீரியம் இழப்பு மற்றும் பூச்சி கட்டுப்பாடு நடவடிக்கைகளில் பின்னடைவு போன்ற பல்வேறு காரணங்களால் பெரும்பாலான நகரங்களை இந்த பூச்சிகள் மறுபடியும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன.
நன்றாக முதிர்ச்சி அடைந்த ஒரு மூட்டைப் பூச்சியின் நீளம் 5 மி.மீ. அளவுக்கு இருக்கும். இவை முட்டை வடிவில் மற்றும் தடையான உருவத்தை கொண்டிருக்கும். உணவை உட்கொள்ளாத நேரத்தில், இவை சிறிய கரப்பான் பூச்சி போன்ற வடிவத்தில் இருக்கும். வாய்ப்பகுதியில் நமது இரத்தத்தை உறிஞ்சுவதற்கு ஏற்றவாறு ஒரு குழாய் இருக்கிறது. மூட்டை பூச்சிகள், அவற்றின் உடல் எடையை விட 6 மடங்கு கூடுதலான இரத்தத்தை சுமார் 3 முதல் 10 நிமிடங்களுக்குள் உறிஞ்சக்கூடிய சக்தியை பெற்றிருக்கின்றன. பெரிய பூச்சிகள் சிவப்பு நிறத்திலும், சிறிய பூச்சிகள் மஞ்சள் - வெள்ளை நிறத்திலும் காட்சியளிக்கும்.
நம் வீட்டிலோ அல்லது ஹோட்டலிலோ அல்லது பொது இடங்களிலோ உள்ள கட்டிலில் விரிசல்களோ அல்லது ஓட்டைகளோ இருந்தால், அந்த இடங்களில் இவை மறைந்திருக்கும். நாம் தூங்கும்போது வெளியே வந்து இரத்தத்தை உறிஞ்சி விட்டு, மீண்டும் தங்களுடைய இடத்திற்கே சென்று ஒளிந்து கொள்ளும். ஒருவேளை, நம்மை மூட்டைப் பூச்சி கடித்திருந்தால், அந்த இடத்தில் கரும்புள்ளிகள் தோன்றலாம். சரும அரிப்பு, அழற்சி போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம்.
‘மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டையே கொளுத்திய கதையாக இருக்கிறது’ என்ற பழமொழியை கூட நாம் அடிக்கடி கேட்டிருப்போம். அந்த அளவுக்கு பெருந்தொந்தரவை தரக் கூடியவைதான் இந்த மூட்டை பூச்சிகள். ஒரு பெண் மூட்டைப் பூச்சி தனது வாழ்நாளில் கிட்டதட்ட 500 முட்டைகளை இடும். இந்த 500 மேலும் பெருகி, வளர்ந்து கொண்டே போகும்.
இந்த பூச்சிகளை நம்மால் முற்றிலும் நீக்க முடியாது. ஏன் தெரியுமா? இவற்றால் உணவருந்தாமல் நீண்ட காலம் உயிர் வாழ முடியும். இவற்றிற்கு உயிர் வாழ உணவு ஒரு பொருட்டாக இருப்பதில்லை. உயிர் வாழ்வதில் இவற்றுக்கு எந்தவொரு சிக்கலும் இல்லாத காரணத்தால், உணவு இல்லாதபோதும் இவை இறந்து போவதில்லை. சரி, மூட்டைப் பூச்சிகளை நீக்க நமக்கு கை கொடுக்கும் சில மூலிகை வீட்டு வழிமுறைகளைப் பற்றி பார்க்கலாமா?
புதினா இலைகளின் வாசனை என்றால் மூட்டை பூச்சிகளுக்கு ஆகாது. ஆகவே, படுக்கையிலும், படுக்கை அறையிலும் சிறிதளவு புதினா இலையை வைத்தால் நல்லது. சிவப்பு மிளகாய் பொடி சிறந்த மூட்டைப்பூச்சி விரட்டியாகக் கருதப்படுகிறது. இந்தப் பொடியை பூச்சிகள் ஒளிந்திருக்கும் இடங்களில் தூவி விடுங்கள். லாவெண்டர் வாசனை இருக்கும் இடங்களில் மூட்டைப் பூச்சிகள் வருவதில்லை. ஆகவே, படுக்கை அறையில் லாவெண்டர் பெர்ஃப்யூமை பயன்படுத்துங்கள். லாவெண்டர் போலவே ரோஸ்மேரி வாசனையையும் மூட்டைப்பூச்சிகளால் தாங்கிக் கொள்ள முடியாது. ஆகவே, ரோஸ்மேரி ஸ்ப்ரேவை பயன்படுத்தியும் மூட்டைப் பூச்சிகளை நீக்கலாம்.
மருத்துவ குணங்கள் மட்டுமல்லாமல், மூட்டைப்பூச்சிகளை நீக்கும் குணங்களும் யூகலிப்டஸ் எண்ணெயில் இருக்கின்றன. தூங்கும் பகுதிகளில் சிறிது யூகலிப்டஸ் எண்ணெய்யை தெளித்து விடவும். யூகலிப்டஸ் எண்ணெயுடன் சிறிதளவு ரோஸ்மேரி மற்றும் லாவெண்டர் எண்ணெய்களையும் சேர்த்து கலந்து தெளிக்கலாம். அவ்வப்போது, படுக்கை அறைகளையும், படுக்கை, கட்டில், தலையணை, விரிப்பு ஆகியவற்றை சுத்தம் செய்வதோடு மட்டுமல்லாமல், மேறகூறிய எளிமையான முறைகளையும் பின்பற்றினால் கண்டிப்பாக மூட்டை பூச்சிகளின் தொல்லைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்து கொள்ளலாம்.
வெளியிடங்களுக்குச் செல்லும்போதும் கையில் மேலே குறிப்பிட்ட எண்ணெய்களை எடுத்துச் செல்லவும். ஹோட்டல்களில் தூங்கும்போது படுக்கையில் இந்த எண்ணெய்களை தடவி விட்டு தூங்கினால் மூட்டை பூச்சிகளின் தொல்லையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.