

பைக் ஓட்டுபவர்கள் திடீர் மழையில் அல்லது மழைக்காலங்களில் ரெயின்கோட் (Raincoat) இல்லை என்றால் என்ன செய்யலாம்? சில காரணங்களால் ரெயின்கோட் உபயோகிக்க முடியவில்லையா? ரெயின்கோட் இல்லாமல் எப்படி சமாளிக்கலாம் என்பதை இப்பதிவில் காண்போமே.
எதிர்பாராத மழையில் ரெயின்கோட்(Raincoat) இல்லாமல் சவாரி செய்வது கடினமானதாகத் தோன்றலாம். ஆனால், சில உத்திகளைக் கொண்டு பைக் ஓட்டுபவர்கள் இந்தச் சூழ்நிலையைத் திறம்படக் கையாள முடியும். முதலாவதாக முடிந்தவரை மழைக்காலங்களில் பாலியஸ்டர் (polyester) அல்லது நைலான் (nylon) போன்ற விரைவாக உலரும் (quick-dry) துணிகளை அணிவது மழை நீர் உடலில் படுவதைக் குறைக்க உதவும்.
பருத்தி (cotton) உடைகள் ஈரப்பதத்தைத் தக்கவைத்து உங்களுக்கு சிரமங்களைத் தரலாம். இந்நேரங்களில் வைசார் (Visor) கொண்ட முழு முக ஹெல்மெட் (full-face helmet) அணிவது மிக முக்கியம். இது உங்கள் முகத்தை மழை நீரில் இருந்து பாதுகாக்கிறது. சாலையின் மேலுள்ள பார்வையையும் (Road Visibility) மேம்படுத்துகிறது. உங்கள் ஹெல்மெட்டில் தெளிவான அல்லது வைசாரே இல்லையென்றால் பைக் சவாரி கண்ணாடியை (clear riding goggles) உபயோகித்துக் கொள்ளுங்கள்.
வண்டியை ஓரங்கட்ட சரியான இடம் இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? மழையிலிருந்து ஒதுங்கி நிற்க சரியான இடம் கிடைக்காதபோது, உங்கள் சவாரி (riding style) பாணியை மாற்றிக்கொள்ள வேண்டும். டயரின் க்ரிபை (Grip) பராமரிக்க முதலில் வேகத்தைக் குறைக்க வேண்டும் (Reduce speed to maintain traction), திடீர் பிரேக்கிங்கைத் தவிர்க்கவும் (avoid sudden braking); மழைநீருடன், பிற வண்டிகளில் இருந்து வெளியேறிய எண்ணெய் குவிப்பு (oil accumulation) பொதுவாக ரோட்டின் ஓரத்தில் அதிகமாக இருக்கும். அதனால் இந்நேரங்களில் தகுந்த அபாய விளக்குகளை(hazard lights) மற்ற ஓட்டுநர்களுக்கு தெரியும்படி பயன்படுத்தி நீரில்லாத ரோட்டின் நடுவிலே சென்று கொள்ளலாம்.
எப்போதும் உங்கள் பைக்கில் இருக்க வேண்டியது
உங்கள் பைக்கின் சீட் அடியிலோ அல்லது அதன் சேமிப்பகத்தில் (bikes storage) ஒரு சிறிய துண்டு அல்லது மைக்ரோஃபைபர் துணியை(Microfiber cloth) எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள். இது மழை நேரங்களில் ஈரத்தை துடைக்க அல்லது பைக்கின் த்ரோட்டிலில் (accelerator) உபயோகிக்க உங்கள் கைகளை உலர வைக்க உதவுகிறது.
அதோடு பிளாஸ்டிக் பைகள் அல்லது நீர்ப்புகா பைகள்(waterproof pouches) உங்கள் தொலைபேசி, பணப்பை, பிற ஆவணங்களைப் பாதுகாக்கும். பெரிய குப்பைப் பைகள் (large garbage bags) அல்லது பைக் இருக்கைக்கு அடியில் தலை நுழைய ஒரு துளை உள்ள நீண்ட ஆடைகளை (ponchos) வைத்துக் கொள்ளுங்கள்.
கவனம் முக்கியம்! இறுதியாக, மன தயார் நிலை முக்கியமானது. மழையின்போது நாம் அமைதியாகவும், கவனம் செலுத்தியும், விழிப்புடனும் இருப்பது முடிவெடுப்பதையும், பாதுகாப்பையும் மேம்படுத்துகிறது. உடல் உபகரணங்கள் உங்களைப் பாதுகாக்க உதவும், அதேவேளையில் நீங்கள் எவ்வளவு சிறப்பாக சூழ்நிலையை மாற்றியமைக்கிறீர்கள் என்பதை உங்கள் மனநிலைதான் தீர்மானிக்கிறது. இந்த நுட்பங்களுடன் பைக்கர்ஸ் மழைக்கோட் கைவசம் இல்லை என்றாலும் கூட மழையில் நம்பிக்கையுடன் சவாரி செய்யலாம்.