
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள். அந்த பெயரை கேட்டாலே அச்சம் வரும். கிராமப்புறமாக இருந்தாலும், நகர்புறமாக இருந்தாலும் மழைக்காலம் தொடங்கிவிட்டால் அழையா விருந்தாளியாக நம் வீட்டிற்குள் பாம்பு வந்துவிடும். உலகளவில் இந்தியாவில் தான் பாம்பு கடியால் அதிக அளவு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என தரவுகள் சொல்கின்றன. போதிய அளவு பாம்பு பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் தான் உயிரிழப்புகள் ஏற்படுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.
இந்நிலையில் பாம்பு மனிதர்களை தானாக சென்று கடிப்பது இல்லை. மனிதர்களால் ஆபத்து ஏற்படும் போது தன்னை தற்காத்து கொள்வதற்காக பாம்பு மனிதனை கடிக்கிறது என்று சொல்லப்படுகிறது. விஷபாம்போ, விஷமில்லாத பாம்போ பார்த்தவுடன் நடுங்கதான் செய்வோம். ஆனால் அப்படி செய்யாமல் தப்பிக்க என்ன வழி என தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பொதுவாக வீடுகளுக்குள் பாம்பு வருவதை தடுக்க நீங்கள் கற்றாழை செடி வளர்க்கலாம்.
அதே போன்று வீட்டுக்குள் ஏதேனும் பொந்துகள் இருந்தால் அதை மூடி வைத்துவிடுங்கள்.
இதையும் தாண்டி உங்கள் வீட்டிற்குள்ளோ, சாலையிலோ பாம்பு பார்த்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
பாம்பை பார்த்தவுடன் நீங்கள் முதலில் அச்சம் கொள்ள கூடாது. பாம்பு எதிரில் வரும் திசையில் அசைவுகளை செய்யாதீர்கள். பாம்பு இருக்கும் திசையில் ஓடவோ, ஏதாவது பாம்பு மீது போடவோ முயற்சிக்காதீர்கள். பெரும்பாலான பாம்புகள் உங்கள் அருகில் வருவதை விரும்புவதில்லை. நீங்கள் அதை துன்புறுத்தவில்லை என்றால் அதுவாகவே சென்றுவிடும்.
பாம்பு இருப்பதை உணர்ந்துவிட்டால் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகள், செல்லப்பிராணிகள் என எதையும் பாம்பின் அருகில் அனுமதிக்காதீர்கள். கத்தி அலற வேண்டாம். லைட்டை ஆஃப் செய்வதன் மூலம் ஆபத்தை குறைக்கலாம். ஆனாலும் பாம்பை கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும். பாம்பு பயப்பட கூடிய எந்த விஷயத்தையும் செய்ய கூடாது. இதன் மூலம் அது உங்களை தாக்க நேரிடும். பாம்பு இருக்கும் திசையில் இருந்து வேறு திசையில் செல்லுங்கள். யாரையாவது உதவிக்கு அழையுங்கள்.
பாம்பு உங்களை எதிர்நோக்கி வராமல் இருப்பதற்கு நீங்கள் ஒரு நீளமான குச்சியை எடுத்து தட்டுங்கள். பாம்புக்கு காதுகள் இல்லை என்பதால் அதிர்வுகள் இல்லாத இடத்தை நோக்கி ஓடும். நீங்கள் குச்சிகளை வைத்து தட்டுவதன் மூலம் அது மாற்று திசைக்கு ஓடும். அது வெளியே ஓடி விட்டால் நல்லது. வேறு ஏதேனும் அறைக்கு சென்றுவிட்டால் அதை அடைத்து விட்டு மற்றவர்களை உதவிக்கு அழைக்கலாம்.
இனி அச்சம் கொள்ளாமல் இது போன்று செய்து பாம்பை விரட்டுங்கள். பாம்பை கொல்வதும் சரியான தீர்வு இல்லை. தற்காப்புக்காக செய்தாலும், மற்ற உயிர்களை துன்புறுத்துவது தவறே ஆகும்.