பாம்ப பாத்து பயப்படாதீங்க, இது நம்ம ஊரு பாம்பு!

Snakes
Snakes
Published on

பாம்பு! பாம்பு! என்று சொன்னாலே நம்மவர்கள் துண்டைக் காணோம்! துணியைக் காணோம்! என்று ஓடுவதே வழக்கம். அதனால் தான் ‘பாம்பென்றால் படையும் நடுங்கும்!’ என்ற பழமொழி நம்மிடையே பிரசித்தம்!

மழைக்காலம் வந்து விட்டாலே பாம்புகளின் நடமாட்டமும் அதிகரித்து விடும்.பெரும்பாலும் பாம்புகள், வளைக்குள் வாழ்பவை! வளைகளுக்குள் மழை நீர் புகும்போது, அவை வளைகளை விட்டு வெளிவந்து, பாதுகாப்பான இடங்களைத் தேடுவதாலேயே இந்த நிலை!

பாம்புகளில் பலவகை இருந்தாலும், எல்லாப் பாம்புகளும் விஷம் கொண்டவை அல்ல. நம் பகுதிகளில் உள்ளவற்றில் நான்கு வகையே விஷ வகையறாக்கள்!

  • நல்ல பாம்பு;

  • கட்டு விரியன்;

  • கண்ணாடி விரியன்

  • சுருட்டை

ஆகியவையே அவை!

பாம்புகள் மனிதர்களைத் துரத்திக் கடிப்பதெல்லாம் இல்லை! அவற்றின் பாதையில் நாம் குறுக்கிடுகையில், அவை தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே முயன்று, ஓடும்.

‘மிதித்தால் கடிக்கும்! விதித்தால் கடிக்கும்!’ என்று கிராமங்களில் கூறுவார்கள்.

இரவில், மாட்டுக் கொட்டிலில் மாடால் மிதியுண்ட நல்ல பாம்பு என் தாத்தாவைக் கடிக்க, அவர் இறந்து போனார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்! மிதியும், விதியும் ஒன்றிணைந்ததாலோ!

வயது முதிர்ந்த நல்ல பாம்பு, யாரையும் கடிக்காமல் தனது விஷத்தைச் சேமிக்க, அது நாக ரத்தினமாக மாறி விடுமென்றும், வயதான காலத்தில் நள்ளிரவில் அந்த நாகரத்தினத்தைக் கக்கி விட்டு, அதன் ஒளியில் தன் இரையைத் தேடுமென்றும் கூறக் கேட்டிருக்கிறேன். நாக ரத்தினத்தைக் கவர முயல்பவர்கள், கையில் சாணி உருண்டைகளுடன் காத்திருந்து, அந்த நாகரத்தினத்தின் மேல் சாணி உருண்டையைப் போட, ஒளியை இழந்த பாம்பு இறந்து விடும் என்றும் கூறுவார்கள்.

ஆனால் அவை எல்லாமே கட்டுக் கதைகள் என்கிறது நவீன விஞ்ஞானம்!

விஷமில்லாத பாம்புகள் நிறைய உண்டு.

  • சாரை;

  • பச்சை;(கண் கொத்தி)

  • ஓலை;

  • கொம்பேறி மூக்கன்;

  • தண்ணீர்ப் பாம்பு

என்று லிஸ்ட் நீளும்!

சாரை நீண்டு வளர்வதால், பார்த்தவுடனேயே பயத்தை ஏற்படுத்தும்.

பச்சைப் பாம்பைக் கண்கொத்திப் பாம்பு என்றும் அழைப்பதுண்டு. அது ஓணாண், பல்லி போன்றவற்றின் சிறு குஞ்சுகளைச் சாப்பிட்டு வளர்வதால், நமது கண்ணிலுள்ள கரு விழியையும் சிறு குஞ்சுகள் என்று கொத்த வாய்ப்புண்டு என்பதாலேயே, மக்களை விழிப்புடன் இருக்கச் செய்ய, அது கண்களைக் கொத்தி விடும் என்று எச்சரிக்கை விடப்பட்டதாம். மேலும், அதன் தலை முன்புறம் கூர்மையாகவே இருப்பதால், மக்களுக்கு அந்தப் பயம் உண்டாம். ஆனால் அது மனிதக் கண்களைக் கொத்தியதாக எந்த வரலாறும் இல்லை! கிராமங்களின் மூங்கில் மரங்களில், நிறைய பச்சைப் பாம்புகளைப் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
வீட்டிற்குள் பாம்பு! அச்சச்சோ என்ன செய்வது? வராமல் எப்படி தடுப்பது ?
Snakes

‘ஓலைப் பாம்பு ஒன்றை அடித்தால் ஒன்பது வரும்!’ என்பார்கள். வீட்டோரங்களில் வளரும் இதைப் பாதுகாக்கவே அவ்வாறு சொல்லப் பட்டிருக்க வேண்டும். மற்றபடி, இது ஓர் அப்பாவி!

மரங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள இடங்களிலும் கொம்பேறி மூக்கன்களைக் காணலாம். அது கடித்த பிறகு, மரத்திலேறி அமர்ந்தபடி, சுடு காட்டில் புகைச்சல் தெரிந்த பிறகுதான் இறங்கும் என்றெல்லாம், கட்டுக் கதைகள் அந்தக் காலத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன! அவை அனைத்தும் கப்சாக்கள்தானாம்!

தண்ணீர்ப் பாம்பு டெல்டா விவசாயிகளின் நண்பன்!காலுக்குள்ளும், கைக்குள்ளும், குளிக்கும்போது தலையின் மேலும், நண்பர் கூடவே இருப்பார்! யாம் ஒரு தடவை,மாலை கல்லூரியிலிருந்து வீடு திரும்புகையில், வழக்கம் போலத் திருக்குளத்தில் ஏதோ ஞாபகத்தில் இறங்க, மண் துறையில் படுத்திருந்த அவரை மிதித்து விட, கணுக்காலுக்கு மேல் ஒரே போடாகப் போட்டு விட்டுத் தண்ணீருக்குள் டைவ் அடித்து விட்டார்! அம்மா பயந்து, சிவப்பு மிளகாய் கொடுத்ததெல்லாம் வேறு கதை!

அதிக வெப்ப நேரங்களில், ஷூஸ், கார், ப்ரிட்ஜ், ஏ.சி என்று குளிர்ச்சியான இடங்களுக்குப் பாம்புகள் டூர் போவதால், நாம் பாதிக்கப்படுகிறோம்.

சென்னையில், குடியிருப்புப் பகுதிகளில் பாம்புகள் வந்தால் அவற்றைப் பிடிக்க வனத்துறை ஏற்பாடுகளைச் செய்து, அப்பகுதிகளுக்கானவர்களின் செல் நம்பரையும் அறிவித்துள்ளது. பிடிக்கப்படும் பாம்புகளை, நன்மங்கலம் மற்றும் திருப் போரூர் அருகிலுள்ள காட்டுப் பகுதிகளில் விட்டு விடுகிறார்களாம்!

இதையும் படியுங்கள்:
பாம்பு என்றால் படையே நடுங்கும்... ஆனா இவனுக்கு மட்டும் பயமே கிடையாது! எவன்டா அவன்?
Snakes

எதிர்பாரா விதமாகப் பாம்பு கடித்து விட்டால், அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்வதே உடனடியாகச் செய்ய வேண்டியதாம். அங்கு ஒரு சிறு சோதனை மூலம் கடித்தது விஷமுள்ள பாம்பா என்பதையறிந்து, அதற்குண்டான சிகிச்சை அளிப்பார்களாம். பயம் அறவே கூடாதாம்!

ஏனெனில் விஷமில்லா பாம்பு கடித்து, பயத்தில் இறந்தவர்களும் உண்டாம்; விஷப் பாம்பால் கடிக்கப்பட்டு பயமின்மை காரணமாகப் பிழைத்தவர்களும் உண்டாம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com