நமது உறவினர் ஒருவர் அல்லது நண்பர்களாலோ நாம் தவிர்க்கப்படுகிறோம் என்பதை ஒருசில அறிகுறிகளை வைத்து அறிந்து கொள்ளலாம். நம்மை ஒருவர் தவிர்க்கிறார் என்பதை தெரிந்துகொள்வது மிகவும் சுலபம்தான். அது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நட்பு பாராட்டாமல் இருப்பது: பழகிய தோஷத்திற்காக வேண்டாத விருப்பமாக பேசுவது, அதுவும் முகம் கொடுத்து பேசாமல் வேறெங்கோ பார்த்துக்கொண்டு பேசுவார்கள். நீங்கள் வீட்டிற்கு வருகிறீர்கள் என்று தெரிந்தவுடன் வெளியே சென்று விடுவார்கள். தன்னை மிகவும் பிசியாகக் காட்டிக்கொள்வார்கள். நம்மிடம் ஒருவர் நட்பு பாராட்ட விரும்பவில்லை என்பது தெரிந்தவுடன் நாமே விலகி விடுவது நல்லது. விருப்பம் இல்லாதவர்களை வற்புறுத்தி வலியச் சென்று நட்பு பாராட்டுவது நல்லதல்ல. இதனால் நம்முடைய தன்மானம் கெடுவதுடன் சந்தோஷமும் கெடும். நமக்குப் பிடிக்காதவர்களை நம் முன் தூக்கி வைத்துப் பேசுவார்கள். தேவையில்லாமல் அவர்களைப் பாராட்டுவதும், அவர்களைப் பற்றி மூச்சுக்கு முன்னூறு முறை புகழ்வதுமாக இருப்பார்கள்.
பட்டும் படாமலும் இருப்பது: நாம் வலிய சென்று பேசினாலும் கூட எதிலும் பட்டும் படாமலும் மேம்போக்காகப் பேசுவார்கள். அதில் உண்மையான அக்கறை எதுவும் இருக்காது. எப்பொழுதும் நன்றாகப் பேசுபவர்கள் பேச்சை குறைத்துக்கொண்டு கேட்பதற்கு ஒற்றை வார்த்தையில் பதில் சொல்வது என காரணமே இன்றி பேச்சை குறைத்துக் கொள்வார்கள். குட்மார்னிங் மெசேஜ் போட்டால் பதில் வராது. மெசேஜ் அனுப்பினால் அதை படித்ததற்கான புளு டிக் மார்க் வராது. போன் செய்தால் எடுத்து பேச மாட்டார்கள்.
பேச்சில் உற்சாகம் குறைந்து சலிப்பு தட்டும்: பேச்சில் சுவாரசியம் காட்டாமல் இருப்பது, அடிக்கடி கை கடிகாரத்தைப் பார்ப்பது, செயற்கையாக சிரிப்பது என்று அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரியும். எப்பொழுதும் நம்மிடம் நட்பாக இருக்க விரும்புபவர்கள் ஏதேனும் முக்கியமான காரணங்களால் பேச முடியாமல் போனால் அதற்கான காரணத்தைத் தெரிவிப்பார்கள். ஆனால், நம்மைத் தவிர்க்க நினைக்கும் மனிதர்களோ அதற்கான முயற்சியில் ஈடுபடாமல் இருப்பதுடன், அவர்களின் பேச்சில் உற்சாகம் குறைந்து சலிப்பு காணப்படும். நம்மைப் பற்றி யாராவது பாராட்டிப் பேசினால் காதில் வாங்கிக்கொள்ளாமல் இருப்பது அல்லது நம்மைப் பற்றி தவறாக மற்றவர்களிடம் பேசுவது என்று இருப்பார்கள்.
நேரில் சந்திப்பதை தவிர்ப்பது: நாம் இருக்கும் இடத்திற்கு வருவதைத் தவிர்ப்பார்கள். முடிந்தவரை நாம் செல்லும் இடங்களுக்கு அவர்கள் வருவதைக் குறைத்துக் கொள்வார்கள். அவர்களது எந்த விஷயத்தையும் நம்மிடம் பகிர்ந்துகொள்ள விரும்ப மாட்டார்கள். ஒரு இறுக்கமான சூழ்நிலையை உண்டாக்குவார்கள். அப்படிப்பட்டவர்களிடமிருந்து நாசூக்காக நாமே நகர்ந்து சென்று விடுவது நல்லது.
பார்த்தும் பார்க்காதது போல் செல்வது: எதிர்பாராதவிதமாக நேரில் பார்க்க வேண்டி வந்தால் பார்க்காதது போல் சென்று விடுவதும். நாமே வலிய சென்று பேசினாலும் அதிகம் பேசாமல் ஒற்றை வரியில் பதில் அளிப்பது, வேலை பளு போன்ற காரணங்களைச் சொல்லி தவிர்ப்பதும், செல்போனில் தொடர்பு கொண்டால் கூட எடுக்க மறுப்பதும், கேட்டால் சிக்னல் சரியில்லை, சார்ஜ் இல்லை என்று ஏதாவது ஒரு காரணம் சொல்வதுமாக இருப்பார்கள்.
இதை எப்படி சமாளிப்பது? நம்மைத் தவிர்க்க நினைப்பவர்களிடமிருந்து நாம் ஒதுங்கி விடுவது நல்லது. அத்துடன் யாருக்கும் நம் வாழ்வில் அதிக அளவு முக்கியத்துவம் தராமல் பார்த்துக்கொண்டால் தவிப்புகள் வராமல் இருக்கும். ‘மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்’ என்ற ஔவையின் கூற்றுப்படி நம்மை மதிக்காதவர்களை தேடிச் சென்று பார்ப்பதையோ, பேசுவதையோ நிறுத்தி விடுவது நமக்கு நல்லது. நம்முடைய உண்மையான அன்பைப் புரிந்துகொண்டு அவர்களாகவே நம்மைத் தேடி வரும் வரை காத்திருக்கலாம்!