
நீங்கள் யதார்த்தமாக பேசுகின்ற விஷயங்கள் அல்லது பிற செயலியில் தேடுகின்ற விஷயங்கள் உங்கள் சமூக வலைதளங்களில் எப்படி தோன்றுகிறது? அதைத் தடுக்க முடியுமா?
மெட்டா (பேஸ்புக்) Meta, ட்விட்டர் (எக்ஸ்) X போன்ற நவீன தளங்களோடு மேலும் சில ஆப்ஸ், இணையதளங்களில் நாம் சாதாரணமாக பேசிய அல்லது நமக்குப் பிடித்த விஷயங்களைக் காணமுடியும். பார்த்தவுடன் சற்று பதற்றமாக இருந்தாலும் இது முழுக்க முழுக்க நம் அன்றாட நடத்தைகளை (Behavior) வைத்துத்தான் திரையில் தோன்றுகிறது.
இதற்கென்று பல்வேறு மேம்பட்ட வழிமுறைகள் (Advanced algorithms) மற்றும் தரவு சேகரிப்பு (Data collection) மூலம் டிஜிட்டல் தளங்கள் இதை செயல்படுத்துகின்றன. சொல்லப்போனால் சமூக வலைத்தளம், பிரவுசர், ஷாப்பிங் இணையதளங்கள் எல்லாம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கண்காணிப்பு அமைப்புகளாகச் செயல்படுகின்றன.
உங்கள் ஆர்வங்கள் எவ்வாறு அவர்களால் உணரப்படுகிறது?
உங்கள் விருப்பங்களைத் தீர்மானிக்க பல தளங்கள் மறைமுகமாக உங்களுடைய தகவல்களைச் சேகரிக்கின்றன.
உங்களின் பிரவுசிங் பழக்கம் (Browsing habits), இன்ஸ்டாவில் நீங்கள் லைக் போடும் போஸ்ட் (Interactions with posts), அதில் பின்தொடரும் கணக்குகள், அனைத்து இணையதளங்களில் குறிப்பிட்ட வகை விஷயங்களில் நீங்கள் செலவழித்த நேரம் அடிப்படையில் இதைச் செய்கின்றன.
கூடுதலாக, விளம்பரங்களுடனான ஈடுபாடு (Engagement with ads), உங்கள் இருப்பிடத் தரவு (Location data) ஆகியவை வைத்தும் உங்கள் ஆர்வங்களைத் தெரிந்துகொள்கின்றன.
தன்னிச்சையாக எடுக்கப்படும் தகவல்கள்:
நீங்கள் ஆப்ஸ் மற்றும் இணையதளங்களைப் பதிவேற்றம் செய்தவுடன் உங்கள் தகவல்களை எடுக்க இயல்பாகவே சில அம்சங்களை (Default Options) செயல்படும்படி செய்துவிடுவர். எடுத்துக்காட்டிற்கு எல்லா ஆப்ஸ்களும் தங்கள் குக்கீகள் (Cookies) மூலம் பல தளங்களில் உங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும்.
மெட்டாவின் ஆஃப்-பேஸ்புக் செயல்பாடு (Off-Facebook Activity) நீங்கள் பயன்படுத்தும் பிற ஆப்ஸ்மிடமிருந்து சில தரவை எடுத்துக்கொள்கிறது.
உங்களால் இதைத் தடுக்க முடியுமா?
பல்வேறு ஆப்ஸ்களில் உள்ள சில அம்சங்களை நீங்கள் முடக்குவதன் மூலம் உங்களின் தரவு பகிரப்படுவதைக் கட்டுப்படுத்தலாம்.
குக்கீகளைத் தடுப்பது (Blocking Cookies): உங்களைப் பற்றிய கண்காணிப்பு ஓரளவு தடுக்கப்படுகிறது.
இருப்பிடக் கண்காணிப்பை முடக்குவிது (Turning Off Location Tracking): உங்கள் இருப்பிடத்தின் அடிப்படையில் சில பரிந்துரைகளைக் குறைக்கிறது.
விருப்பமுள்ள விளம்பரங்கள் (Customizing Ad Preferences): மெட்டா மற்றும் ட்விட்டர் போன்ற இணையத்தளங்களில் நீங்கள் எந்த வகையான விளம்பரங்களைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதை நீங்களே தீர்மானிக்கலாம்.
தரவுப் பகிர்வு கட்டுப்படுத்துதல் (Restricting Data Sharing): மூன்றாம் தரப்பினருடன் உங்கள் தகவல்கள் பகிர்வதைக் குறைக்க ஒவ்வொரு ஆப்ஸில் இருக்கும் Privacy settings மூலம் கட்டுப்படுத்தலாம்.
குரல் வழி தேடல் (Voice recognition): உங்களுக்கு குரல் வழி தேடல் வசதி அவசியம் இல்லாத பட்சத்தில் உங்கள் போனின் Privacy settings மூலம் ஆஃப் செய்துகொள்ளலாம்.
எந்த ஒரு இணையதளமும் உங்களின் தகவல்களை ஒட்டுக் கேட்கவோ, திருடவோ இல்லை, அவர்களின் லாப நோக்கத்திற்காக இதை வணிக ரீதியாக கருதி நம் தரவுகளை அவர்களுக்குள் மாற்றிக்கொள்கின்றன. எனவே, உங்களுக்கு இதில் விருப்பம் இல்லை என்றால் மேலே குறிப்பிட்டதுபோல், அதற்கும் அந்தந்த இணைத்தளங்கள் சில வசதிகளைத் தருகின்றன.