வீட்டுல எவ்வளவு தங்கம் வெச்சிருக்கீங்க? இந்த லிமிட் தாண்டுனா ஆபத்து... அரசாங்க விதி என்ன சொல்லுது?

Gold
Gold
Published on

இந்தியர்களுக்கும் தங்கத்துக்கும் உள்ள உறவு என்பது வெறும் முதலீடு என்பதைத் தாண்டியது. அது ஒரு கலாச்சார அடையாளம், பரம்பரைச் சின்னம், மற்றும் அவசர காலங்களில் கைகொடுக்கும் உற்ற நண்பன். கல்யாணம் முதல் காதுகுத்து வரை தங்கம் இல்லாமல் எந்த விசேஷமும் முழுமையடையாது. இப்படி நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கும் தங்கத்தை வீட்டில் எவ்வளவு வைத்திருக்கலாம் என்பதற்கு அரசாங்கம் சில விதிகளை வைத்திருக்கிறது என்பது நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. வாங்க, அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

கணக்குக் காட்ட முடிந்தால், கட்டுப்பாடுகள் இல்லை!

வருமான வரித்துறையின் முதல் மற்றும் முக்கியமான விதி இதுதான்: நீங்கள் வாங்கிய தங்கத்திற்கு முறையான வருமான ஆதாரம் மற்றும் வாங்கியதற்கான ரசீதுகள் உங்களிடம் இருந்தால், நீங்கள் எவ்வளவு தங்கம் வேண்டுமானாலும் உங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளலாம். அதற்கு எந்த உச்ச வரம்பும் கிடையாது. 

உதாரணமாக, உங்கள் சம்பளப் பணம், தொழில் மூலம் கிடைத்த லாபம், விவசாய வருமானம் போன்றவற்றில் இருந்து நீங்கள் வாங்கிய தங்கத்திற்கு முறையான ஆவணங்கள் இருந்தால், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அதேபோல, சட்டப்பூர்வமாக உங்களுக்குப் பாகப்பிரிவினை மூலம் கிடைத்த பரம்பரை நகைகளுக்கும் உரிய ஆவணங்கள் இருந்தால், எந்தப் பிரச்சனையும் இல்லை. சுருக்கமாகச் சொன்னால், "பில் இருந்தால் பயம் இல்லை".

இதையும் படியுங்கள்:
தங்க நகை சேமிப்புத் திட்டங்கள்: எந்த திட்டத்தில் சேருவது சிறந்தது?
Gold

ஆவணங்கள் இல்லாத நகைகளுக்கு என்ன வரம்பு?

"எங்க பாட்டி போட்ட நகைக்கெல்லாம் நான் எங்க போய் பில் தேடுறது?" என்று நீங்கள் கேட்பது புரிகிறது. பல தலைமுறைகளாகக் கைமாறி வரும் நகைகளுக்கு ஆதாரம் கேட்பது சாத்தியமில்லை என்பதை அரசாங்கமும் புரிந்துகொண்டுள்ளது. அதற்காகவே, முறையான வருமான ஆதாரம் காட்ட முடியாத சூழ்நிலையில், ஒரு குறிப்பிட்ட அளவு தங்கத்தை வருமான வரிச் சோதனையின் போது அதிகாரிகள் பறிமுதல் செய்ய மாட்டார்கள் என்று சலுகை அளித்துள்ளது. அந்த வரம்புகள் இதோ:

  • திருமணமான ஒரு பெண் 500 கிராம் வரை வைத்திருக்கலாம்.

  • திருமணமாகாத ஒரு பெண் 250 கிராம் வரை வைத்திருக்கலாம்.

  • ஒரு ஆண் (திருமணமானவர்/ஆகாதவர்) 100 கிராம் வரை வைத்திருக்கலாம்.

இந்த அளவுக்குள் இருக்கும் தங்கத்திற்கு உங்களிடம் பில் இல்லாவிட்டாலும், அதிகாரிகள் அதைக் கைப்பற்ற மாட்டார்கள்.

இதையும் படியுங்கள்:
2025 இயற்பியலுக்கான நோபல் பரிசு: குவாண்டம் வித்தைகள் இப்போது நம் கையில்..!
Gold

பரிசு மற்றும் வரிகள்!

தங்க நகை வாங்கும்போது அதன் மதிப்புக்கு 3% ஜி.எஸ்.டி. மற்றும் செய்கூலிக்கு 5% ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும். இது தவிர, உங்களுக்குக் கிடைக்கும் பரிசுகளுக்கும் வரி விதிமுறைகள் உள்ளன. உங்கள் நெருங்கிய உறவினர்கள், பெற்றோர், சகோதர சகோதரிகள் தரும் தங்கப் பரிசுக்கு வரி கிடையாது. ஆனால், நண்பர்கள் அல்லது மற்றவர்களிடமிருந்து ஒரே ஆண்டில் ₹50,000-க்கு மேல் மதிப்புள்ள தங்கம் பரிசாக வந்தால், அதை உங்கள் வருமானமாகக் காட்டி வரி செலுத்த வேண்டும். இருப்பினும், திருமணத்தின் போது கிடைக்கும் பரிசுகளுக்கு இந்த வரியிலிருந்து முழு விலக்கு உண்டு.

தங்கத்தின் மீது முதலீடு செய்வதும், அதை ஆபரணமாக அணிந்து மகிழ்வதும் நமது உரிமை. ஆனால், அந்த உரிமை சட்டத்தின் எல்லைக்குட்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com