
தங்கம் வாங்குவதற்கான தங்கத் திட்டம் (Gold Buying Schemes) என்பது மாதந்தோறும் ஒரு தொகையை செலுத்தி, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்கம் வாங்குவதாகும். இது ஒரு பெரிய தொகையை ஒரே நேரத்தில் செலுத்த முடியாதவர்களுக்கு தங்கம் வாங்குவதை எளிதாக்குகிறது. இந்த திட்டங்களின் நன்மைகள் என்னவென்று பார்த்தால் நெகிழ்வுத் தன்மை (Flexibility), மாதத் தவணைகள், பெரிய முதலீடு தேவையில்லை மற்றும் தங்கம் வாங்குவதை எளிதாக்குகிறது.
தங்கத் திட்டங்களின் வகைகள் (Gold Schemes):
தங்க சேமிப்பு திட்டம்:
இது ஒரு வங்கியில் தொடர் வைப்புத் தொகை போன்றது. இதில் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி இறுதித் தவணை செலுத்திய பிறகு தங்கத்தை வாங்கலாம்.
நகைக் கடையின் திட்டங்கள்:
சில நகைக் கடைகள் வாடிக்கையாளர்களுக்கு நகைகளை சேமிக்க உதவும் பல்வேறு தங்கத் திட்டங்களை வழங்குகின்றன. இது நகைகளில் முதலீடு செய்ய ஒரு சிறந்த வழியாகும்.
நகைகள் வாங்குவதற்கு முன்பு செய்கூலி, சேதாரம் குறைக்கும் கடைகளை தெரிந்து கொண்டு தேர்ந்தெடுப்பது நல்லது. சில திட்டங்கள் சேதார மற்றும் செய்கூலி கட்டணங்களில் தள்ளுபடியை வழங்குகின்றன. தங்க நகை சீட்டு திட்டங்களில் சேர்ந்து மாதந்தோறும் சிறிய தொகையை சேமித்து மொத்தமாக வாங்குவது என பல வழிகள் உள்ளன. அதற்கு முதலில் சரியான கடையை தேர்வு செய்ய வேண்டும்.
கடை தேர்வு:
செய்கூலி மற்றும் சேதாரம் குறைவாக உள்ள கடைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு பிரபலமான கடைகளில் சென்று விவரங்களை சேகரிப்பது மற்றும் அவற்றில் எந்த கடையில் குறைவாக செய்கூலி சேதாரம் உள்ளது என்பதை தெரிந்து கொள்வது அவசியம். சில கடைகள் சீட்டு திட்டங்கள் சேர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நகை வாங்கினால் செய்கூலி மற்றும் சேதாரத்தில் தள்ளுபடி வழங்குகின்றன. எனவே முதலில் எந்த கடை என்பதை தேர்ந்தெடுப்பது அவசியமாகிறது.
சந்தையின் ஏற்ற இறக்கம்:
தங்கத்தின் விலை தொடர்ந்து மாறுபடும். எனவே தங்கத்தின் விலை குறையும் பொழுது வாங்குவது மிகவும் லாபகரமானதாக இருக்கும். தங்கத்தின் விலையை தினமும் கூர்ந்து கவனித்துக் கொண்டே வந்து விலை குறையும் நாட்களில் நகைகளை வாங்கலாம்.
நகைச் சீட்டு திட்டங்கள்:
மாதந்தோறும் சிறிய தொகையை சேர்த்து, குறிப்பிட்ட காலம் கழிந்ததும் மொத்தமாக தங்கம் வாங்கலாம். இதில் சில திட்டங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவை வழங்குகின்றன. 11 மாதங்கள் அல்லது 12வது மாதம் நகை பெறும் வகையில் திட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு திட்டத்திற்கும் அதன் சொந்த விதிகள் மற்றும் விதிமுறைகள் உள்ளன. எனவே ஒரு திட்டத்தில் சேரும் முன்பு, திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாகப் படித்து சேரவும்.
Hallmark சரிபார்த்தல்:
தங்கம் வாங்கும் பொழுது அதன் தூய்மை மற்றும் தரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். BIS ஹால்மார்க் உள்ள தங்கத்தை வாங்குவது நல்லது. நகையின் தரத்தை உறுதிப்படுத்த அதன் மீது உள்ள ஹால்மார்க்கை சரி பார்க்கவும். ஹால்மார்க்குகள் உள்ள நகைகள் தரமானவை என்பதற்கு ஒரு அடையாளமாகும்.
பழைய நகைகளை மாற்றுதல்:
பழைய தங்க நகைகளை மாற்றும் பொழுது, பழைய தங்கத்தின் மீதான சலுகைகளை கவனித்து அதிக லாபம் பெற முயற்சிக்கலாம். பழைய நகைகளை மாற்றுவதற்கு அவற்றை விற்பதன் மூலம் பணம் பெறுவது அல்லது ஒரு நகைக்கடையில் புதிய நகைகளுடன் பரிமாற்றம் (exchange) செய்வது ஆகிய இரண்டு வழிகள் உள்ளன. நம் தேவையைப் பொறுத்து இதனை தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனால் எதையும் செய்வதற்கு முன்பு அதனுடைய சந்தை மதிப்பை தெரிந்து கொள்வதும், பழைய தங்க நகைகளை புதிய நகைகளாக மாற்றும் வசதிகள் உள்ள நம்பகமான நகைக் கடைகளை தேர்ந்தெடுப்பதும் அவசியம்.