
விடுமுறையை கொண்டாடித் தீர்ப்பவர்கள் பலர் இருந்தாலும் சிலருக்கு விடுமுறைகள் என்பது மனதிற்குப் பிடித்தம் இல்லாமல் இருக்கிறது. அதுவும் குடும்பம், நண்பர்கள் இல்லாமல் தனிமையில் இருப்பவர்களுக்கு ஹாலிடே ப்ளூஸ் எனப்படும் விடுமுறை மனச்சோர்வு ஏற்படும். இதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
விடுமுறையில் வரும் மனச்சோர்விற்கான காரணங்கள்
1. அதிகப்படியான உணவு:
வேலை நாட்களில் பரபரப்பாக கிளம்ப வேண்டியிருப்பதால் அரையும் குறையுமாக உண்டு விட்டு ஓடுபவர்கள் தான் அதிகம். ஆனால் விடுமுறை நாட்களில் நிதானமாக உண்பதால் அதிகப்படியாக உண்ண நேரலாம். தனிமையில் இருக்கும் சிலர் டிவி பார்த்தபடி அடிக்கடி ஆரோக்கியமற்ற ஸநாக்ஸ் மற்றும் குப்பை உணவுகளை உண்பார்கள். இதனால் உடல் மந்தத்தன்மை அடைகிறது. உடலுடன் சேர்ந்து மூளையும் மந்தத் தன்மை அடைகிறது. எந்த வேலையும் செய்ய பிடிக்காமல் ஓரிடத்திலேயே அமர்ந்து கொள்கிறார்கள். இதனால் இன்னும் அதிக மன அழுத்தத்துக்கு வித்திடுகிறது.
2. மது அருந்துதல்:
விடுமுறை நாட்களில் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் அதிகப்படியாக மதுவை அருந்துவார்கள். இது மூளையை பாதித்து மனச்சோர்வை அதிகமாக்கும்.
3. தூக்கமின்மை:
மறுநாள் விடுமுறை என்பதால் முதல் நாள் இரவு வெகு நேரம் விழித்திருந்து விட்டு உறங்கச் செல்லும் போது அது தூக்க அட்டவணையை பாதிக்கிறது. மறுநாள் பகலில் நேரம் கழித்து எழும்போது உடல் மிகவும் சோர்வுக்கு உள்ளாகி இருக்கும். மனமும் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகும்.
4. தனிமை:
குடும்பம் மற்றும் நண்பர்கள் இல்லாமல் தனிமையில் இருக்கும் நபர்களுக்கு விடுமுறையை எப்படி செலவழிப்பது என்கிற எண்ணம் மனச்சோர்வையும் பதட்டத்தையும் அதிகரிக்கும். அவர்கள் கடந்த காலத்தை நினைத்து வருந்தத் தொடங்குவார்கள். நம்மைத் தவிர மற்றவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு மனச்சோர்வை அதிகரிக்கும்.
விடுமுறை மனச்சோர்வின் அறிகுறிகள்
1. பசியின்மை அல்லது அதிகமாக பசித்தல்:
எந்த வேலையையும் சுறுசுறுப்பாக செய்யாமல் இருப்பதால் பசிக்காது அல்லது தேவையே இல்லாமல் நிறைய சாப்பிடத் தோன்றும்.
2. தூக்கம்:
ஒரு வரைமுறை இன்றி அதிகமாக தூங்குவது அல்லது தூங்காமலேயே நேரத்தை போக்குகிறேன் பேர்வழி என்று டி.வி செல்போனை பார்த்துக் கொண்டே இருப்பது.
3. கவனம் செலுத்துவதில் சிரமம்:
தூக்கமும் உணவும் சரியாக இல்லாத போது கவனம் செலுத்துவதில் சிரமம் உண்டாகும். எந்த விஷயத்தையும் கவனமாக செய்யப் பிடிக்காமல் போகும்.
4. எரிச்சல் மனநிலை:
மேற்கண்ட அறிகுறிகள் அனைத்தும் ஒருவருக்கு எரிச்சல் கொண்ட மனநிலையை உருவாக்கும்.
சமாளிக்கும் வழிகள்:
1. தனிமையை தவிர்த்தல்:
மனச்சோர்வுக்கு முக்கிய காரணமே தனிமை தான். அதனால் தனியாக இருக்காமல் நண்பர்களுடன் அல்லது உறவினர்களுடன் சேர்ந்து இருக்கும் பழக்கத்தைக் கடைபிடித்தால், விடுமுறை மனச்சோர்வின் அளவு குறையும்.
2. உடற்பயிற்சி:
உடல் செயல்பாடு மனச்சோர்வை அகற்றுவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஜிம் செல்லக் கடினமாக இருந்தால் வீட்டிலேயே அல்லது வீட்டைச் சுற்றி நடக்கலாம். மொட்டை மாடியில் அல்லது பார்க்கில் சென்று நடக்கலாம். இது மனசோர்வை மிக எளிதாக தவிர்க்க உதவும்
3. ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள்:
வெறுமனே டிவி பார்ப்பது, செல்ஃபோன் பார்ப்பது என்று இல்லாமல் ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கு நேரம் ஒதுக்கலாம். தோட்டத்தை சீர்படுத்துவது, புத்தகம் வாசிப்பது, இசை கேட்பது, யோகா செய்வது அல்லது ஆதரவற்றோர் இல்லத்திற்குச் சென்று சில மணி நேரங்கள் சேவை செய்வது போன்றவை மன அழுத்தத்தை குறைக்கும்.
இதையெல்லாம் செய்தால் எப்போ விடுமுறை வரும் என்று மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவீர்கள்.