குழந்தையின் சொல்ல முடியாத உணர்வுகள்: பெற்றோர் எப்படி கேட்டு புரிந்துகொள்வது?

குழந்தையின் நடத்தை பின்னால் இருக்கும் பயம், ஏமாற்றம், குழப்பம் போன்ற உணர்வுகளை கவனித்து கேட்டு புரிந்துகொள்ளும் பொறுப்பை பெற்றோர் ஏற்க வேண்டிய காலம் இது
childrens-unspoken-feelings
childrens-unspoken-feelings
Updated on

ல்லாக் குழந்தைகளும் சொற்களால் தங்கள் மனதில் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தமாட்டார்கள். சில குழந்தைகள் தங்கள் உணர்வுகளைச் சொல்லத் தெரியாமல் செய்கையில் வெளிப்படுத்துவார்கள். உதாரணத்திற்கு, கோபம் கூட சில சமயங்களில் கோபமாகவும் வெளிப்படும், சில சமயங்களில் அழுகையாகவும் சில நேரங்களில் அமைதியாக ஒதுங்கிச் செல்வதாகவும் வெளிப்படலாம்.

திடீரென்று பள்ளிக்குச் செல்ல மறுப்பது, அடிக்கடி சின்னச் சின்ன விஷயங்களுக்கு அழுவது, உடன் பிறந்தவர்களுடன் சண்டையிடுவது, எப்பொழுதும் ஓர் எரிச்சலுடனேயே இருப்பது, காரணமின்றி பிடிவாதம் பிடிப்பது - இவை அனைத்தும் ஒழுக்கமின்மை அல்லது செல்லக் குறும்பு என்று நாம் கருதக்கூடாது. சில நேரங்களில் அது குழந்தையின் மனதில் நடக்கும் குழப்பம் அல்லது பதற்றத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.

எல்லா உணர்வுகளுக்கும் குழந்தைகளிடம் சொல்ல அல்லது வெளிப்படுத்தச் சரியான வார்த்தைகள் இருக்காது. பயம், ஏமாற்றம், பொறாமை, சோர்வு, கவனச்சிதைவு போன்றவை அவர்களின் நடத்தையாகக் கூட வெளிப்படலாம். அவ்வாறு நடக்கும்போது உடனே கண்டிப்பது அல்லது ஒப்பீடு செய்வதற்குப் பதிலாக, ஒரு நிமிடம் நின்று கவனிப்பது மிக முக்கியம். ஏனெனில், கண்டிப்பதும் அடுத்தவர்களுடன் அவர்களை ஒப்பிடுவதும் அவர்களை இன்னும் தங்களுக்குள் சுருங்கச் செய்து விடுகிறது.

பெரியவர்களாகிய நமக்கு அந்த ஒரு சின்ன கவனம் போதுமானது. "ஏன் இப்படி நடக்கிறாய்?" என்று கேட்பதற்கு பதிலாக, "உனக்கு என்ன ஆனது?" அல்லது "உனக்கு என்ன உதவிவேண்டும்?" என்று கேட்கலாம். அந்த ஒரு கேள்வியே குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை நம்மிடத்தில் தரும்.

குழந்தைகளைத் திருத்துவது அவசியம்தான்; ஆனால் அவர்களது நடத்தையின் பின் இருக்கும் உணர்வைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதும் அதே அளவிற்கு அவசியமாகிறது, இந்தக் காலகட்டத்தில். ஏனெனில், பல நேரங்களில் அவர்கள் தவறாக நடக்கவில்லை, தங்களால் முடிந்த ஒரு வழியில் அதைச் சொல்ல முயற்சி செய்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
நந்தவனத்து பூக்கள்: குழந்தைகளை வளர்க்கும் கலையும்... பெற்றோரின் கடமையும்!
childrens-unspoken-feelings

அவர்கள் சொல்ல வருவதைக் கேட்க முயற்சிப்பது, அதற்கு முதல் படி. முடிந்தவரை அவர்களுடன் நேரம் செலவிடுவது, அன்றைய தினம் அவர்கள் என்னென்ன உணர்வுகளைக் கடந்தார்கள் என்பது போன்ற கேள்விகளை அவர்களுடன் சிறிது நேரம் நடந்து கொண்டோ அல்லது விளையாட்டின் மூலமாகவோ கேட்பது குழந்தைகளுக்கு நாம் அவர்களுடன் இருக்கும் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. இவ்வாறு நடத்தப்படும் குழந்தைகள் அவர்கள் வளரும் பொழுது எதையும் எதிர்கொள்ளும் மனதைரியம் மற்றும் மனப்பக்குவம் பெறுகிறார்கள். என்ன நடந்தாலும் நம்முடன் நம் பெற்றோர் அல்லது பெரியவர்கள் இருக்கிறார்கள் என்ற தைரியம் அவர்களை ஜெயிக்க ஊக்குவிக்கும்.

எந்த ஒரு பிரச்னை அல்லது குழப்பம் வந்தாலும் பேசித்தீர்க்கும் ஆற்றலை தருகிறது. இது அவர்களின் எதிர்கால உறவுகளுக்கும் அதில் வரும் சிக்கல்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் சமாளிக்க உதவும். பெற்றோர் களும் வீட்டிலுள்ள பெரியவர்களும் குழந்தைகளை மட்டம் தட்டாமல் அவர்களை அவர்களின் உணர்வுகளைப் பேசுவதற்கு ஊக்குவித்தாலே அவர்களின் பாதி பிரச்னைகள் மற்றும் மனக்குழப்பங்கள், தடுமாற்றம் மாறி தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள உதவும்.

தினமும் குழந்தைகளுடன் அவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் நேரம் செலவிட முயற்சி செய்து பாருங்கள், உங்கள் குழந்தைகளின் மனதிலும் உலகத்திலும் நீங்கள்தான் ஹீரோ அல்லது ஹீரோயின்.

logo
Kalki Online
kalkionline.com