ஷாப்பிங்கில் தேவையின்றி பண விரயத்தைத் தடுப்பது எப்படி?

How to avoid spending money unnecessarily on shopping
How to avoid spending money unnecessarily on shoppinghttps://www.thebeach.ae

ஷாப்பிங் செய்வது என்றால் பலருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு. அதுவும் தற்போது ஆன்லைன் ஷாப்பிங் வந்து விட்ட பிறகு தேவை இருக்கிறதோ இல்லையோ பொருட்களை வாங்கிக் குவிப்பது சிலரின் பழக்கமாகவே மாறிவிட்டது. இவர்கள் பணத்தை ஷாப்பிங்கில் செலவு செய்துவிட்டு மாதக் கடைசியில் கையில் பணம் இல்லாமல் தவிப்பார்கள். ஏதாவது ஒரு அவசர செலவு வந்து விட்டால் அதை சமாளிக்க தெரியாமல் விழி பிதுங்கி நிற்பார்கள். ஷாப்பிங்கில் தேவையில்லாமல் பணம் விரயமாவதைத் தடுப்பது எப்படி என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. முதலில் ஷாப்பிங் செய்ய கிளம்பும் முன் அந்தப் பொருள் உண்மையிலேயே நமக்குத் தேவைதானா என பலமுறை யோசிக்க வேண்டும். உதாரணமாக, வீட்டில் இருக்கும் பழைய மிக்ஸி அல்லது கிரைண்டர் வாங்கி சில ஆண்டுகள் ஆகிவிட்டது, பழையதாகி விட்டது என்பதற்காக அதை மாற்ற வேண்டியதில்லை. அதில் ஏதாவது ஸ்பேர் பார்ட்ஸ் பாழாகி விட்டால் அதை மாற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனமே தவிர, புதிய மிக்ஸி வாங்குவது அல்ல. ஆசை என்பது வேறு, தேவை என்பது வேறு. ஆசைக்காக பணத்தை வாரி இறைக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. எனவே, தேவை என்று கருதினால் மட்டுமே அந்தப் பொருளை வாங்க வேண்டும்.

2. சிலர் பீரோ நிறைய புடைவைகளை அடுக்கி வைத்துவிட்டு, புதிது புதிதாக வாங்கிக்கொண்டே இருப்பார்கள். தொடர்ந்து புதிய உடைகளை வாங்குவதை விட ஏற்கெனவே உள்ளதை அணிந்து மகிழலாம். மன நிறைவை வளர்த்துக்கொள்வது அதிகப்படியான செலவுகளைக் குறைக்க உதவும்.

3. எப்போதாவது அரிதாக நிகழ்ச்சிகளுக்கு, திருமண விசேஷங்களுக்கு அணிந்து கொண்டு செல்வதற்காக பல ஆயிரம் ரூபாயில் பட்டுப் புடைவை வாங்குவதை விட, நல்ல டிசைன்கள் வைத்த கிராண்ட் லுக் தரும் செயற்கை பட்டு குறைந்த விலையில் கிடைக்கும். அதை எடுத்துக் கொள்ளலாம்.

4. ஆண்கள் சிலர் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை தன்னிடம் உள்ள போனை மாற்றி விட்டு, புதிது வாங்குவார்கள். ஒவ்வொரு வருடமும் புதிய புதிய மாடலில் புதிய அம்சங்களுடன் செல்போன் விற்பனையாகிக் கொண்டுதான் இருக்கும். கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏன் பெரும் தொகையை செலவு செய்ய வேண்டும்? நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் செல்ஃபோனை மாற்றி விட்டு புதிது வாங்குவது தேவையில்லாத வேலை.

5. வீட்டில் திருமணம் அல்லது வேறு ஏதாவது சுப நிகழ்ச்சி என்றால் கடைசி நிமிடத்தில் போய் அவசர அவசரமாக பர்ச்சேஸ் செய்யாமல் முன்கூட்டியே திட்டமிட்டு நான்கு ஐந்து கடைகளுக்குச் சென்று பார்த்து புடைவைகளை வாங்கலாம். இதனால் நிறைய பணத்தை மிச்சம் செய்யலாம்.

6. உடைகள் வாங்க செல்லும் முன் என்ன வாங்க வேண்டும் என்பதை தெளிவாக தீர்மானம் செய்துகொள்ள வேண்டும். ஒரு சிறிய காகிதத்தில் வாங்க வேண்டிய உடைகளை தெளிவாக பட்டியலிட்டுக் கொண்டு செல்ல வேண்டும். இத்தனை ரூபாய்க்குள்தான் இன்றைக்கு நிச்சயமாக நான் பர்சேஸ் செய்யப்போகிறேன் என்று உறுதியாக முடிவெடுத்துக் கொள்ளவும். உதாரணமாக 2000 ரூபாய்க்குள் புடைவை அல்லது சுடிதார் வாங்குவேன் என்று முடிவெடுத்துக் கொண்டால் அதற்கு மீறி வாங்கக் கூடாது. அந்தப் பணத்திற்கு உள்ளாகவே லைனிங் கிளாத் உள்ளாடைகள் என்று எல்லாவற்றையும் முடித்துக்கொள்வது உத்தமம்.

7. கிரெடிட் கார்டு பயன்படுத்துவதை விட ரொக்கமாக பணம் செலுத்தி வாங்கும்போது செலவுகள் குறையும். சிலர் கிரெடிட் கார்டை உபயோகப்படுத்தி ஏராளமாக ஷாப்பிங்கில் பணம் செலவு செய்து விட்டு பின்பு அதை திருப்பிக் கட்ட முடியாமல் கஷ்டப்படுவார்கள். அப்படியே கிரெடிட் கார்டில் வாங்கினால் அதை குறிப்பிட்ட நாட்களுக்குள் செலுத்தி விட வேண்டியது அவசியம்.

8. ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்பிற்காக எடுத்து வைத்துவிட்டு பின்புதான் வீட்டு செலவு செய்யவே தொடங்க வேண்டும். அதேபோல, பெரிய பட்ஜெட்டில் ஏதாவது பொருள் வாங்க வேண்டும் என்று நினைத்தால் உடனே ரொக்கமாக கொடுத்து வாங்காமல் அதை சற்று திட்டமிடலாம். ஒரு வாஷிங் மெஷின் அல்லது பிரிட்ஜ் வாங்க வேண்டும் என்று நினைத்தால் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து தனியாக வைத்து விடலாம். ஆறு மாதமோ அல்லது ஒரு வருடமோ கழித்து புதிய பொருட்கள் வாங்கும்போது சுமையும் தெரியாது பணமும் மொத்தமாக செலவழிந்து போகாது.

9. பிறர் நம்மைப் பார்த்து பாராட்ட வேண்டும் அல்லது பொறாமைப்பட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு உடைகளையோ அணிகலன்களையோ வாங்கிக் குவிப்பது வீண் வேலை. பிறரை பொறாமைப்பட வைப்பது நமது நோக்கம் அல்ல. எனவே, வருடத்தில் திருமண நாள், பிறந்த நாள் பொங்கல், தீபாவளி போன்ற விசேஷங்களுக்கு மட்டும் உடைகள் எடுப்பது புத்திசாலித்தனம். தள்ளுபடி காலங்களில் உண்மையிலேயே அவை தரமுள்ளவைதானா என்று பார்த்து தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளலாம். அதை வருடம் முழுவதும் வரும் விசேஷங்களுக்கு உடுத்திக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய 9 உணவுகள்!
How to avoid spending money unnecessarily on shopping

10. மளிகைக் கடை அல்லது டிபார்ட்மென்டல் ஸ்டோர்களுக்கு செல்லும்போது வீட்டிலேயே அழகாக பட்டியல் தயாரித்துக்கொண்டு செல்ல வேண்டும். இல்லை என்றால் கண்ணில் படும் பொருட்களை எல்லாம் வாங்கத் தூண்டும். அதுமட்டுமல்ல, ஆஃபர் என்று தேவை இல்லாமல் வாங்குவோம். அந்தப் பட்டியலில் உள்ளவற்றை மட்டும் வாங்கினால் போதும். எப்போதுமே ஷாப்பிங் கிளம்பினால் வீட்டிலிருந்து கொண்டு செல்லும் பணத்தில் மீதி ரூபாயை மிச்சம் பிடித்துக் கொண்டு வருவதுதான் புத்திசாலித்தனம்.

11. விற்பனை மற்றும் விளம்பரங்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்பும் மின்னஞ்சல்களை அன்சப்ஸ்கிரைப் செய்து கொள்வது மிகவும் நல்லது.

12. வீட்டில் இருக்கும் பொருட்களை, உடைகளை நிதானமாக பட்டியலெடுத்து, நம் வீட்டில் தேவைக்கு மேலேயே பொருட்கள் இருக்கிறதே என்ற மனநிறைவை பயிற்சி செய்ய வேண்டும். அப்படி இருக்கும்போது தேவையில்லாமல் மீண்டும் மீண்டும் பொருட்களை வாங்கிக் குவிக்கத் தோன்றாது. இதன் மூலம் நிறைய பணத்தை மிச்சம் பிடிக்கலாம். ஷாப்பிங்கில் பணம் விரயம் ஆவதைத் தடுக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com