எட்டிப்போகும் டீனேஜ் பிள்ளைகளை பாசத்தில் கட்டிப்போடுவது எப்படி?

Parents with teenage children
Parents with teenage childrenhttps://www.mydoh.ca
Published on

டீனேஜ் பிள்ளைகளின் பெரும்பாலான பெற்றோர்கள், ‘முன்ன மாதிரி என் பையன்/பொண்ணு என்கிட்ட ஒட்டுதலா இல்ல. விலகி விலகிப் போறாங்க. மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு’ என்று மனம் வருந்துவதுண்டு. என்ன நடக்கிறது டீனேஜ் பருவத்தில் பிள்ளைகளுக்கு? அவர்களை எப்படி வழி நடத்துவது என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

சிறு வயதில் அப்பா, அம்மா பேச்சை தட்டாமல் கேட்டுக்கொண்டு அவர்கள் பின்னே சுற்றிக் கொண்டிருக்கும் பிள்ளைகளின் டீன்ஏஜ் பருவத்தில், நடத்தையில் பல மாறுபாடுகள் தென்படுகின்றன. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி வந்து விடுகிறது. இதற்குக் காரணங்களும், தீர்வுகளும் என்ன?

1. தலைமுறை இடைவெளி: பிள்ளைகள் டீனேஜ் பருவத்தை அடையும்போது, அவர்களது உடல் மட்டுமல்ல. உள்ளமும் வளர்ச்சி அடைந்து அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்கிறது. பலவிதமான மனப் போராட்டங்களை, பள்ளியிலும் சமூகத்திலும் எதிர்கொள்கிறார்கள். எல்லாவற்றையும் அவர்கள் வெளிப்படுத்துவதில்லை. மாறாக, பெற்றோரிடம் எரிந்து விழுவது, கேட்ட கேள்விக்கு சரியாக பதில் சொல்லாதது, அவர்களை விட்டு விலகுவது, தனிமையை நாடுவது, நண்பர்களே முக்கியம் என்றிருப்பது என அவர்களுடைய பாதை வேறு கோணத்தில் நகர்ந்து செல்கிறது. இவற்றைப் பெற்றோர் புரிந்துகொள்ளாமல் இருக்கும்போது அங்கே தலைமுறை இடைவெளி உண்டாகிறது.

2. சுதந்திரம் தர வேண்டும்: டீனேஜ் பருவத்தில், தங்களுடைய தோற்றம், நடவடிக்கைகள் போன்றவை பிறரால் மதிப்பிடப்படும் என்பதை குறித்த அச்சம் பிள்ளைகளுக்கு இருக்கும். பெற்றோர்கள் அவர்களுடைய நடத்தை மாறுபாடுகளை எந்த விதமான தீர்ப்பும் சொல்லாமல் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களை இறுக்கிப்பிடித்தால் ஒரு கட்டத்தில் வெடித்து பெற்றோரிடம் இருந்து விலகி போவார்கள். எப்போதும் அவர்களை அதட்டுவது, அதிகாரம் செய்வது வேலைக்காகாது. டீனேஜ் பருவத்திற்கே உரிய விருப்பங்கள், ஆர்வம், நம்பிக்கையுடன் இருக்கும் பிள்ளைகளை பொருட்படுத்தாமல், தன்னுடைய விருப்பங்களையும் ஆர்வத்தையும் அவர்கள் மேல் திணிக்கும் போதுதான் பெற்றோரிடம் இருந்து முற்றிலுமாக அவர்கள் விலகிப் போகிறார்கள்.

3. நண்பர்களாக மாறுவது: வீட்டில் சத்தமாக குழப்பமோ. சண்டை சச்சரவோ இல்லாமல் அமைதியான ஒரு சூழ்நிலை இருக்க வேண்டும். பிள்ளைகள் பெற்றோரிடம் ஏதாவது பேச வரும்போது முழு மனதுடன் காது கொடுத்து, எந்தவிதமான குறுக்கீடுகளும் தீர்ப்புகளும் சொல்லாமல் அவர்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும். தன்னுடைய நண்பர்களைப் பற்றி பேசினால், மிக ஆர்வமாக கேட்க வேண்டும். தன் மனதின் குழப்பங்கள், அச்சங்கள் குறித்து தனது பெற்றோரிடம் திறந்த மனதுடன் பகிர்ந்து கொள்ளும் சுதந்திரம் பிள்ளைகளுக்கு இருக்க வேண்டும். நண்பர்களைப் பற்றி அவதூறாக பேசாமல், நேர்மறையாகப் பேச வேண்டும். சில நேரங்களில் தீய நண்பர்களால் ஏமாற்றப்பட்டு, அந்தக் குழந்தை மனம் வருந்தி இருக்கும்போது, ‘அவனோட சேராதேனு முன்னமே சொன்னேனே கேட்டியா?| என குத்திக் காண்பிக்காமல் அவர்களை ஆறுதல்படுத்தி அரவணைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய எழுதப்படாத சமூக விதிமுறைகள் என்னென்ன தெரியுமா?
Parents with teenage children

4. ஃபோனா? நானா? யார் முக்கியம்?: செல்ஃபோனை அதிக நேரம் பார்க்கும் பிள்ளைகளிடம், ’உனக்குப் ஃபோன்தான் முக்கியமா? நான் முக்கியமில்லையா?’ எனக் கேட்பதை விட, ‘கொஞ்ச நேரம் ஃபோன் பாரு; அப்புறம் என் கூட பேசு’ என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். அவர்களின் விருப்பத்திற்கேற்ப சினிமா, ஃபேஷன், ட்ரெண்டிங்கில் இருக்கும் விஷயங்களைப் பற்றிப் பேசினால், மிகவும் ஆர்வமாக பெற்றோரிடம் பேச முன்வருவார்கள்.

அணைப்பும் ஆறுதலும்: கோபமாக பிள்ளைகளைத் திட்டிவிட்டால் சிறிது நேரத்திலேயே அவர்களை அணைத்து ஆறுதல்படுத்தி, ‘உன் நல்லதுக்காகத்தான் நான் சொன்னேன்’ என்று சொல்லும்போது, பெற்றோர் மீது பிள்ளைகளுக்கு கோபம் வராது. உண்மையான பிரியத்தை வாய் வார்த்தையாக மட்டும் சொல்லாமல், செயலிலும் காட்டும்போது எளிதாகப் புரிந்துகொள்வார்கள் இளையோர்.

கேட்டதெல்லாம் வாங்கித் தந்தால் மட்டும் பிள்ளைகள் சந்தோஷப்பட மாட்டார்கள். அவர்களுடைய உணர்வுகளை மதித்து நடத்தினால், நெருங்கி வருவார்கள். பாசத்தில் கட்டுண்டு கிடப்பார்கள். அவர்கள் நமது பிள்ளைகள்தானே தவிர, நமக்கு அடிமைகள் அல்ல. தனக்கு விருப்பப்பட்ட படிப்பு, நட்பு, நேர்மறையான செயல்களுக்கு முழுமனதோடு பெற்றோர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com