

பள்ளி குழந்தைகளில் பத்தில் மூன்று பேர் வருடத்தில் குறைந்த பட்சம் ஐந்து நாட்கள் உடல் நலம் இன்றி விடுமுறை எடுக்க நேரிடுகிறது என்று ஆய்வு கூறுகிறது. ஐந்து முதல் 14 வரை உள்ள பள்ளி குழந்தைகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வு இது.
பல குழந்தைகளுக்கு ஜலதோஷம், ஜுரம், வயிற்றுப் பிரச்னைகள் சரும அலர்ஜி போன்றவை ஏற்படுகின்றன. இதனால் சிலர் தேர்வுகளை எழுத முடியாமல் போகிறது. இதற்கு டாக்டர்கள் சொல்லும் காரணம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்பேதே!
இதற்கு தனியாக மருந்துகள் சாப்பிட வேண்டும் என்று இல்லை. உணவிலும் வாழ்க்கை முறையிலும் சில எளிமையான தீர்வுகள் இருக்கின்றன என்று கூறுகின்றனர்.
ஆரோக்கியமான உணவு மிக அவசியம் முழுத்தானியங்கள், பருப்புகள், பால் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் என கலவையாக எல்லாவற்றையும் சாப்பிட வேண்டும்.
ஒரு நாளில் மிக முக்கியமான உணவு என்பது காலையில் சாப்பிடும் உணவுதான். ஆனால் பள்ளி செல்லும் அவசரத்தில் பல குழந்தைகள் காலை உணவை சாப்பிடுவதில்லை, எதையோ கொறித்தாலும், அது ஆரோக்கியமானதாக இருப்பதில்லை.
இந்த தவறை வீட்டில் உள்ளவர்கள் சரிசெய்ய வேண்டும்.
சாப்பிடுவதற்கு முன்பும், கழிப்பறையை பயன்படுத்திய பின்பும் நன்கு சோப்பு அல்லது ஹேண்ட் வாஷ் போட்டு கை கழுவ வேண்டும்.
இரவில் நேரம் கழித்து சாப்பிடுவதும், நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதையும் தவிர்க்கவேண்டும். இந்த இரண்டுமே தூக்கத்தை பாதிக்கும்.
குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்திக்கு தூக்கமும் பெரிதாக உதவுகிறது. பெரியவர்களுக்கு ஏழு மணி நேரம் தூக்கம் போதுமானது. 14 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகள் 8 முதல் 10 மணி நேரம் வரை தூங்கவேண்டும்.
தினமும் ஒரு மணி நேரமாவது குழந்தைகள் ஓடியாடி விளையாடவோ வேறு ஏதேனும் கேளிக்கைகளில் ஈடுபடவோ வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியையும், உடற்பயிற்சி மேம்படுத்துகிறது.
குழந்தைகளுக்கு டாக்டர்கள் கொடுக்கும் அட்டவணைப்படி தடுப்பூசிகளை போட மறக்கக்கூடாது. கிருமிகளால் ஏற்படும் பல நோய்களிலிருந்து தடுப்பூசிகேளே பாதுகாப்பது அளிக்கின்றன.
சில பள்ளிகளில் சுத்தமில்லாமல் இருக்கும் கழிப்பறைகளை பயன்படுத்த பல குழந்தைகள் விரும்புவதில்லை. அதனால் பகல் உணவையும், தண்ணீர் குடிப்பதையும் தவிர்க்கிறார்கள்.
இதன் விளைவாக வயிற்றுக் கோளாறுகளும், சிறுநீரக பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்கவேண்டும்.
மன அழுத்தமே உடல் ஆரோக்கியத்தை கெடுக்கிறது.
நோய் தொற்றுகளுக்கும் காரணமாகிறது குழந்தைகளை மகிழ்ச்சியாக வீட்டினர் வைத்திருங்கள். அவர்கள் ரிலாக்ஸ்செய்ய நேரம் கொடுங்கள். அவர்களிடம் மனம்விட்டு பேசுங்கள். அவர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படையாக உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை கொடுங்கள். பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இதனால் இடைவெளி விழுந்து விடக்கூடாது.
குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை இயல்பாக வலுப்படுத்துவதில் தாய்ப்பாலின் பங்கு முக்கியமானது
ஆனால் பல பெண்கள் குழந்தை பெற்ற சில மாதங்களிலேயே பணிக்கு செல்ல நேர்வதால், குழந்தைகளுக்கு முழுமையாக தாய்ப்பால் தர முடிவதில்லை. குழந்தைங்களுக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் கட்டாயமாக கொடுக்க வேண்டும். வாய்ப்பு இருந்தாலும் ஒரு வயது வரை தருவது நல்லது.
குடும்பத்தில் பெற்றோர்கள் இதனைத் தெரிந்துகொண்டு குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பேணுங்கள்.