எதற்கெடுத்தாலும் எரிச்சல்படும் மனநிலையை மாற்றுவது எப்படி?

How to change the mood of being irritated by anything?
How to change the mood of being irritated by anything?https://www.elementsbehavioralhealth.com

ரபரப்பான இன்றைய வாழ்க்கை முறையில் வேலை, வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்கள்தான் நாம். நிதானமாக நின்று எதையும் யோசிக்கவும் ரசிக்கவும் சூழ்நிலையோ அல்லது நேரமோ அனுமதிப்பதில்லை. அதனால் மனிதர்களுக்குள் சட்டென்று சிறிய விஷயத்திற்கு கூட எரிச்சலும் கோபமும் ஏற்படுவது சகஜமாகி வருகிறது. இப்படி எதனால் ஏற்படுகிறது, அதை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வின்படி மருத்துவர்கள், ஆசிரியர்கள், மேலாளர்கள் போன்றவர்களுக்கு எரிச்சல்படும் குணம் அதிகம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய ஆய்வின்படி மேற்குறிப்பிட்ட பணிகளில் இல்லாத பிற பணிகளில் இருக்கும் பெரும்பான்மையான மக்களுக்கும் சட்டென்று எரிச்சல்படும் குணம் அதிகரித்திருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப மனித மனமும் நிதானம், பொறுமை, அன்பு, கருணை போன்ற நல்ல இயல்புகளை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து எரிச்சல், கோபம், வன்மம், பொறாமை போன்ற உணர்வுகளுக்கு ஆளாகின்றன.

இதற்கு அடிப்படைக் காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால், ஒரு நபருக்கு தன் மேல் ஏற்படும் சுய பச்சாதாபமும் அனுதாப உணர்ச்சியும்தான் முதலிடத்தில் இருக்கின்றன.

குடும்பத்தில் கணவனும் மனைவியும் அடிக்கடி ஒருவர் மீது ஒருவர் எரிச்சல் அடைகின்றனர். 'நான் இந்தக் குடும்பத்திற்காக இத்தனை தூரம் உழைக்கிறேன். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறேன். ஆனால், என்னுடைய உணர்வுகளை இவர் புரிந்து கொள்ளவில்லை என்ற சுயபச்சாதாப எண்ணமே மற்றவர் மீது சட்டென எரிச்சல் பட வைக்கிறது.

அலுவலகத்தில் மேலதிகாரி தன் கீழ் பணிபுரியும் பணியாளர்களிடம் சட்டென்று எரிச்சல் படுவதற்குக் காரணம், 'நான் இவருக்கு உயர் அதிகாரியாக இருக்கிறேன். நான் ஆணையிடும்போது அதை செய்யாமல், இதை அவர்கள் புறக்கணிக்கிறார்கள். என்னுடைய கட்டளையை இவர்கள் மதிக்கவில்லை என்று எண்ணும்போது அவருக்கு பணியாளர்கள் மீது எரிச்சல் உருவாகிறது. தான் சொல்லும் கருத்துக்கு இணங்க மறுக்கும்போது சட்டென்று எரிச்சல் வருகிறது.

தன்னை விட ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் அல்லது சில விஷயங்களில் சிறந்தவராக இருக்கிறார் என்கிற பொறாமை எண்ணமும் எரிச்சலை ஏற்படுத்தும். தொழிலில் ஆர்வம் இல்லாமல் ஏனோதானோ என்று இருப்பவர்களுக்கும் பிறர் மீது தேவையில்லாமல் எரிச்சல் வரும். எதிலும் திருப்தி இல்லாத நபர்களும் பிறர் மீது சட்டென்று எரிச்சல் படுவார்கள்.

மன ரீதியான இந்தக் காரணங்களை தவிர உடல் ரீதியான சோர்வு, பலவீனம், தலைவலி, சளி நாள்பட்ட உடல் நோய்கள் போன்றவையும் பிறர் மீது சட்டென்று எரிச்சல் பட வைக்கிறது. சரியான தூக்கம் இல்லாமல் இருப்பவர்களும் சட்டென்று எரிச்சல் படுவார்கள். இவற்றுடன் வெளிப்புற சூழ்நிலைகளும் ஒருவருக்கு எரிச்சலை ஏற்படுத்துகின்றன. அலுவலகம் செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு சிரமப்பட்டு வந்து சேரும் பணியாளர்களும் சட்டென்று எரிச்சல் படுவார்கள். இனி, இவற்றைத் தவிர்க்கும் வழிமுறைகளைப் பற்றி பார்ப்போம்.

உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின்கள் மற்றும் புரதச்சத்து அடங்கிய சமச்சீரான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, தியானம் செய்து மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியம்.

இதையும் படியுங்கள்:
எப்சம் உப்பில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?
How to change the mood of being irritated by anything?

நன்றாக உழைத்த பின்பு சரியாக ஓய்வு எடுப்பதும் அவசியம். ஒரே நேரத்தில் பலவிதமான வேலைகளை மல்டி டாஸ்கிங் செய்வதும் மனதை பாதித்து எரிச்சலை ஏற்படுத்தும். தேவையில்லாமல் எண்ணங்களை அலைய விடாமல், செய்யும் வேலையில் கவனம் செலுத்த வேண்டும்.  ஓய்வு நேரங்களில் பிடித்த பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடுதல், மனதுக்கு பிடித்தவருடன் நேரம் செலவழித்தல் மனதை உற்சாகமாக வைக்கும். பிடித்த விளையாட்டுகளில் ஈடுபடுவதும் உற்சாகமாக வைக்கும். ஒரு நாளில் 2 மணி நேரமாவது பிடித்த வேலை செய்ய நேரம் ஒதுக்க வேண்டும்.

பிறர் சொல்வது எரிச்சலை ஏற்படுத்தினால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவது நல்லது. அங்கேயே நின்றால் தேவையில்லாத வாக்குவாதம் ஏற்பட்டு எரிச்சல் இன்னும் அதிகமாகவே செய்யும். எரிச்சலை ஏற்படுத்தும் விஷயங்களை தவிர்க்கலாம். அலறும் பாட்டு, பிடிக்காத சீரியல் என்றால் அவற்றை மாற்றி விட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தலாம். நமது மனது நம் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்க வேண்டும். நல்ல மனநிலையை நம்மால் மிக எளிதாக உருவாக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com