

காலம் காலமாக மனிதர்கள் ஒருவருக்கொருவர் துரோகம் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். வரலாற்றில் கூட பல துரோக நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. இதைத்தான், ‘கூட இருந்தே குழி பறிப்பது’ என்று சொல்வார்கள். இப்படிப்பட்ட நம்பிக்கை துரோகிகளை நாம் மன்னித்தாலும் இறைவன் மன்னிப்பதில்லை. இப்படிப்பட்ட மனிதர்களை நம்மால் அடையாளம் காண்பதும் அவ்வளவு எளிதான செயல் அல்ல. நாம் பாதிக்கப்பட்ட பின்புதான் அதன் தீவிரத்தை அறிவோம்.
1. கடந்து வர வேண்டியதுதான்: துரோகம் செய்தவர்களை எதிர்கொள்வது அவர்கள் செயல்களின் தீவிரத்தைப் பொறுத்தது. அவர்களை மன்னிப்பதோ, தொடர்பை துண்டிப்பதோ போன்ற முடிவுகளை எடுப்பது அவரவர்களின் விருப்பமாக உள்ளது. வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளக் கூடாத விஷயங்களில் முக்கியமானது நம்பிக்கை துரோகம். நாம் மிகவும் நம்பிய, நம்பிக்கைக்கு உரியவர்களாக எண்ணிய நண்பரோ, பிற உறவுகளோ நமக்கு நம்பிக்கை துரோகம் செய்தால் அதில் இருந்து மீண்டு வருவது என்பது சிறிது சிரமம்தான். இருந்தாலும் அவற்றைக் கடந்து வர வேண்டியது அவசியம்.
2. காரணங்களை தெரிந்து கொள்ளலாம்: முதலில் ஒருவர் செய்த துரோகத்திற்கான காரணம் என்ன என்பதை நிதானமாக யோசித்துப் பார்க்க வேண்டும். எதனால் இது நிகழ்ந்தது என்பதை ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்துப் பார்த்து, அதில் தவறு யாருடையது என்பதை கவனிக்க வேண்டும். எதனால் இந்த துரோகம் நிகழ்ந்தது? அப்படி நடந்து கொண்டதற்கான காரணம் என்ன என்பதை தெளிவாக சிந்தித்து அறிய வேண்டும். காரணம் பிடிபடவில்லை என்றால் துரோகம் செய்தவர்களிடமே நேரடியாக கேட்டுவிடலாம். இதன் மூலம் துரோகம் செய்தவர்களை எதிர்கொள்ள வழியைக் கண்டுபிடிக்க முடியும்.
3. மனம் திறந்து பேசலாம்: துரோகம் செய்தவர்களிடம் நேரில் பேசி நம் உணர்வுகளை வெளிப்படுத்தலாம். அவர்கள் செய்த செயல் நமக்கு எவ்வளவு வேதனையை அளிக்கிறது என்பதை தெரியப்படுத்தலாம். இதன் மூலம் அவர்களின் செயல்களின் விளைவுகளை அவர்கள் புரிந்துகொள்ள உதவும். சில சமயம் இந்த உரையாடல் அவர்கள் தங்களின் செயல்களை மறுபரிசீலனை செய்ய வழிவகுக்கும். ஆனால், இந்த அணுகுமுறை எல்லாமே அவர்களுடனான நம் உறவின் தன்மையை பொறுத்தது.
4. தொடர்பை தூண்டிக்கலாம்: துரோகம் செய்த நபருடன் தொடர்பு வைத்துக்கொள்ளாமல் இருப்பது ஒரு வழியாகும். நமக்கு மிகவும் தீங்கு விளைவிக்கிறது என்று நாம் உணர்ந்தால் அந்த உறவை முற்றிலுமாக முடித்துக் கொள்வது சிறந்தது. இப்படிப்பட்டவர்களை, 'போவான் போவான் ஐயோ என்று போவான்' என பாரதி குறிப்பிடுகிறார். வஞ்சனை புரிவாரோடு இணங்காது பாதகம் செய்பவரைக் கண்டு முகத்தில் உமிழ்ந்து பயம் கொள்ளாது முன்னோர் காட்டிய நல்வழியில் செல்லலாம்.
5. உறவை மறுபரிசீலனை செய்யலாம்: நமக்கு நேர்ந்த துரோகம் ஒருமுறை நடந்ததா அல்லது இது ஒரு தொடர் செயல்முறையா என்பதைப் பொறுத்து முடிவு எடுக்கலாம். ஒருமுறை மட்டுமே நடந்தது என்றால் அதைக் கடந்து வருவது சாத்தியமாகலாம். ஆனால், அது மீண்டும் மீண்டும் நிகழ்ந்தால் அந்த உறவை விட்டு வெளியேறுவது நமக்கு நல்லது.
6. மன்னிப்பு என்னும் தண்டனை: துரோகம் செய்தவர்களை மன்னிப்பது அவர்களுக்கு ஒரு சிறந்த தண்டனையாக அமையும். அத்துடன் அவர்களை மன்னிப்பதால் நம் மனம் அதையே நினைத்து வருத்தப்படாமல் அந்த நினைவுகளைத் தாண்டி வர உதவும். மறப்பதும் மன்னிப்பதும் நம் மன ஆரோக்கியத்தை காக்க உதவும். தேவையற்ற சுமையை தாங்காமல் மனம் லேசாகும்.