
நம் வாழ்க்கையில் ஏற்றம் இறக்கம் இருக்கத் தான் செய்யும். நாளுக்கு நாள் பணம் வரும், போகும். இன்பமும் துன்பமும் கலந்து வரும். உலகிலுள்ள அனைவருமே இந்த ஏற்றத் தாழ்வுகளை சந்திப்பார்கள். இவ்வளவு ஏன்? இயற்கை கூட காலத்திற்கு ஏற்றாற் போல் மழை, வெயில், குளிர் என மாறி மாறி வருகிறது.
ஆனால் இந்த இன்பத்தையும் துன்பத்தையும், நாம், சரிசமமாக எடுத்துக் கொள்வதில்லை. இன்பம் வந்தால் சந்தோஷமாக இருக்கிறோம். சில நேரங்களில் நம் இருக்கும் நிலையைக் கூட மறந்து விடுகின்றோம். துன்பம் வந்தால் சோகத்தில் மூழ்கி விடுகின்றோம். நமக்கு ஏன் இரண்டையும் சரிசமமாக பாரக்கும் ஞானம் வருவதில்லை?
கழுதையை பார்த்திருக்கிறீர்களா? ஒரு வண்ணான் ஒரு கழுதையின் மேல் காலையில் அழுக்குத் துணிகளை ஏற்றிக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றான். துணிகளையெல்லாம் அடித்து துவைத்து பளிச்சென்று ஆக்கினான்.
மறுபடியும் மாலையில் அதே கழுதையின் மேல் துவைத்த துணிகளை எல்லாவற்றையும் ஏற்றிக் கொண்டு வீடு திரும்பினான். இதில் உற்று நோக்க வேண்டிய விஷயம் என்னவென்று கேட்டால், அந்த கழுதையானது காலையில் செல்லும் போது அழுக்குத் துணியை சுமந்து செல்கிறோம் என்று கொஞ்சம் கூட முகம் சுளுக்கவோ அல்லது துக்கப்படவோ இல்லை. அதேப் போல் மாலையில் துவைத்து பளிச்சென இருக்கும் துணிகளை சுமக்கும் போதும் அதன் முகத்தில் சிரிப்போ அல்லது சந்தோஷமோ காணப்படவில்லை. இரண்டு மூட்டைகளையும் ஒரே நிலையில் ஒரே மாதிரியாகத் தான் சுமந்தது.
அதே கழுதையின் மீது நீங்கள் பாறாங்கல்லை ஏற்றினாலும் அது அப்படித் தான் இருக்கும். ஒரு மூட்டை நிறைய வைரத்தை வைத்து ஏற்றினால் கூட அது எந்த விதமான சைகையும் காண்பிக்காது.
அந்த கழுதைக்கு மனதளவில் ஒரே எண்ணம் தான், சாப்பாடு போடும் தன் முதலாளியின் மூட்டையை தினமும் சுமந்து செல்ல வேண்டும் என்பது தான். அந்த மூட்டையில் எது இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் நிதானமாக மெதுவாக மூட்டையை சுமந்து செல்கிறது.
மேலும் கழுதைக்கு எந்தவிதமான மூட்டையைச் சுமந்தாலும் அதனால் ஒரு பயனுமில்லை. வைர மூட்டையை சுமந்தால், அதற்கு பேரும் புகழும் கிடைக்கவா போகிறது? அழுக்கை சுமப்பதால் கெட்ட பெயர் தான் கிடைக்குமா? ஆனாலும், கழுதை எல்லாவற்றையும் சரிசமமாகத் தான் சுமக்கிறது.
ஆகவே நாமும் கழுதையின் உயர்வான பாராட்டபட வேண்டிய இந்த குணத்தை பின்பற்றினால், நிச்சயமாக வாழ்க்கையில் ஏற்படும் மேடு பள்ளங்களை நம்மால் சரி செய்ய முடியும். கழுதையைப் போல் நாமும் பிறந்த நோக்கத்தை மட்டும் மனதில் வைத்து கொண்டு பயணித்தால், வாழ்க்கை அமைதியாக இருக்கும்.
பணமும் பதவியும் வந்து விட்டால் கர்வத்தோடும், ஆணவத்தோடும் இருக்காதீர்கள். அது இல்லை என்றாலும் எப்போதும் அழுதுக் கொண்டே சோகமாகவும் இருக்காதீர்கள். வாழ்க்கையில் ஏற்படும் இன்பத்தையும், துன்பத்தையும், மகிழ்ச்சியையும், சோகத்தையும் சரிசமமாக ஏற்றுக் கொள்ளுங்கள்!