இரசாயன மாம்பழங்களை கண்டுபிடிப்பது எப்படி? நிபுணரின் விளக்கம் இதோ!

Chemical mangoes
Chemical mangoes

உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் பழங்களை அனைவரும் விரும்பி உண்பார்கள். அதிலும் மாம்பழம் என்றால் சொல்லவே வேண்டாம்; வயது வித்தியாசமின்றி அனைவரும் ரசித்து உண்ணும் பழமாச்சே! கோடை காலப் பழங்களில் மக்களிடையே அதிகம் பிரபலமானது மாம்பழமும், தர்பூசணியும் தான். இவ்விரு பழங்களும் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கின்றன.

மாம்பழ சீசன் தற்போது தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் மாம்பழங்களை வாங்கும் போது கொஞ்சம் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் மாம்பழங்களை பழுக்க வைக்க இரசாயனங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கையாக கிடைக்கும் மாம்பழங்களில் சத்துகள் அதிகம் கிடைக்கிறது. அதே சமயம், இரசாயனங்கள் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை உண்ணும் போது, அப்பழங்கள் நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். ஆகவே, மாம்பழங்களை வாங்கும் போது அதிக கவனம் தேவை என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மாம்பழங்களைப் பழுக்க வைப்பதற்கு கால்சியம் கார்பைடு எனும் இரசாயனத்தை அதிகளவில் பயன்படுத்துவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இரசாயனங்கள் அதிகம் நிறைந்த மாம்பழங்களை சாப்பிடும் போது நரம்பு மண்டலப் பிரச்சினை, ஒவ்வாமை மற்றும் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன. இதனால், இரசாயனங்கள் கலந்த மாம்பழங்கள் விற்கப்பட்டு வருகின்றனவா என உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வகையில், சென்னையின் கோயம்பேடு மார்க்கெட்டில் மாம்பழங்களை ஆய்வு செய்த அதிகாரி ஒருவர், இரசாயனங்கள் கலந்துள்ள மாம்பழங்களை பொதுமக்கள் எளிதில் எப்படி கண்டுபிடிக்கலாம் என விளக்கியிருந்தார். அதுகுறித்த விவரங்களை இப்போது காண்போம்‌.

இதையும் படியுங்கள்:
கோபப்படும் கணவரை மிஸ்டர் கூலாக மாற்றும் தந்திரம்!
Chemical mangoes

வாசனை: இரசாயனம் கலந்த மாம்பழங்களில் வாசனையே இருக்காது. அவற்றை நுகர்ந்து பார்த்தாலே மிக எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

சுவை: இயற்கையிலேயே மாம்பழங்கள் மிகுந்த சுவை உடையவை. ஆனால், இரசாயனம் கலந்த மாம்பழத்தில் சுவையே இருக்காது. 

நிறம்: அனைத்து மாம்பழங்களும் ஒரே மாதிரியான நிறத்தில் பழுத்திருக்கும். அதை வைத்துக் கண்டுபிடித்து விடலாம். சில மாம்பழங்கள் ஆங்காங்கே கறுப்பாக வெந்தது போல இருக்கும். இதை வைத்தும் இரசாயனம் கலந்த மாம்பழங்கள் எவை எனக் கண்டுபிடிக்கலாம்.  

தன்மை: மாம்பழம் பார்ப்பதற்கு நன்றாகப் பழுத்தது போலவே இருக்கும். ஆனால், அதனை வெட்டும் போது மாங்காயை வெட்டுவது போலவே கரகரவென இருக்கும். இதனை வைத்தும் கண்டுபிடித்து விடலாம்.  

எளிய செய்முறை: வீட்டுக்கு நீங்கள் சுவை மிகுந்த மாம்பழங்களை வாங்கி வந்தால் சிறிது நேரத்திற்கு அப்பழங்களைத் தண்ணீரில் போட்டு வையுங்கள். இரசாயனம் கலந்த மாம்பழங்கள் தண்ணீரில் மிதக்கும்; இராசாயனம் கலக்காத மாம்பழங்கள் தண்ணீரில் மூழ்கி விடும். இந்த எளிய செய்முறையைக் கொண்டும் கண்டுபிடிக்கலாம்.  

மாம்பழச் சாறு: மாம்பழ ஜூஸ் குடிக்க கடைக்குச் சென்றால், ஏற்கனவே வெட்டி வைத்துள்ள மாம்பழங்களைப் போட்டு ஜூஸ் செய்து கொடுத்தால் குடிக்க வேண்டாம். நீங்களே மாம்பழத்தை தேர்வு செய்து எடுத்துக் கொடுங்கள். அப்போது தான் தரமான மாம்பழ ஜூஸ் உங்களுக்கு கிடைக்கும். 

அதிகாரியின் அறிவுரை மனதில் இருக்கட்டும் மக்களே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com