கோபப்படும் கணவரை மிஸ்டர் கூலாக மாற்றும் தந்திரம்!

Angry husband with wife
Angry husband with wife

ணவன், மனைவி சண்டை என்பது எல்லோர் வீட்டிலும் நடக்கும் ஒரு விஷயம்தான். அதிலும் சில கோபக்கார கணவர்களிடம் மாட்டிக்கொள்ளும் மனைவிமார்கள் படாத பாடுபட வேண்டியது இருக்கும். இதுபோன்ற சின்னச் சின்ன சண்டைகள்தான் பூதாகரமாக வெடித்து திருமண முறிவு வரை சென்று விடுகின்றன.

கணவன், மனைவி என்றால் அப்படித்தான். சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும் என்று ஆறுதல் கூறிக் கொள்ளலாம். வீட்டில் கணவன் அதிகமாக கோபப்பட்டால் மனைவி அந்தக் கோபத்தினை எப்படி சாமர்த்தியமாக சமாளிப்பது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

வார்த்தைகளை கவனியுங்கள்: ‘சண்டையில் கிழியாத சட்டை இல்லை’ என்பது போல், கணவன், மனைவி சண்டைக்குள் மோசமாக, ஒருவரை ஒருவர் அவமதிக்கக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்திக்கொள்வது சர்வ சாதாரணமாகி விட்டது. கணவர் உங்களது வீட்டு வேலைகளை விமர்சித்து, ‘நீ ஒன்றுக்கும் லாயக்கு இல்லை’ என்றால், உடனே ‘நானா... நானா…’ என சந்திரமுகி கங்கா போல் பொங்காதீர்கள். அவர் அப்படிச் சொல்லக் காரணம் என்ன, நமது வேலையில் உள்ள குறைகளை சரி செய்வது எப்படி என யோசியுங்கள்.

அமைதியாய் இருங்கள்: கணவன், மனைவி சண்டையில் இருவரும் கோபமாக கத்தினால் நிலைமை மோசமடையவே செய்யும். எனவே, கணவன் கோபமாக கத்திக்கொண்டிருக்கும்போது, கூடுமான வரையில் சூழ்நிலையை அமைதியாக கடக்கப் பாருங்கள். ஏற்கெனவே கோபத்தில் இருப்பவரிடம் வாதம் செய்வது மேலும் கோபத்தைத் தூண்டும். முதலில் எதிரே இருப்பவரை பேச விடுங்கள். பிறகு மிகவும் அமைதியாக உங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்லுங்கள்.

கோபத் தீயை அணைக்க நகைச்சுவை போதுமே: முரட்டுத்தனமான சண்டை உச்சக்கட்டத்தை எட்டிக்கொண்டிருக்கும்போது நகைச்சுவையாக பேசுவது சில சமயங்களில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல் மாறலாம். ஆனால், சில தவிர்க்க வேண்டிய, மென்மையான விவாதங்களின்போது உங்களுடைய நகைச்சுவை திறனை வெளிக்காட்டி, பார்ட்னருடனான வாக்குவாதத்தை குறைக்கலாம். கோபத்துடன் கத்தி அழுவதை விட, சிரித்த முகத்துடன் செல்லமாக சீண்டி நகைச்சுவையூட்டுவது சிறப்பானது.

வெளிப்படையாகப் பேசுங்கள்: மனதிற்குள் பல விஷயங்களை மறைத்துக்கொண்டு வெளியே வேறு ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு சண்டை கட்டுவது வேலைக்கு ஆகாத காரியம். இந்த தந்திரம் வாழ்க்கை துணையை சமாளிக்க உதவாது. எதுவாக இருந்தாலும் கணவன், மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவது மட்டுமே நல்ல உறவுக்கான அடையாளமாகும். எனவே, வீண் சண்டைகளை தவிர்க்க வாழ்க்கை துணை இருவரும் நல்ல மனநிலையுடன் அமர்ந்து, மனம் திறந்த ஆழமான உரையாடல்களை மேற்கொள்வது நல்லது.

தனிப்பட்ட விஷயமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்: சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கணவன் கோபமாக பேசும் வார்த்தைகள் சில சமயங்களில் அதிக வலியை தரலாம். உடல் ரீதியான வன்முறை உங்கள் உடலில் வடுக்களை விட்டுச்செல்லும். அதே வேளையில், ஒரு அவமதிக்கும் வார்த்தை உங்கள் உள்ளத்தில் வடுக்களை ஏற்படுத்தும். இருப்பினும், அவமானங்களிலிருந்து உங்களைத் திசை திருப்ப முயற்சிக்கவும். அவற்றை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாதீர்கள். சில நேரங்களில் நீங்கள் உங்கள் கணவரின் வார்த்தையை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது மன அமைதியை கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கிய விஷயத்தில் அற்புதங்கள் செய்யும் ஆரஞ்சு ஜூஸ்!
Angry husband with wife

ஓவராக பொறுத்துக்கொள்ளாதீர்கள்: ‘பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’ என்பார்கள். உங்கள் கணவர் அடிக்கடி உங்களை விமர்சிப்பது, உருவம் அல்லது திறமை குறித்து கேலி செய்வது, மிகவும் கடினமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவது போன்ற விஷயங்களை தொடர்ந்து செய்து வந்தால் அதனை ஒரு எல்லைக்கு மேல் பொறுத்துக்கொள்ளாதீர்கள்.

கணவரை தனியாக விடுங்கள்: கணவர் கோபத்துடன் கத்த ஆரம்பித்துவிட்டால் உடனே நீங்களும் பதிலுக்கு கத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இருக்கும் இடத்தை விட்டு நீங்கி அவருக்கான காலத்தையும், தனிமையையும் கொடுத்தால் கோபம் தலைக்கேறியவர் கூட மிஸ்டர் கூலாக மாறிவிடுவார். அந்த நேரத்தில் பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடம் செய்ய உதவுவது, தோட்டத்தில் வேலை செய்யச் செல்வது போன்ற ஏதாவது ஒரு சாக்கு சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறுங்கள். இது உங்கள் துணையின் கோபத்தை குறைக்க உதவும்.

இதையெல்லாம் செய்து பாருங்கள், குட்டி போட்ட  பூனை மாதிரி உங்கள் கணவர் உங்களையே சுத்தி வருவார். அப்புறம் என்ன வழக்கம் போல டூயட்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com