ஒருவரின் நடை, உடை, பாவனையை வைத்து அவர் எப்படிப்பட்ட ஆளுமை உடையவர் என்று தெரிந்து கொள்ளலாம். அதேபோல ஒருவரின் பாத அமைப்பை வைத்து அவர் எப்படிப்பட்ட ஆளுமை உடையவர் என்பதை அறிந்து கொள்ளலாம். நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாத அமைப்பு உள்ளது. ஒரு நபரின் பாத வடிவத்தையும், விரல்களின் நீளத்தையும் வைத்து அவரின் ஆளுமை பற்றித் தெரிந்து கொள்ளலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நான்கு அடிப்படையான கால் வடிவங்கள் உள்ளன. எகிப்திய கால் வடிவம், ரோமானிய கால் வடிவம், கிரேக்க கால் வடிவம் மற்றும் சதுர வடிவம்.
1. எகிப்திய பாத அமைப்பை உடையவர்களின் ஆளுமைத்தன்மை: இவர்களுடைய பெருவிரல் மிகப்பெரியதாகவும் மற்ற நான்கு விரல்களும் 45 டிகிரி கோணத்தில் சாய்வாகவும் இருக்கும். இப்படி இருந்தால் இவர்கள் எகிப்திய கால் வடிவம் உள்ளவர்கள் என்று அறியப்படலாம். இவர்கள் எதிலும் தன்னிச்சையாக இயங்கக் கூடியவர்கள். மிகுந்த மன உறுதி உடையவர்கள். கற்பனைத் திறனும் படைப்பாற்றலும் மிக்கவர்கள். பெரிய லட்சியங்களை கொண்டவர்கள். பிரச்னைகளுக்கு வித்தியாசமான முறையில் தீர்வு காணுவார்கள். பிறரிடம் யோசனை கேட்டாலும் தங்களிடம் இருக்கும் அதீத நம்பிக்கையால் தனக்குத் தோன்றிய முடிவை மட்டுமே எடுப்பார்கள். நேர்மையும் நம்பகத்தன்மையும் இவர்களது அடையாளம். இவர்களிடம் நம்பி எந்த ரகசியத்தையும் சொல்லலாம். மிகப் பத்திரமாக பாதுகாப்பார்கள். லட்சியங்களை அடைவதற்கு கண்ணில் ஒருவித ஒளியுடன் உழைப்பார்கள்.
கலைத்தன்மை உள்ள உள்ளம் படைத்தவர். தன்னிச்சையாக கற்பனையிலும், கனவுலகிலும் ஆழ்ந்து போக விரும்புவார்கள். நிறைய நேரங்களில் எதார்த்தத்தில் இருந்து தப்பிக்க விரும்புவார்கள். அவர்கள் தனிமை விரும்பிகள். தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை ஒரு புதையலைப் போல ரகசியமாக மறைத்து வைப்பார்கள். வாழ்க்கையில் ஏதாவது சாதனை செய்து விட்டால் அதை மன உறுதியுடன் அதை அறிவிப்பார்கள். தங்கள் எடுத்துக் கொண்ட வேலையை மிகவும் உள்ளார்ந்து ரசித்து முழு மனதோடு வேலை செய்யக் கூடியவர்கள். பிறரை மிக எளிதில் வசீகரித்து விடுவார்கள்.
2. ரோமன் கால் வடிவ ஆளுமை: இவர்களின் பெருவிரலும் அடுத்த இரண்டு விரல்களும் ஒரே உயரத்தில் இருக்கும். நான்கு மற்றும் ஐந்தாவது விரல்கள் குட்டையாக இருக்கும். இப்படி இருப்பவர்களுக்கு ரோமானிய கால் அமைப்பு என்று எடுத்துக்கொள்ளலாம். இது பொதுவான கால் அமைப்பு. இவர்கள் பார்ப்பதற்கு கவர்ச்சியான தோற்றம் உடையவர்கள். மிகுந்த தைரியசாலிகள். புதிய அனுபவங்களுக்கு எப்போதும் தயாராகவே இருப்பார்கள். புதிய நபர்களை சந்திக்கவும் புதிய கலாசாரங்களை கண்டறிவதிலும் ஆர்வமுள்ளவர்கள். தனக்கு மிகப் பிடித்தமான பிரியமானவர்களுடன் நேரம் செலவிட விரும்பும் ஆசாமிகள். தன்னுடைய வாழ்க்கைத் துணைக்காக அவர்களின் மகிழ்ச்சிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இவர்களது வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்திருக்கும். பெரும்பான்மையான மக்களுக்கு இந்த மாதிரி கால் அமைப்பு இருக்கும். இவர்கள் பிடிவாதக்காரர்களாகவோ அல்லது சிறிது தலைக்கனம் பிடித்தவர்களாகவோ பிறரால் அறியப்படுவார்கள்.
3. கிரேக்க கால் வடிவ ஆளுமை: பெருவிரலை அடுத்த விரல், மற்ற விரல்களை விட பெரியதாக இருந்தால் கிரேக்க கால் ஆளுமை என்று சொல்லலாம். ஃபிளேம் ஃபுட் ஷேப் அல்லது ஃபயர் ஃபுட் ஷேப் என்று அழைப்பார்கள். இவர்கள் பழைய யோசனைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். புதிய புதிய யோசனைகளையும் கருத்துகளையும் விரும்பும் ஒரு படைப்பாளி. எப்போதும் மிகுந்த உற்சாகமும் ஊக்கமும் நிரம்பி வழியும் மனமுடையவர். பிறரையும் அதேபோல உற்சாகம் கொள்ள வைப்பார்கள். பிறர் தங்கள் கனவுகளை அவர்கள் அடைவதற்கு ஊக்குவிப்பார்கள். அதிக ஆற்றல் உடைய தன்மை உடையவர்கள். விளையாட்டு மற்றும் கேளிக்கைகளில் ஈடுபட விரும்புவார்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இவர்கள் மந்தமாகவோ அல்லது செயல்படாமலோ இருக்கும் தருணம் மிக அரிதாகவே இருக்கும். எனவே, எப்போதும் இவர்கள் சுவாரஸ்யமான மனிதர்களாக பார்க்கப்படுவார்கள். வேடிக்கையான திட்டங்களை வைத்திருப்பார்கள். வேடிக்கையான விஷயங்களில் ஈடுபடுவார்கள். இதனால் இவர்கள் பிறரை வெகு விரைவில் கவர்ந்து விடுவார்கள். ஆனால், இவர்கள் அடிக்கடி மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். முடிவெடுக்க மிகவும் சிரமப்படுவார்கள். இவர்களது உயர் ஆற்றல் அளவுகள் சில நேரங்களில் சோர்வுக்கு வழிவகுக்கும். பிறருடன் ஒத்துப்போகாமல் என் வழி தனி வழி என்கிற மனப்பான்மையுடன் இருப்பார்கள்.
4. சதுர வடிவ பாதம் உள்ளவர்களின் ஆளுமைத்தன்மை: பாதங்கள் சதுர வடிவில் இருந்தால், அதாவது பெருவிரலும் பிற விரல்களும் ஒரேபோல நீளத்தில் இருந்தால், மிகவும் பிராக்டிக்கலான பொறுப்புணர்வு உள்ள, கடுமையாக உழைக்கக்கூடிய ஒரு நபர். சவாலான காலகட்டத்தை மிக சிரத்தையோடு எதிர்கொண்டு அதைப்பற்றி சிந்தித்து அதற்கான தீர்வுகளை கண்டுபிடித்து ஒரு இளைஞனைப் போல உழைப்பார்கள். வரும் வாய்ப்புகளை எப்போதும் தவறவே விட மாட்டார்கள். சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் இருக்கும். ஏராளமான நண்பர்கள் இவர்களைத் தேடி வந்து இணைவார்கள். ஏனென்றால். பிறருக்கு தேடிச் சென்று உதவுவதில் மிகுந்த விருப்பம் உடையவர். ஒவ்வொருவரையும் மரியாதையுடன் நடத்துவார்கள். மிகவும் பணிவுடன் இருப்பார்கள். வாய் பேச்சை விட செயல்கள் இவர்களைப் பற்றி பேசும்.
பொறுமையும் சகிப்புத்தன்மையும் இவர்களது சிறப்பு அணிகலன்கள். இவை இவர்களை ஒரு லட்சியவாதியாக மலர வைக்கும். சத்தம் இல்லாமல் சாதிப்பதில் வல்லவர். தனது திறமையினாலும் ஆளுமைத் தன்மையினாலும் இலக்குகளை மிக எளிதாக முடிக்கும் தன்மை உள்ளவர். இந்தப் பாத அமைப்பை உடையவர்கள் இன்ஜினியராகவோ, ஆசிரியராகவோ, அக்கவுண்டன்ட், வக்கீல் அல்லது பேங்க் பணியாளராக இருப்பார்.