
பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள் மொபைல் போன், டிவி, ஸ்நாக்ஸ் என மிகவும் பிஸியாகி விடுவார்கள். ஆனால் புத்தகத்தை மட்டும் எடுக்க மறுப்பார்கள். பெற்றோர்களுக்கு கவலை அளிக்கும் விஷயமாக இருக்கும் இதற்கு அதாவது குழந்தைகளை திட்டாமல் அடிக்காமல் படிக்க வைக்க செய்ய வேண்டிய வழிகள் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
*நாம் செய்யும் செயல் மகிழ்ச்சி கொடுக்கும் வரை அதில் ஈடுபாடு அதிகரித்திருக்கும். ஆகவே குழந்தைகள் படிக்க உட்காரும்போது அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஏதேனும் சிறிய பரிசுகளை கொடுக்க வேண்டும். பரிசுகள் விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பது இல்லை. அவர்களுக்கு பிடித்ததாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். உதாரணமாக இனிப்பு பண்டங்கள், கலர் பேனா, பென்சில்.
* இதைச் சொல்லி அவர்களை படிக்க உட்கார வைத்தால் அவர்களுக்கு பிடித்த இடங்களுக்கு கூட்டிச் செல்வதாக வாக்களியுங்கள். அதேபோல் வாக்குறுதியை நிறைவேற்றும் போது திரும்பத் திரும்ப நாம் சொல்லாமலேயே குழந்தைகள் படிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
* குழந்தைகளுக்கு கடினமாக படிப்பை சொல்லித்தராமல் கதை போல அவர்கள் ஆர்வமாக கேட்கும் விதத்தில் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
* குழந்தைகள் படிக்கும் போது கண்டிப்பு காட்டாமல் அன்பாக கற்பிக்க முயற்சி செய்யவேண்டும். பாடங்களை புத்தகத்தின் வாயிலாக கற்பிப்பதை தவிர்த்து மொபைல் மற்றும் லேப்டாப் மூலமும் அது தொடர்பான முழுமையான வீடியோக்களோடு கற்பிக்க வேண்டும்.
* அறிவியல், ரைம்ஸ், கணக்கு பாடங்களை கற்பிக்கும்போது வாழ்வியல் நிகழ்ச்சியோடு அதாவது அறிவியலில் உள்ள சிறு சிறு செய்முறைகளை உதாரணம் சொல்லி கற்றுக் கொடுக்கும் போது எளிதாக இருக்கும். உண்மை சம்பவங்களுடன் வரலாற்றை தொடர்பு படுத்தி சொல்லிக்கொடுக்க வரலாற்றின் மீது குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகரிக்கும்.
* குழந்தைகள் கேட்ட கேள்விக்கு தவறாக பதில் கூறினால் தண்டனை கொடுக்காமல் திருத்தி சரியான விளக்கத்தை சொல்ல வேண்டும். ஒவ்வொரு முறை சரியான விடைகளை அளிக்கும் போது குழந்தைகளை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி பாராட்டி சிறு சிறு பரிசுகளை வழங்கலாம்.
* உதாரணமாக சரியாக படித்து சரியாக பதில் சொல்லும் நாட்களில் ஸ்டிக்கர் ஸ்டார்களை கொடுத்து வீட்டின் சுவற்றில் ஒட்டவைத்து எண்ணிக்கையை அதிகரிக்க ஊக்கப்படுத்தலாம்.
* குழந்தைகள் பள்ளியிலும் வீட்டிலும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டு படிப்பதற்கென்று தனி நேரம் விளையாடுவதற்கு தனிநேரம் டிவி பார்ப்பதற்கு தனி நேரம் என நேரத்தை பிரித்து கொடுப்பதால் விரக்தி ஏற்படாமல் குழந்தைகள் படிப்பில் ஆர்வமாக படிப்பார்கள்.
* படிப்பில் குழந்தைகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதற்கு இடம் கொடுக்க வேண்டும். இது அவர்களுக்கு படிப்பின் மீதான ஒரு புரிதலை ஏற்படுத்தி தெளிவை ஏற்படுத்தும்.
ஆரம்ப காலங்களில் மேற்கூறிய விஷயங்களை செய்வது கடினமாக இருந்தாலும் தொடர்ந்து பழகிக்கொள்ள குழந்தைகள் படிப்பில் ஆர்வம் அதிகரிப்பதை கண்கூடாக தெரிந்து கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மேலாக உங்களால் செய்யக்கூடிய வாக்குறுதிகளை மற்றும் குழந்தைகளுக்கு அளியுங்கள்.