
வள்ளல் தன்மையைப் பற்றி நாம் பேசும்போதெல்லாம், நம் நினைவுக்கு வரும் மகாபாரத கர்ணன், முல்லைக்குத் தேர் கொடுத்த மன்னன் பாரி உள்ளிட்ட கடையெழு வள்ளல்கள், கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளல் என்று இந்த வரிசையில் செத்தும் கொடை கொடுத்த சீதக்காதியையும் சொல்வார்கள். செத்தும் கொடை கொடுத்த சீதக்காதியின் பெயர் அப்துல்காதர். இவர் ராமநாதபுரம் சீமையில் வாழ்ந்த வள்ளல். இவரைப் போன்று, செத்தும் தங்களது வாரிசுகளுக்கு கொடையை அள்ளித் தந்த இரண்டு தந்தையர்கள் குறித்த சுவாரஸ்யமான விஷயத்தைப் பார்ப்போம்.
ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் ஆன இந்தக் கதை தெரிய வந்தது 2025ம் வருடம் ஏப்ரல் மாதத்தில். இத்தாலி நாட்டின் அருகில் உள்ள தீவுகளில் ஒன்றான சிசிலியில் வசிக்கும் எக்ஸீயல் ஹினோஜோசா என்ற நபர் தனது வீட்டை சுத்தம் செய்யும்போது, ஒரு பழைய காகிதத்தைக் கண்டார். அது அவரது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியது. அந்தக் காகிதம் 62 வயது வங்கி பாஸ்புக். அது அவரை ஒரே இரவில் கோடீஸ்வரராக மாற்றியது.
ஹினோஜோசாவின் தந்தை 1960களில் ஒரு வங்கியில் 1.4 லட்ச ரூபாயை (இந்திய மதிப்பில்) டெபாசிட் செய்திருந்தார். வீடு வாங்கும் கனவோடு இந்தப் பணத்தை அவர் சேமித்து வைத்திருந்தார். இருப்பினும் அவர் இறந்து விட்டார். குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் இந்த வைப்புத்தொகை பற்றி எதுவும் தெரியாது.
இந்நிலையில், தனது வீட்டில் பழைய பொருட்களை வரிசைப்படுத்தும்போது, ஹினோஜோசா இந்த பாஸ் புக்கைக் கண்டெடுத்தார். முதலில் பாஸ் புக்கில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி நீண்ட காலத்திற்கு முன்பே மூடப்பட்டதால் அது பயனற்றது என்று அவர் நினைத்தார். ஆனால், சிறிய எழுத்துக்களில் எழுதப்பட்ட ஒன்று அவரது கண்ணில் பட்டது. அது, 'மாநில உத்தரவாதம்' என்ற வார்த்தைகள். இதன் பொருள், வங்கி எப்போதாவது தோல்வியடைந்தால், பணத்தைத் திருப்பித் தருவதற்கு அரசாங்கமே பொறுப்பாகும். இது ஹினோஜோசாவுக்கு நம்பிக்கையைத் தந்தது.
அவர் அதிகாரிகளை அணுகி பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டார். முதலில், அரசாங்கம் அவருக்கு எதையும் கொடுக்க மறுத்தது. ஆனால், ஹினோஜோசா தனது முயற்சியை கைவிடவில்லை. அவர் இந்த விஷயத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று சட்டப் போராட்டத்தைத் தொடங்கினார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, நீதிமன்றம் அவருக்கு சாதகமாக தீர்ப்பளித்து, வட்டியுடன் சேர்த்து அந்தத் தொகையைத் திருப்பித் தருமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது.
இறுதியில், அரசாங்கம் அவருக்கு மிகப்பெரிய அளவில் 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க ஒப்புக்கொண்டது. இது இந்திய மதிப்பில் சுமார் 10.27 கோடி ரூபாய் ஆகும்.
இதேபோல், தனது தந்தையின் அறையை சுத்தம் செய்த பெண்ணிற்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்ன தெரியுமா? இதுவும் நடந்தது ஏப்ரல் மாதம் 2025ம் ஆண்டுதான். எப்போதும் போல தனது தந்தையின் அறையை சுத்தம் செய்த பெண்ணிற்கு ஒரு பழைய நாணயம் கிடைத்துள்ளது. இதை வைத்து அவள் கோடீஸ்வரி ஆனதை இனி பார்ப்போம்.
எமிலி கார்ல்சன் எனும் பெண்ணிற்கு, அமெரிக்க ஓஹியோவில் உள்ள தனது மறைந்த தந்தையின் வீட்டை சுத்தம் செய்வது வார இறுதி நாட்களில் ஒரு வழக்கமாக இருந்துள்ளது. இந்தப் பழக்கமே அவளது வாழ்க்கையையே மாற்றும் தருணமாக மாறியது. அந்த அறையில் பழைய பொருட்களை வரிசைப்படுத்தும்போது ஒரு நாணயம் மட்டும் தனித்து நின்றது.
அதை அவள் ஆராய்ந்த சமயத்தில் அவளுக்கு இது 1942ம் ஆண்டு வெளியான ஒரு நிக்கல் என்று தெரியவந்தது. இது சற்று நிறமாற்றம் அடைந்து, அசாதாரண வடிவமைப்பைக் கொண்டிருந்தது. ஆனால், அதுவரை இது ஒரு அதிர்ஷ்ட நாணயம் என்று அவளுக்குத் தெரியாது. அதன் விவரத்தை அறியும் ஆவலில் அவள் இணையத்தை நாடினாள். இரண்டாம் உலகப் போரின்போது, அமெரிக்க நாணயச் சாலை போர் முயற்சிகளுக்காக நிக்கலைப் பாதுகாக்க 35 சதவிகித வெள்ளி கலவையுடன் நிக்கல்களை உற்பத்தி செய்தது.
இதன்படி எமிலி அந்த நாணயத்தை ஒரு சிறப்பு ஏல நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றாள். இதை அவர்கள் ஏலத்தில் விட்டதன் பின்னர் அந்த நாணயத்தின் இறுதி விலை $18,000க்கும் அதிகமாக உயர்ந்தது. ‘இந்த வருமானத்தின் மூலம் மருத்துவ சிகிச்சைக்கான பணம் மற்றும் பல தேவைகள் முடிந்தன’ என அவர் கூறினார். இது தனது தந்தை தனக்குத் தந்த ஆசிர்வாதம் என்பது எமிலியின் கருத்தாக உள்ளது.