

இன்றைய காலகட்டத்தில் டீனேஜர்களை வேலை வாங்குவது என்பது மிகவும் சிரமமான விஷயமாக உள்ளது. படிப்பது, செல்லில் பேசிக்கொண்டே இருப்பது, டிவி பார்ப்பது என்று தங்கள் நேரத்தை செலவழிக்கும் இவர்களை, பொறுப்பாக வீட்டு வேலை செய்ய வைப்பது உண்மையிலேயே பிரம்மபிரயத்தனமாகத்தான் உள்ளது. அவர்களிடம் சொல்லிச் சொல்லி அலுத்துப் போவதை விட, பேசாமல் நாமே செய்து விடலாம் என்ற நிலைக்கு வந்து விடுபவர்களும் உண்டு.
டீனேஜர்களை வீட்டில் வேலை செய்ய ஊக்குவிக்க வேலைகளைப் பிரித்துக் கொடுப்பது, பாராட்டுவது, திறமைகளை வளர்க்க உதவுவது, நம்முடைய எதிர்பார்ப்புகளை அவர்களிடம் தெளிவாகக் கூறுவது போன்று பல முயற்சிகளை எடுத்து அவர்களை சிறிது பொறுப்புள்ளவர்களாக மாற்றலாம்.
பொறுப்புகளை பிரித்தல்: வீட்டு வேலைகளை டீனேஜர்களின் வயது மற்றும் திறமைக்கு ஏற்ப பிரித்துக் கொடுக்கலாம். வாஷிங் மெஷினில் துணி துவைப்பது, உலர்த்துவது, வீட்டில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்வது, சமையல் அறையில் சிறு சிறு உதவிகள் செய்வது, காய்கள் நறுக்கித் தரச் செய்வது போன்ற வேலைகளை இவர்களிடம் ஒதுக்கலாம். அதற்கு ஒரு அட்டவணையை தயாரித்து, அவர்கள் எந்தெந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பிடலாம்.
ஊக்கத்தொகை தந்து ஊக்கப்படுத்தலாம்: நாள் முழுவதும் தொலைபேசி, வீடியோ கேம்ஸ், நண்பருடன் அரட்டை என்று இருப்பவர்களிடம் வீட்டு வேலைகளை கொடுத்து அதை செய்து முடித்தால் அதற்கான ஒரு குறிப்பிட்ட பணப் பரிசுகளை வழங்கலாம். இது அவர்களுக்கு பணத்தின் மதிப்பை உணர்த்துவதுடன் மகிழ்ச்சியுடன் வேலையும் பார்ப்பார்கள். பாக்கெட் மணி கொடுப்பது அவர்களை அடிக்கடி உதவி செய்ய ஊக்குவிக்கும். இது கடின உழைப்பு மற்றும் பணம் சம்பாதிப்பதற்கான மதிப்பையும் கற்றுக்கொள்ள உதவும்.
பாராட்டுதல்: கொடுத்த வேலைகளை செய்து முடித்ததும் அவர்களை மறக்காமல் பாராட்டி விடுவது நல்லது. இது அவர்களை மேலும் செய்வதற்கு ஊக்கம் அளிக்கும். அடுத்த முறை வேலை சொல்லும்பொழுது முகம் சுளிக்காமல் வேலை செய்ய முன்வருவார்கள். தட்டிக் கொடுத்து பாராட்டுவது அவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும்.
திறமைகளை வளர்த்தல்: அவர்களது விருப்பங்களுக்கு ஏற்ப வேலைகளைக் கொடுக்கலாம். உதாரணத்திற்கு சமையலில் ஒருவருக்கு ஆர்வம் இருந்தால் அவர்களை சமைக்கச் சொல்லலாம். வீட்டை சுத்தம் செய்து பராமரிப்பதில் ஆர்வம் இருப்பவர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்கலாம். தோட்ட வேலையில் ஆர்வமாய் இருப்பவர்களை அதைச் செய்ய வழிகாட்டலாம். அத்துடன் அவர்களுக்கு புதிய திறமைகளையும் கற்றுக் கொடுக்கலாம். வீட்டுப் பொருட்களை பழுது பார்ப்பது, சின்னச் சின்ன வெளி வேலைகளைக் கற்றுத் தருவது அவர்கள் சுயமாய் நிற்க உதவும்.
வேலைகளை வேடிக்கையாக்குங்கள்: வேலைகளை வேடிக்கையாகவோ அல்லது முடிந்தவரை மகிழ்ச்சியாகவோ மாற்றப்பாருங்கள். இது டீனேஜர்களை மகிழ்ச்சியுடன் ஈடுபட வைக்கும். இது அவர்கள் பெற்றோராகிய நம்முடன் அதிக நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்பாகவும் அமைக்கலாம். வீட்டு வேலைகளை ஒன்றாகச் சேர்ந்து செய்யும்பொழுது இசையை இயக்கி நடனமாடுவது, ஒருவருக்கொருவர் ஜோக் அடித்துக்கொண்டே வேலை பார்ப்பது, ஒரு டைமரை அமைத்து எவ்வளவு விரைவாக பணிகளைச் செய்கிறார்கள் என்பது போன்ற வழிமுறைகளை பின்பற்றினால் டீனேஜர்கள் செய்யும் வேலையை விரும்பி செய்வார்கள்.