குழந்தைகள் இருக்கிற வீட்டில், ‘குழந்தை சரியாக சாப்பிட மாட்டேங்குது' என்ற ஒரே கவலைதான் அம்மாக்களுக்கும், பாட்டிகளுக்கும் இருக்கும். செல்போன் காட்டி, டி.வியில் அனிமல் படங்கள் காட்டி உணவு ஊட்டி விடுபவர்கள் அதிகம் பேர் உள்ளனர். எதையும் சரியாகப் புரிந்து செய்தால் குழந்தைகளைச் சாப்பிட வைப்பது மிகவும் ஈஸியான விஷயம்தான்! இந்த விஷயத்தில் பெற்றோர்கள் அடிப்படையான ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டால் போதும்.
'பசியில்லாவிட்டால் குழந்தைகள் எப்படி சாப்பிடும்' என்பதை முதலில் உணர வேண்டும். உலகத்தில் மனிதன், 'போதும்' என்று சொல்லும் ஒரே விஷயம் சாப்பாடுதான். பெரியவர்களைப் போல குழந்தைகளுக்கு வேளாவேளைக்கு முறையாகப் பசிக்காது. ஒவ்வொரு நாளிலும் அவர்களின் பசி உணர்வு வித்தியாசமாக இருக்கும்.
'நீ சாப்பிட்டா எனக்கு ஒரு வேலை முடியும்' என அவர்களை நடத்தக் கூடாது. இயல்பாக அவர்களுக்குப் பசிக்கும் வரை காத்திருந்து உணவை ஊட்ட வேண்டும். ஆரோக்கியமான குழந்தை பசி வந்தால் சாப்பிட அடம் பிடிக்காது. 'சாப்பிடு... சாப்பிடு' என்று திணித்து உணவை ஊட்டாதீர்கள். அடித்தும் ஊட்டக்கூடாது. குழந்தைகள் அழுது கொண்டே சாப்பிட்டால் விக்கி தொண்டையில் உணவு மாட்டும்.
குழந்தைகள் முறையாக சாப்பிடும் ஏற்ற சூழலில் உணவு ஊட்டுதல் வேண்டும். வளர்ந்த குழந்தைகளிடம் உணவு தயாராகும் விதத்தைக் கூறியும், காய்கறிகள், கீரைகளில் உள்ள சத்துக்களை எடுத்துக்கூறியும் சாப்பிட வைக்கலாம்.
சாப்பிடும் நேரத்தில் அவர்களுடன் பேசியும், அவர்களுக்குப் பிடித்த உணவையும் கேட்டு, அவர்களுக்கு உணவின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். டைம் டேபிள் போட்டு எதையாவது அவர்களுக்குத் தராதீர்கள். மணிக்கு ஒரு முறை டிரிங்க், சுண்டல், பிஸ்கட் என எதையாவது கொடுக்கக் கூடாது. மூன்று வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் பெரியவர்கள் சாப்பிடும் உப்பு, எண்ணெய், காரம் கலந்த உணவுகளை பெரிதும் விரும்பும்.
குழந்தைகளுக்கு வெரைட்டியாகவும், ஆரோக்கியமான, சுவையானதாகவும் உள்ள உணவை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர். தோசையைக் கூட வித்தியாசமான வடிவத்தில் செய்து கொடுப்பது, புதிதாக ஒரு உணவை மாற்றி செய்து கொடுத்தால் அவர்களுக்குப் பிடித்து விட்டால் சாப்பிட்டு விடுவார்கள்.
வளரும் வயதில்தான் குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவு தேவைப்படும். சுண்டல், பருப்பு, சாதம், முட்டை, பால், மீன் என ஆரோக்கியமான உணவுகளை மாற்றி மாற்றி கொடுத்தால் அவர்களுடைய வளர்ச்சியும் சீராக இருக்கும். எந்த உணவையும் வித்தியாசமாக, ருசியாக சமைத்துக் கொடுத்தால் குழந்தைகள் அவற்றை விரும்பி சாப்பிடுவார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.