கடினமான மனிதர்களையும் நேசிப்பது எப்படி?

How to love difficult people?
How to love difficult people?https://tamilaran.com
Published on

னிதர்களில் பலவிதம் உண்டு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதிசயத்தைக் கொண்டவர்கள். ஒருவர் போல மற்றவர் இல்லை தோற்றத்திலும் குணத்திலும். பொதுவாக, ஒரே ரசனை மற்றும் ஒரே மனப்பான்மை உள்ளவர்கள் ஒருவர் பால் ஒருவர் ஈர்க்கப்படுவது இயல்பு. ஆனால், கடினமான முரட்டுத்தனமான மனிதர்களை கூட நேசிப்பதுதான் மனிதாபிமானம். அது சற்றே கடினமான காரியம் என்றாலும் முயன்றால் முடியும். அது எப்படி என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

வாழ்க்கை பல விசித்திரங்கள் நிறைந்தது. சிலரைப் பார்த்த உடனே மனதுக்குப் பிடித்து விடும். காரணமே தெரியாது. நமது குணத்திற்கு துளியும் சம்பந்தமில்லாத குணாதிசயங்களைக் கொண்ட சிலரைப் பார்த்ததுமே ஒருவிதமான ஈர்ப்பு ஏற்படுவது உண்டு. அவர்கள் நம்மில் இருந்து முற்றிலும் வேறுபட்டவர்களாக இருப்பார்கள். அவர்களது பழக்க வழக்கங்கள் நமக்குப் பிடிக்காமல் கூட இருக்கலாம். அதனால் சில சங்கடங்களும் சண்டைகளும் கூட வரலாம். அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் அவர்களை நேசிப்பது அவசியம் என்கிற கருத்தை மனதில் பதிய வைக்க வேண்டியது அவசியம்.

இதுபோன்ற மனிதர்கள் நாம் பணி புரியும் அலுவலகத்தில் இருக்கலாம். நாம் பயணம் செய்யும் பேருந்து, ரயில் போன்றவற்றில் எதிர்ப்படலாம். நம் அண்டை வீட்டுக்காரர்களாகவோ அல்லது உறவினர்களில் ஒருவராகவோ, ஏன் நம் குடும்பத்தில் ஒருவராகவோ கூட இருக்கலாம். பிறரைத் தவிர்ப்பது போல நமது நெருங்கிய சொந்தங்களையும் குடும்ப உறுப்பினர்களையும் தவிர்ப்பது சாத்தியமல்ல.

ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த உலகில் யாருமே 100 சதவிகிதம் பரிபூரணமானவர்கள் அல்ல. எல்லோருமே அவரவருக்கு உண்டான குறைகளோடுதான் இருக்கிறார்கள். இந்தக் கருத்தை மனதில் வைத்துக்கொண்டு கடினமான, முரட்டுத்தனமான மனிதர்களைப் பார்க்கும்போது அவர்களை வெறுக்கத் தோன்றாது. அவர்களது குணம் எதனால் இப்படி ஆயிற்று என்று சற்றே யோசிக்க வேண்டும்.

மனிதன் கோபக்காரனாகவோ அல்லது முரடனாகவோ இருக்கிறான் என்றால் இயல்பிலேயே ஒரு மனிதன் அப்படி பிறப்பதற்கு சாத்தியமில்லை. வளர்ந்த விதம் சூழ்நிலை, பெற்றோர்கள் அவன் பழகிய மனிதர்கள் இவையெல்லாம்தான் காரணம். ஆனால், அந்த மாதிரி மனிதர்களிடம் கூட நல்ல குணங்கள் நிச்சயமாக இருக்கும். அதை நாம் கூர்ந்து கவனித்தால் அவரிடம் இருக்கும் குறை பெரிதாக நம் கண்ணுக்குத் தெரியாது.

வாழ்வில் அவர்கள் சந்தித்த மோசமான மனிதர்களால்தான் அவர்கள் அந்த மாதிரி முரட்டுத்தனமானவர்களாகவும் கடினமான ஆசாமிகளாகவும் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் அவர் மேல் பரிதாபப்பட வேண்டுமே தவிர, வெறுத்து ஒதுக்குவது எந்த விதத்திலும் நியாயம் அல்ல.

நாமும் நம் வாழ்வில் எல்லா தருணங்களிலும் அன்பானவர்களாக மிகவும் நல்லவர்களாக நடந்து கொள்வது இல்லை. சில சமயங்களில், சில சந்தர்ப்பங்களில் மோசமானவர்களாகவும் கோபக்காரர்களாகவும் பிறரை காயப்படுத்துபவர்களாகவும் இருக்கிறோம். எத்தனையோ பேரை எரிச்சல் ஊட்டி இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். அப்படி இருக்கும்போது நாம் இன்னொருவரை குறை சொல்வது எந்த விதத்திலும் சரியில்லை.

இதையும் படியுங்கள்:
உடலின் இரத்த அளவை அதிகரிக்கும் 7 உணவுப் பொருட்கள் என்னென்ன?
How to love difficult people?

கடுமையான, முரட்டுத்தனமான ஆசாமிகளுக்கு சரியான இணக்கமான சூழ்நிலைகளும் அன்பான மனிதர்களுடன் பழகும் சந்தர்ப்பமும் வாய்த்தால் அவர்களும் அன்பானவர்களாக மாறிவிடுவார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. முயற்சி செய்தால் அவர்களும் நல்லவர்களாக மாறலாம். ஆனால், ஒருவரை நேசிக்க வேண்டும் என்றால் அவரை முழுக்க முழுக்க ஆராய்ந்து அவரை தராசில் வைத்து எடை போட்டு நேசிக்க வேண்டும் என்பதே இல்லை.

முட்கள் நிறைந்த பலாப்பழத்தின் தோலை அகற்றிவிட்டுப் பார்த்தால் உள்ளே மிகுந்த சுவையான பலாச்சுளைகள் இருக்கின்றன. மிக அழகான ரோஜாப் பூவில் கூட சுற்றிலும் முட்கள் இருக்கின்றன. அந்த முட்களையும் கரடு முரடான தோலையும் நாம் லட்சியம் செய்யாமல்தான் அழகிய பூவை சூடிக் கொள்கிறோம், இனிப்பான பலாச்சுளையை உண்கிறோம். அதுபோல குறைகள் உள்ள அந்த மனிதர்களையும் குறைகளை நீக்கிவிட்டு அவர்களை நேசிப்போம். அவர்களது வாழ்வையும் அழகாக்குவோம். அவர்களது உலகமும் அன்பால் சூழப்படட்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com