உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். ஆனால், இன்றைய பரபரப்பான உலகில் உடல் ஆரோக்கியம் குறித்த அக்கறை என்பது பெரும்பாலானவரிடையே மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் நம்முடைய உடலில் ஏற்படக்கூடிய பல நோய்களுக்கு அறிகுறியாக இருப்பது இரத்த பற்றாக்குறைதான். ஆண்களுக்கும், பெண்களுக்கும் வயது வரம்பின்றி மருத்துவர்கள் கூறும் உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்னையாக இருப்பதும் இந்த இரத்த பற்றாக்குறைதான். உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிப்பது மிகவும் சுலபம்தான். ஆம்! அதற்கு இந்த ஏழு உணவுப் பொருட்களை நீங்கள் உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் 7 உணவுப் பொருட்கள்:
1. பீட்ரூட்: இது நமது உடலில் ரத்த விருத்திக்கான சிறந்த உணவுப்பொருளாகும். இதில் இரும்புச் சத்து நிறைந்திருக்கிறது. அதோடு, இதில் உடலுக்குத் தேவையான இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் புரோட்டீன் சக்திகளும் நிறைந்துள்ளது. இதனை நம்முடைய தினசரி உணவோடு எடுத்துக்கொண்டால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, பீட்ரூட் இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஒரு சிறந்த உணவுப் பொருளாகும்.
2. மாதுளம் பழம்: மாதுளையில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்திருகிறது. இரும்புச் சத்தை துரிதமாக உறிஞ்சி நம்முடைய இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் நம்முடைய உடல் ஆரோக்கியம் மேம்படும். அதோடு, மாதுளையை தொடர்ந்து சாப்பிட்டால், மன அழுத்தம் ஏற்படாது. சருமச் சுருக்கம் ஏற்படுவதையும் தடுத்து நிறுத்தும். உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும் உதவுகிறது.
3. அத்திப்பழம்: அத்திப்பழம் நமது உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்குகிறது. அஜீரணக் கோளாறு, நுரையீரலிலுள்ள அடைப்பு, சருமம் சார்ந்த பிரச்னைகள் என அனைத்திற்கும் அத்திப்பழம் மிகச் சிறந்த தீர்வாகும். இதில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. இதனால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
4. சுண்டைக்காய்: சுண்டைக்காயில் உள்ள கசப்புத்தன்மையானது, நம்முடைய வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கும். அதோடு, உடலில் புதிய இரத்தம் ஊறவும் உதவி செய்யும்.
5. பருப்பு வகைகள்: நம்முடைய அன்றாட உணவில் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவாக இருப்பது பருப்பு சார்ந்த உணவுப்பொருட்கள். நிலக்கடலை, பட்டாணி மற்றும் பீன்ஸ் போன்ற பருப்பு வகைகளில் போலிக் அமிலம் அதிகளவில் நிறைந்துள்ளது. இது இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் சிறந்த உணவாகும்.
6. கீரை வகைகள்: கீரை வகைகளில் நம்முடைய உடலுக்குத் தேவையான ஊட்டசத்துக்கள் நிறைந்திருக்கின்றன. உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக் கீரையை நமது உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். அதேசமயம் உடலில் புதிய இரத்தம் உருவாகி, உடல் வலிமையோடு இருப்பதற்கு பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடுவதும் நன்மை பயக்கும். மேலும், புதினா மற்றும் அரைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வர, உடலில் புதிதாக இரத்தம் உருவாகும்.
7. பேரீச்சை: பேரீச்சம் பழத்தில் அதிகமாக இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது. இதனை அன்றாடம் சாப்பிட எடுத்துக்கொள்வது நல்லது. பேரீச்சம் பழம் நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதோடு இதில் இரும்புச் சத்து நிறைந்திருப்பதால் உடலில் இரத்தக் குறைபாடு உள்ளவர்கள் அவசியம் தினமும் பேரீச்சம் பழத்தை எடுத்துக்கொள்வது நலம் பயக்கும்.