
கார் வாங்க வேண்டும் என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான ஆசை. அதுவும் இந்தக் கரண்ட் ட்ரெண்டில் கேக் கட், பட்டாசு வெடிலாம் போட்டு வாடிக்கையாளர்களுக்கு புது கார் வாங்கும் மறக்க முடியாத அனுபவங்களை அந்தந்த ஷோரூம்கள் தருகிறார்கள். ஆனால் இது வாடிக்கையாளர்களுக்கு மறக்கமுடியாத அனுபவமாக மாறுகிறதா?
இல்லை மறக்க வேண்டிய அனுபவமாக இருக்கிறதா?
பிரச்னை எங்கெங்கே எழலாம்?
முதல் பிரச்னையே காரின் விலை நிர்ணயிப்பதில் இருந்து ஆரம்பமாகும். அங்கு பணிபுரியும் நிர்வாகிகள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக முதலில் காரின் அடிப்படை விலையை (Ex- showroom) விளம்பரப்படுத்துவார்கள். ஆனால் அதோடு நின்றுவிடுமா? அதுதான் இல்லை...
கூடுதலாக காரின் காப்பீட்டு பிரீமியங்கள் (insurance premiums), பதிவுக் கட்டணங்கள் (registration fees) மற்றும் காரின் இதர செலவுகள் ( accessory costs), நீட்டிக்கப்பட்ட உத்தரவாதங்கள் (Extended warranty) போன்ற விஷயங்களைச் சேர்த்து ஒட்டுமொத்த செலவை உயர்த்தி, கார் வாங்குபவரின் பட்ஜெட்டை அதிகரிக்கப் பார்ப்பார்கள்.
இங்குதான் ஒரு வாடிக்கையாளராக நாம் சாதுரியமாக செயல்பட வேண்டியிருக்கும். காரணம், காரின் அடிப்படை விலையை (Ex- showroom) தவிர மற்ற செலவுகளை உங்கள் விருப்பத்தின் பெயரில் நீங்களே தேர்வு செய்யலாம். இதற்கு வாடிக்கையாளரான நமக்குத் தேவையான விழிப்புணர்வு இருந்தாலே போதும்.
மற்றொரு விஷயம், காரைப் பற்றிய விவரக்குறிப்புகளைத் (Specifications) தவறாக நாம் புரிந்துகொள்வதாகும். ஷோரூம் நிர்வாகிகள் ஒரு காரின் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள், சிறந்த மைலேஜ் அல்லது அதிநவீன தொழில்நுட்பம் போன்ற பிரீமியம் அம்சங்களை ஆரம்பத்தில் முன்னிலைப்படுத்தலாம் அல்லது சில சமயம் அவர்களிடம் ஏற்கனவே இருக்கும் இருப்புகளை (stocks) உங்களிடம் கொடுக்க முயற்சியும் கொள்ளலாம்.
ஒரு வாடிக்கையாளராக நாம் அங்குதான் விழிப்புடன் இருக்கவேண்டும். பொதுவாக ஒரு கார் விலைக்கேற்றவாறு (Base variant to top variant) வரை அதன் வகைகள் இருக்கும். ஒவ்வொன்றிலும் அதன் விலைக்கேற்றவாறு சில விஷயங்கள் குறைவாகவும், அதிகமாகவும் இருக்கும். இதை வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கேற்றவாறு (Engine, transmission, features) புரிந்துக்கொண்டு தேர்வு செய்து வாங்கவேண்டும். விழிப்புணர்வு மிகவும் அவசியம்.
இந்தச் சவால்களை எதிர்கொள்ள வாடிக்கையாளர்கள் சில நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும். கார் மாதிரிகள் (Car models), விவரக்குறிப்புகள் (Specifications) மற்றும் விலைகளைப் பற்றி ஆன்லைனில் விரிவாக ஆராய வேண்டும். இதோடு காரை பற்றிய மதிப்புரைகள்(Reviews), மற்ற கார் ஒப்பீடுகள் (Comparisons) வழங்கும் தளங்கள் (Online websites) உங்கள் சந்தேகங்களைத் தீர்க்கலாம்.
இறுதியில் சம்பந்தப்பட்ட நிர்வாகியிடம் முன் பேசப்பட்ட அனைத்து விஷயங்களும் உங்கள் காரில் இருக்கிறதா என்பதை கார் டெலிவரி முன்பே (Pre Delivery inspection) (PDI) மூலம் நீங்கள் சோதித்துப் பார்க்கலாம். இதற்கு அனுபவம் வாய்ந்த கார் உரிமையாளர்கள் அல்லது ஆன்லைன் விவரங்களை வைத்து நீங்கள் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஒரு வாடிக்கையாளராக நாம் சம்பாதித்த லாப பணம் மூலம் ஒரு காரை வாங்குகிறோம், அதேபோல்தான் அந்தந்த ஷோரூம்கள் தங்கள் லாபத்திற்காக காரை விற்கிறார்கள். இதில் யாருக்கு அதிக லாபம் என்று பார்ப்பதைவிட யாருக்கும் நஷ்டம் வராமல் பார்த்துக்கொண்டாலே போதும் இந்த கார் வாங்கும் அனுபவம் சுமுகமாக இருக்கும்.