வீட்ட இப்படி மாத்திப்பாருங்க... மனதில் சந்தோஷம் பொங்கும்!

home
home
Published on

காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் நமக்கு நம் மனநிலையில் மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும், நேர்மறை சிந்தனைகளையும் ஏற்படுத்துவதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அது போல் நாம் வீட்டை அலங்கரித்து வைத்திருக்க வேண்டியது மிக மிக அவசியம். அப்படி வைத்திருந்தால் பண்டிகை நாட்களில் சிரமம் இல்லாமல் எப்பொழுதும் போல் வேலைகள் அதிகம் இல்லாமல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியும். அதே போல் நிறைய விருந்தினர்கள் வரும்போதும் அவர்களுடன் சேர்ந்து வெளியில் சென்று வர, அவர்களை கவனிக்க, அவர்களுடன் உரையாட முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.

காம்பவுண்ட் சுவரில் சோற்றுக்கற்றாழை:

வீட்டில் இருக்கும் காம்பவுண்ட் சுவரின் மீது சோற்றுக்கற்றாழை, ஆணை கற்றாழை போன்ற செடிகளை ஒரு தொட்டியில் வைத்து மேலே வைத்து விட்டால் கண் திருஷ்டி வீட்டிற்குள் வராது. அவைகளுக்கு அதிகம் தண்ணீர் விட வேண்டிய அவசியம் இருக்காது. தேவைப்படும் பொழுது விட்டால் போதும். மேலும் அவற்றை மருத்துவத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் சமையலுக்கும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். மற்றவர்கள் கேட்டாலும் அவர்களையே பறித்துக் கொள்ளவும் சொல்லலாம். நமக்கும் வேலை குறைவு.

கற்றாழைகளை பறிக்க பறிக்கத் தான் புதிதாக குருத்து வளரும். சோற்றுக்கற்றாழை நேர்மறை சிந்தனையை தூண்டும் சிறப்புடையது. ஆதலால் இப்படி அதை வளர்ப்பது வீட்டுக்கும் வாசலுக்கும் நேர்மறை சக்தியை தருவதாக அமையும். மேலும் இவற்றை இடம் கிடைக்கும் இடத்தில் எல்லாம் நாட்டு வைத்தாலும் செழித்து வளரும் என்பதில் சந்தேகம் இல்லை.

துளசி:

அதேபோல் வீட்டு வாசலுக்கு இருபுறமும் சிறிதாக பாத்தி அமைத்து அதில் துளசி செடிகளை வைத்து பூஜிக்கலாம். அதிலிருந்து கிடைக்கும் ஆக்சிஜன் நம் சுவாசத்தை சீராக்கும் தன்மை உடையது. மேலும் வாசலுக்கு கோலமிடும் பொழுது அதற்கும் கோலமிட்டு விளக்கேற்ற மங்களகரமாக இருக்கும். செவ்வாய், வெள்ளி தினங்களில் அதன் இலையை பறிக்காமல் மற்ற நாட்களில் உபயோகப்படுத்திக் கொள்வது உத்தமம்.

பூ அலங்காரம்:

திண்ணை போன்ற இடங்களில் ஒரு வெண்கல உருளியில் தண்ணீர் விட்டு, அதில் அன்றலர்ந்த மலர்களை பறித்து மிதக்க விட்டு ஒரு ஓரத்தில் வைத்து விட்டால் வீட்டிற்கு வரும் விருந்தினரை முதலில் வரவேற்கும் நல்ல சிறப்பம்சம் பொருந்தியதாக இருக்கும் அது.

இதையும் படியுங்கள்:
குடும்பத்தில் குறையாத மகிழ்ச்சி பொங்க?
home

அதைப் பார்த்தவுடன் வீட்டிற்கு வருபவர்களின் முகத்தில் ஒரு புத்துணர்ச்சியைக் காணலாம். அதிலிருந்து அவர்களுடன் உரையாட தொடங்கும் பொழுதே நல்ல எண்ணங்கள் வெளிப்பட்டு அழகான வார்த்தைகள் வந்து விழுவதைக் காண முடியும். இது அன்று முழுவதும் நம்மை உற்சாகமாக வைத்திருக்க உதவும்.

வரவேற்பறை:

அங்கு நிறைய ஆணிகள் அடித்து நிறைய படங்களை மாட்டி வைக்காமல் ஒரு சில முக்கியமான போட்டோக்களை மட்டும் வைத்திருப்பது அழகு தரும் விஷயம் ஆகும். அதுபோல் நிறைய ஃபர்னிச்சர்களை அடைத்து வைக்காமல் தேவையான அளவு வைத்திருப்பது சுகாதாரத்தை மேம்படுத்தும்.

வீட்டுக்கு அருகில் கிடைக்கும் அழகான பூக்களில் இருந்து கதிர்களாக கிடைக்கும் சிறு தானிய கதிர்களை வைத்து பூச்செண்டை அழகு படுத்தினால் வீடு புதுமையுடன் சிறக்கும். அவரவர் விருப்பப்படி செய்த செயற்கை பூக்களால் அலங்கரித்தாலும் அது நம் கலையார்வத்தை மேம்படுத்தி காட்டும்.

பூஜை அறை தருமே உற்சாகம்:

பூஜை அறையில் எப்பொழுதும் நல்ல மணம் கமழும்படியான வாசனை திரவியங்களை வைத்திருப்பது மனதிற்கு இனிமை தரும் விஷயமாகும். அன்றன்று விதவிதமான கோலமிட்டு எளிமையான முறையில் சீரான திரியிட்டு, நிதானமாக எரியும் காமாட்சி விளக்கைப் பார்க்கும் பொழுது மனதிற்குள் புத்தொளி வீசும். பூஜை சாமான்கள் அனைத்தும் மின்னும் படியாக சுத்தம் செய்து வைத்திருப்பது நம் உள்ளம் சுத்தமாக இருப்பதை குறிக்கும் நல்ல அம்சம். சுவாமி படங்களில் சூடியிருக்கும் மலர்களே நாம் அன்றன்று ஆண்டவருடன் பேசிய சிறப்பை குறிப்பதாக நம் உள்ளம் மகிழும். மன மகிழ்ச்சிக்கு இதை விட வேறு என்ன வேண்டும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் நம்மை எதிர்த்துப் பேசுவதற்கான காரணங்கள் என்ன தெரியுமா?
home

நூலகம்:

நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை அழகாக அடுக்கி அவற்றின் இடையில் பூச்சி, புழு அண்டாதவாறு புகையிலை, வசம்பு போன்றவற்றை வைத்து இருப்பது புத்தகங்களை பூச்சரிப்பில் இருந்து தப்பிக்க வைக்கும் வழி ஆகும். மேலும் புத்தகத்தை எடுத்து படிப்பதற்கு தகுந்தவாறு அதனை எடுக்க வசதியாக எழுத்தாளரின் பெயர்களும் தெரியும்படி வைத்திருப்பது இன்னும் சிறப்பு சேர்க்கும் அம்சமாகும்.

கிச்சன்:

கிச்சனில் மாத்திரம் அங்குள்ள பொருட்களை அடிக்கடி மாற்றி வைக்காமல் வைத்திருப்பது அவசரமாக சமைக்கும் பொழுது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தாமல் இருக்கும். சிங்க்கில் அதிக பாத்திரங்களை போட்டு வைக்காமல் இருப்பது கிச்சனின் அழகை மேம்படுத்தி காட்டும். கரப்பான், பல்லி போன்றவை தலை எடுக்காமல் பாதுகாப்பது அதன் சுகாதாரத்தை மேம்படுத்தும் சிறப்பு செயல்களாகும். எல்லாத்துக்கும் மேலாக தேவையான அளவு பாத்திரங்களை மட்டும் பயன்படுத்துவது தண்ணீர் அதிகம் செலவழிக்காமல் சிக்கனத்தை கடைபிடிக்கும் வழியாகும். விருந்தினர் அதிகம் வந்தால் அதற்கான பாத்திரங்களை பயன்படுத்திவிட்டு திரும்பவும் உள்ளே வைத்து விட்டால் எப்பொழுதும் புதியது போலவே பாத்திரங்கள் இருப்பதுடன் பரிமாறும் பொழுது அச்சப்படாமல் இருக்கலாம். அவர்களுடன் உரையாடி ஊர் சுற்றி பார்க்க நிறைய நேரமும் கிடைக்கும். பேசிக்கொண்டே வேலைகளை செய்வதும் சிரமம் இல்லாமல் இருக்கும். அவர்களாகவும் உதவி செய்ய வருவார்கள்.

குளியலறை:

குளியலறை கழிப்பறை போன்றவற்றை நம்பகமான நிறுவனத்துக்கு போன் செய்து அதற்கான சுத்தம் செய்யும் ஆட்களை, அடையாள அட்டையுடன் அழைத்து சுத்தம் செய்து வைத்துக் கொண்டால் நாம் அன்றாடம் சுத்தம் செய்வது எளிமையாக இருக்கும். அவற்றில் ஒரு எக்ஸாஸ்ட் பேனை வைத்திருப்பது துர்வாடை இல்லாமல் சுகாதாரத்தை பேணி காக்கும். விருந்தினர்களுக்காக சில பேஸ்ட், பிரஷ், சோப்பு, சேவிங் கிரீம் போன்றவற்றை தனியாக ஒரு பாக்கெட் போட்டு வைத்து விடவும். இதனால் காலை நேரம் சிரமம் இல்லாமல் செல்லும். இல்லை என்று எதையும் சொல்லாத படிக்கும் இருக்கும். இதுவும் ஒரு நேர்மறை ஆற்றலை அளிக்கும்.

இப்படி வீட்டை அழகாக, சுத்தமாக நிர்வகித்தால் அதுவே நல்ல வாஸ்து ஆகவும், வீட்டை அழகுற எடுத்துக்காட்டுவதாகவும், மனதிற்கு இன்பம் பயப்பதாகவும், நேர்மறை ஆற்றலை எல்லாவற்றிலும் பதிய வைத்ததாகவும் அமைந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் பிரிட்ஜ் மின்சார பில்லை குறைக்க ஸ்மார்ட் வழிகள் - வருஷத்துக்கு ₹5,000-7,000 மிச்சம்!
home

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com