
தற்போதைய சூழலில் பணிக்குச் செல்லும் பலருக்கும் உள்ள பொதுவான பிரச்னை, 'பர்ன் அவுட்' (burnout). இதற்கான காரணம் ஒருவர் தனது சக்திக்கு மீறிய வேலைப் பளுவை சுமக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் சூழ்நிலை உருவாவதுதான் எனலாம். இதை நாம் வெற்றிகரமாகக் கையாள்வதற்கு என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றலாம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை, சிறந்த முறையில் செய்து முடித்து பளுவை சமாளிக்க, முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, செய்து முடிக்க வேண்டிய வேலைகளைப் பட்டியலிடுவது. அதில் முக்கிமான வேலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செய்து முடிங்க. வேலைக்கிடையே சிறிது இடைவெளி எடுத்து, உடலை ஸ்ட்ரெட்ச் பண்ணவும், கொஞ்சம் ஸ்நாக்ஸ் எடுத்துக் கொள்ளவும் மறக்காதீங்க.
மற்ற வேலைகளை நீங்கள் ஒருவரே தனித்து நின்று செய்யும்போது உங்களுக்கு ஸ்ட்ரெஸ் உண்டாகும் என்று தோன்றினால், உங்கள் மேனேஜரிடம் உங்கள் வேலையின் தன்மை பற்றியும், அதை நிறைவாக செய்து முடிக்கத் தேவைப்படும் கடின உழைப்பு, நேரம் போன்ற முக்கிய அம்சங்களையும் விரிவாக எடுத்துரையுங்கள். அப்போது உங்களுக்குள் உண்டாகும் ஸ்ட்ரெஸ்ஸின் அளவையும் கூறுங்கள். உதவி தேவைப்பட்டால், வேறொரு நபரை உங்களுடன் சேர்த்துக் கொள்ளவும். சில வேலைகளை பிறரிடம் பிரித்துக் கொடுத்து செய்து முடிக்கவும். இதற்காக மேனேஜரிடம் அனுமதி கேட்கத் தயங்காதீங்க.
உங்கள் வேலைக்காக உங்களால் செலவிட முடியும் என்கின்ற நேரத்தை சரியாகக் கணக்கிட்டு அதற்கு ஒரு எல்லைக் கோட்டை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அதை சரியாகப் பின்பற்றி அதன் பிறகு ஓய்வெடுக்கவும். உங்கள் தனிப்பட்ட வேலைகளைக் கவனிக்கவும் நேரம் ஒதுக்கிக்கொள்ளுங்கள். உங்களின் சொந்த மற்றும் குடும்பத்தாரின் நலனுக்காகவும் நேரம் ஒதுக்குங்க.
ஒரு நாளில் 7 மணி நேரம் தூங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் உடல், மனம் இரண்டும் ஸ்ட்ரெஸ் இல்லாது புத்துணர்ச்சி பெற்று, மறுபடியும் அலுவலக வேலையை ஆரம்பிக்கத் தயாராகிவிடும்.
பொழுது போக்கு, உடற்பயிற்சி, குடும்பத்தாருடன் நேரம் செலவிடுதல் மற்றும் உங்களுக்கு மன மகிழ்ச்சி தரக்கூடிய செயல்களில் ஈடுபடுவதற்குத் தேவையான நேரத்தை ஒதுக்கிக்கொள்ளவும் தயங்காதீர்கள்.
மெடிட்டேஷன், மூச்சுப்பயிற்சி மற்றும் யோகா போன்ற ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கவும் மன அமைதி தரவும் உதவக்கூடிய பயிற்சி மையங்கள் சென்று பயிற்சி பெற்று அதை தினசரி வாழ்வின் ஓர் அங்கமாக சேர்த்து ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கொள்ளுங்கள்.
உடலில் சக்தியின் அளவு அதிகரிக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள மறக்காதீங்க. உங்கள் பிரச்னைகளை, சக ஊழியர்களிடம் பகிர்ந்து கொண்டு அவர்களின் ஆலோசனைகளையும் கேட்டுப் பெறலாம். உங்கள் திறமை வெளிப்படும் வகையில் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையையும் கையாளலாம்.