துணிகளை பாதுகாக்க..!

cloths
Cloths
Published on

1. மழைக்காலத்தில் பீரோவுக்குள் ஈரக்காற்று இருப்பதால் ஆடைகள் மொரமொரப்பு இழந்து தொய்ந்து போய் விடும். இதைத்தவிர்க்க, பத்து சாக்பீஸ்களை ஒரு நூலில் கட்டி, பீரோவினுள் தொங்க விடுங்கள். இவை பீரோவிலுள்ள காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி விடும்.

2. துணிகளைக் காயப்போட கம்பியால் ஆன கொடிகளைத் தவிர்த்து, கயிற்றால் ஆன கொடியைப் பயன்படுத்தவும். இச்செய்கையால் கம்பியில் மாட்டித் துணிகள் கிழியாமலும், துருக்கறை உடையில் படியாமலும் இருக்கும்.

3. அடர்ந்த நிறமுள்ள துணிகளுக்கு கஞ்சி போடும்போது, துணியின் உள்பக்கத்தைத் திருப்பி கஞ்சியில் நனைக்கவும். இப்படி செய்தால் துணிகளின் வெளிப்பக்கத்தில் கஞ்சி போட்ட அடையாளம் கோடுகளாகவோ, கறைகளாகவோ தெரியாமல் இருக்கும்.

4. துணிகளை பிரஷ் செய்வதற்கு கடைகளில் விற்கும் தேங்காய் நார்களால் செய்யப்பட்ட பிரஷ்களை பயன்படுத்தினால் சட்டைக் காலர் மற்றும் புடவை ஃபால்ஸ் சீக்கிரம் கிழிந்து பாழாகாது.

5. துணி வைக்கும் அலமாரிகளில் சின்னச் சின்ன ஜிப் லாக் பைகளில் கற்பூரவில்லைகளைப் போட்டு, மூடாமல் அப்படியே துணிகளின் அடியில் வைக்கவும். ரசாயன உருண்டைகள் வைப்பதை விட பாதுகாப்பாக இருப்பதுடன் பூச்சிகள் வராமலும் இருக்கும்.

6. வெயில் நாட்களில் ஈரத்துணிகளை வீட்டின் உட்புறத்திலேயே கொடி கட்டி உலர்த்தலாம். வீடு ஜில்லென்று இருப்பதுடன் துணிகளும் வெளுத்துப் போகாது.

7. பழுப்பேறிய வெள்ளைத் துணிகளை முழு வெண்மையாக்க, எலுமிச்சை சாறு விட்டு, அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு அலசி உலர்த்துங்கள்.

8. துணிகளில் எண்ணெய்க்கறை, கிரீஸ் அல்லது தாரோ பட்டுவிட்டால், அவற்றை துவைக்கும் போது, சில சொட்டு நீலகிரித் தைலம் விட்டுத் துவைத்தால் கறைகள் போய்விடும்.

9. வெள்ளைத்துணிகள் அதிகம் பளிச்சிட வேண்டுமென்பதற்காக வாஷிங் சோப்புகளில் ப்ளீச்சிங் மற்றும் வாஷிங் சோடா நிறைய கலந்திருப்பார்கள். அதனால் துணிகள் சீக்கிரமே நைந்து போகலாம். எனவே சோப்பை குறைவாக பயன்படுத்தவும். வண்ணத்துணிகளுக்கு இன்னும் குறைவாகவே உபயோகிக்கவும்.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் துவைத்த துணி காயவில்லையா? இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!
cloths

10. உடையில் எண்ணெய் கொட்டிவிட்டால் உடனே அந்த இடத்தில் விபூதியைப் பூசி ஒரு மணி நேரம் வைத்திருந்து, அதன் பிறகு சோப்புப் போட்டு அலசினால் எண்ணெய்க் கறை இருக்கிற இடம் தெரியாமல் மறைந்து விடும்.

11. எம்ப்ராய்டரி, குந்தன் ஸ்டோன்ஸ், பிரிண்ட், க்ளாஸ் வைத்த சுடிதார்களை அயர்ன் செய்யும்போது சுடிதாரின் உள்பக்கம் மேல்புறம் இருக்குமாறு அயர்ன் செய்ய வேண்டும். அப்போதுதான் டிசைனர் சுடிதார்கள் கேடு வராமல் இருக்கும்.

12. 'காக்கி' நிறம் மற்றும் 'நீல' நிற சீருடைகளில் படியும் எண்ணெய்ப் பிசுக்கு நீங்க ஒரு ஷாம்பு பாக்கெட் எடுத்து, சிறிதளவு நீரில் விட்டு நன்றாக நுரை வரும்படி அடித்து, எண்ணெய்க் கறை படிந்த துணிகளை ஒரு அரை மணி நேரம் ஊறவைத்து எடுத்து பின் டிட்டர்ஜென்ட் சோப் பயன்படுத்தித் துவைத்து அலசினால், எண்ணெய்க் கறை தேடினாலும் கிடைக்காது.

இதையும் படியுங்கள்:
ஃப்ரண்ட்-லோட் Vs டாப்-லோட் வாஷிங் மெஷின்: எது சிறந்தது?
cloths

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com